Primary tabs
-
5.2 உளவியல் அணுகுமுறை
இலக்கிய உருவாக்கத்திற்கும் இலக்கியத்தில் படைக்கப்படும் மனிதர்களின் செயல்பாட்டிற்கும் பண்புகளுக்கும் மனத்தின் வேறுபட்ட உணர்வுகளே அடிப்படைக் காரணிகளாக உள்ளன. இந்த அடிப்படையில் ஓர் இலக்கியத்தை அணுகுவதை உளவியல் அணுகுமுறை (Psychological Approach) என்று கூறுகிறோம். இவ் அணுகுமுறை, பல புதிய செய்திகளையும் விளக்கங்களையும் தந்திருக்கிறது என்ற முறையில், மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
- உள்ளத்தின் உணர்வு
மனித உள்ளத்தின் உணர்வே எல்லா அறிவியல்களுக்கும் கலைகளுக்கும் கருவறையாக விளங்குகிறது. ஆழ்மனத்தில் படிந்து கிடக்கும் உணர்வுகளே இவ்வுலகில் ஆக்கங்களையும் அழிவுகளையும் தருகின்றன. இது உளவியலாளர்களின் முடிபு. மேலும் உள்ளம் என்பது ஒரே வகையான இயக்கமும் ஒரே வகையான தன்மையும் கொண்டதல்ல.
- உளவியலாளரும் உளவியலும்
தனியொரு துறையாக உளவியல் வளர்வதற்கு முன்பு, அவல நாடகங்களை (Tragedy) உருவாக்கியவர்களே உளவியல் அறிஞர்களாக இருந்திருக்கிறார்கள். பார்வைகளைத் தம்வசப்படுத்துவதிலும், தாம் படைக்கும் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் சென்று சேர்ப்பதிலும் உளவியல் உத்திகளை இவர்கள் கையாண்டார்கள். ஆனால் இன்று உளவியல் என்பது அறிவியல் மற்றும் மருத்துவவியலில் மட்டுமல்லாமல் அழகியலிலும், கலை இலக்கியத்திலும், திறனாய்விலும் தன்னுடைய செயல்பாட்டுத் தளத்தினைப் பரப்பி நிற்கின்றது.
கலை இலக்கியத்தில் உளவியல், மனித வாழ்வின் அனுபவங்களையும் மனித நடத்தையையும் அவற்றின் வெளிப்பாடாகவும், உந்துதலாகவும் உள்ள மனத்தையும் ஆழமாகவும், அழகாகவும் சித்தரிக்க முயலுகிறது. இலக்கியத்தின் இந்தப் பண்பினைப் புரிந்து கொள்வது தேர்ந்த வாசகனுக்கும் விமர்சகனுக்கும் அவசியமாகிறது.
- வாசகனும் உளவியலும்
இலக்கியத்தைப் புரிந்து கொள்ளவும் படைப்பின் வழியாகத் தனி மனித மற்றும் சமூக மனத்தினைப் புரிந்து கொள்ளவும், படைப்பினை மேன்மேலும் சுவையூட்டக் கூடியதாக மாற்றவும் எனப் பல கோணங்களில் வைத்துப் பார்ப்பதற்கு உளவியல் துணை நிற்கிறது. சமூக மனிதனின் பலமும் பலவீனமும் இதன் மூலம் அடையாளப்படலாம். இவற்றுள் வாசகர் உளவியல் என்பதும் கவனிக்க வேண்டிய பகுதியாகும். ஒவ்வொரு வாசகரும் தத்தமக்குரிய மனநிலைகளிலிருந்து கலை இலக்கியங்களைப் பார்ப்பவர்கள். எனவே, அவர்களின் ரசனையும் பார்வையும் அவரவரின் உணர்வு நிலைகளோடு தொடர்புடையவை.
உளவியல் திறனாய்வு என்பது,(1)இலக்கியத்தில் சித்திரிக்கப்படும் கதை மாந்தர்களின் மனங்களையும் நடத்தைகளையும் அறியவும்,(2)படைப்பாளியின் மனவெளிப்பாடுகளை அறியவும்,(3)படிக்கிற வாசகர்தம் மனவுணர்களுக்கு உகந்தவாறு அமைகிற கூறுகளை அறியவும்,என முக்கியமாக மூன்று அடிப்படைகளில் செயல்படுகிறது.
(1)இலக்கியப் படைப்பாக்கத்தின் வழிமுறைகளை உளவியல் நிலையில் புலப்படுத்துதல்.(2)படைப்பாளியின் உள்ளத்து நிலையையும் அதற்குரிய காரணங்களையும் அறியக் கொண்டு வருதல். அதாவது படைப்பாளியின் சுய வரலாற்றைப் படைப்பில் காணுதல்.(3)குறிப்பிட்ட இலக்கியத்தில் காணப் பெறுகின்ற கதை மாந்தர்களின் உணர்வுகளையும், ெயல்களையும் விளக்குதல்.(4)இலக்கியத்தில் தொல்படிமம் முக்கிய இடம் பெறுகிறது என்பதைக் கருதுகோளாகக் கொண்டு அதன் உருவாக்கத்தைப் புலப்படுத்துதல்.(5)குறிப்பிட்ட படைப்பிலுள்ள தனிச் சிறப்பான சொற்களையும் தொடர்களையும் மற்றும் சிறப்பான உத்திமுறைகளையும் உள்ளத்து உணர்வுப் பிரதிபலிப்புக்களாக இனங்கண்டு விளக்குதல்.(6)வாசகரின் உள்ளத்தில் இலக்கியம் ஏற்படுத்துகிற உறவையும் தாக்கத்தையும் காணுதல்.இவற்றின் மூலம் இலக்கியத்தின் உள்ளர்த்தங்களையும் ஆழங்களையும் உளவியல் வெளிப்பாடுகளாக இத்திறனாய்வு பார்க்கிறது.
சிக்மண்ட் ஃபிராயிட்உளவியல் திறனாய்வில், பகுப்புமுறை உளவியலே (Psychoanalysis) பெரிதும் போற்றப்படுகிறது; பின்பற்றப்படுகிறது. இதனை ஆராய்ந்து சொன்னவர் சிக்மண்ட் ஃபிராயிட் (Sigmund Freud) எனும் ஜெர்மானிய மருத்துவர். இவர், மருத்துவத் துறையில் கண்டறிந்ததைக் கலை இலக்கியத்திலும் பொருத்திப் பார்த்தார்.
- உள்ளத்தின் அடுக்கு நிலை
உள்ளம் (Psyche or mind) என்பதனை அடுக்கு நிலையில் இருப்பதாக ஃபிராயிட் சொன்னார். வெளிப்படையாகத் தெரியவரும் நிலையில் உள்ள நனவுடை மனம் (Conscious mind); வெளிப்படையாகத் தெரியாத, ஆனால் மனித செயல்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் காரணமாக உள்ள நனவிலி மனம் (unconscious mind), அதற்கும் உள்ளே ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும் அடிமனம் (Subconscious mind) என்று மூன்று அடுக்குகள் உண்டு என்கிறார். அடிமனம் தன் முனைப்புக் (Ego) கொண்டது; பாலியல் இணைவிழைச்சு (Sexual instincts) மற்றும் சமூக அளவில் தடுக்கப்பட்ட விலக்குகள் (Taboos) முதலியவற்றால் ஆனது என்று விளக்குகிறார்.
இலக்கியத்தை இதன் அடிப்படையில் ஃபிராய்டும் அவர் வழி வந்தோரும் விளக்குகின்றனர். முக்கியமாக ஓடிபஸ் மன உணர்வு (Oedipus complex) என்பது பாலியல் தொடர்பான அடிமனம் பற்றியது. இளம் பால பருவத்தில் ஓர் ஆண் மகனுக்குத் தன் தாய் மீதான பாலியல் உணர்வு நிலை இருப்பதாகவும், அதன் காரணமாகத் தன் தந்தை மீது ஒரு வகையான பொல்லாப்பு உணர்வு இருப்பதாவும் ஃபிராய்டு வருணிக்கிறார். இது, பலரால் மறுக்கப்பட்டாலும், உளவியல் திறனாய்வாளர்கள் மத்தியில் இதற்குச் செல்வாக்கு உண்டு. ஃபிராய்டின் இந்தக் கருத்து நிலையை ஜெயகாந்தன், ரிஷிமூலங்கள் என்ற குறுநாவலாகப் படைக்கிறார். ஃபிராய்டின் செல்வாக்கை இன்றையப் படைப்பாளிகள் பலரிடம், பலவகைகளில் பார்க்க முடியும். ஃபிராய்டு கனவுகளுக்குத் தருகிற ஆழ்மனம் சார்ந்த விளக்கங்கள், பல எழுத்தாளர்களிடம் தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றன .
இலக்கியத்தில் வெளிப்படுகின்ற கதை மாந்தர்களின் அனுபவங்களும் உணர்வுகளும் அவ்விலக்கியத்தைப் படைத்த படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பிரதிபலிப்பனவே என்பதைக் கருதுகோளாகக் கொண்டது, தன் வரலாற்றுத் திறனாய்வு (Biographical criticism) ஆகும். இதனையும் ஓர் ஆய்வுமுறையாகச் சொன்னவர் ஃபிராய்டே ஆவார். இதனைப் பின்பற்றிப் பல திறனாய்வாளர்கள் திறனாய்வு செய்துள்ளனர்.
- படைப்பாளன் வாழ்வும் படைப்பும்
சார்லஸ் டிக்கன்ஸ்அமெரிக்கத் திறனாய்வாளர் எட்மண்ட் வில்சன் என்பவர் சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) நாவல்களில் காணப்படும் கற்பனைகளுக்கும் மன உணர்வுகளுக்கும் உரிய காரணங்களாக அந்தப் படைப்பாளியின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். டிக்கன்சின் இளமைக் காலத்தில் அவருடைய தந்தை கடனுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டார் அதன் காரணமாக அவருடைய மகன் டிக்கன்ஸ் சிறு வயதிலேயே பட்டறையொன்றில் கடின வேலைக்குச் சென்றார். அங்கே அவமானங்களும் சிரமங்களும் பட்டார். இதன் காரணமாகக் கட்டாயமாக வேலைக்கு அனுப்பிய அம்மாவின் மீது அவருக்குக் கோபமும் மனத்தாங்கலும் உண்டு. இந்த வாழ்க்கை அனுபவங்கள் அமிழ்ந்து, அவருடைய நாவல்களின் குறிப்பிட்ட உணர்வுகளுக்கும் போக்குகளுக்கும் மறைமுகமான காரணங்களாக அமைகின்றன என்கிறார் வில்சன். தமிழில் ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களின் படைப்புகளிலுள்ள அவர்களுடைய சுயவாழ்க்கை அனுபவ வெளிப்பாடுகளையும் இதே போல ஆராயலாம்.
ஜெயகாந்தன்- சூழல்
மேலும், குறிப்பிட்ட இலக்கியத்தினுடைய குறிப்பிட்ட சூழலின் தேவை, கதை மாந்தர்களின் செயல்கள், அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மற்றும் படைப்பாளியின் நோக்கம் இவை காரணமாகச் சொல்லுகின்ற பாணியிலும் வடிவமைப்பிலும் வேறுபாடுகள் காணப்படும் என்பதனையும் இவ்அணுகுமுறை கவனத்திற் கொள்கிறது.
-