தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொல்படிமவியல் அணுகுமுறை

    • 5.3 தொல்படிமவியல் அணுகுமுறை

      உளவியல் அணுகுமுறையோடு நெருங்கிய தொடர்பு கொண்டது தொல்படிமவியல் அணுகுமுறை ஆகும். தொன்மை வரலாற்று வழியாக மனிதனின் உணர்வுகள், அவன் மூதாதையின் பண்புகளோடு உறைந்து கிடக்கின்றன. மனிதன் படைக்கின்ற கலை இலக்கியம் இத்தகைய உணர்வுநிலைகளை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, கலவைநிலையில் சித்திரிக்கின்றது. எனவே, இலக்கியத்தை ஆராய்கின்றவன், உறைந்து கிடக்கும் இந்த உணர்வு நிலைகளையும் உள் அர்த்தங்களையும் கண்டறிய வேண்டியவனாக ஆகிறான். இதை விளக்குவதே தொல்படிமவியல் அணுகுமுறை (Archetypal criticism) எனப்படும்.

      5.3.1 தொல்படிமவியல் அணுகுமுறை - வரையறை
          தொல்படிமம் என்பது வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு மனித குலத்தின் மூளையில் பதிந்த பண்பாட்டுத் தடயங்களின் சாரமாகவும், மரபு வழியாக வரும் கூட்டு நனவிலி (Collective unconsciousness) மனத்தின் வடிவமாகவும், மனித குலம் அதன் வெவ்வேறு காலகட்டங்களைச் சந்தித்த வகை மாதிரியான எண்ணற்ற அனுபவங்களின் உளவியல் நிலையிலான எச்சமாகவும் கொள்ளப்படுகிறது.
          சமூகக் குழுக்களின்     பொதுவான குறியீடுகளாகத் தொன்மங்களாக, சடங்குகளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மூலவடிவம், (Arche-type) தொடர்ந்து வருவதாகத் தொல்படிமம் வருணிக்கப்படுகிறது. இனம் சார்ந்த நினைவுகளின் (Racial memory) சார்பினைப் பெற்றதாகவும், தொல்படிமம் விளக்கப்படுகிறது. ஒரு சமூகத்தின் பண்பாட்டுத் தளங்களோடு பிணைந்தும் அவற்றின் தாண்டவியலாத கட்டமைப்புகளுடனும் இது அமைந்திருக்கின்றதாக வருணிக்கப்படுகிறது. தொல்படிமவியல் அணுகுமுறை இலக்கியத்தில் தொல்படிமங்களைத் தேடுகிறது; அவற்றை விளக்குகின்றது. இலக்கியத்தில் காணப்படுகின்ற சொற்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் தொல்படிமங்களின் அடிப்படையில் விளக்கம் தருகிறது.
      • மூதாதையின் அறிவும் உணர்வும்
          மனிதன் எவ்வளவுதான் நவநாகரிகங்களில் சிக்குண்டாலும் அவனுடைய மனத்தின் ஆழத்தில் அவனே அறியாத நிலையில் வரலாற்றுக்கு முந்திய அவனுடைய தூரத்து மூதாதையின் அறிவும், உணர்வும் நினைவுகளும் சாராம்சமாகப் படிந்து உறைந்து கிடக்கின்றன. அடிப்படையில் இவை பகுத்தறிய முடியாத் தன்மையுடையன. எனவே, இவை சாராம்சமான அடிப்படை வடிவங்களாகும். பின்னைய மனிதன் அவற்றைத் தொன்மங்களாக இங்ஙனம் ஏதாயினுமானதாக வெளியிடுகிறான். இப்பின்னணிக்குள்ளிருந்தே தொல்படிமவியலை அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது. இந்தத் தொல்படிமவியல் அணுகுமுறை அண்மைக் காலத்தில் கணிசமான கவனத்தைப் பெற்று வருகிறது.
      5.3.2 தொன்மம்
          தொன்மை, பழமை மற்றும் காலத்தால் முந்தியது எனும் பொருளினைக் கொண்டது தொன்மம் (Myth) எனும் சொல். இச்சொல் பழமையானது. தொல்படிமம் மற்றும் தொன்மம் எனும் கருத்துநிலையின் முக்கியமான பண்பு, அது காலங்கடந்த ஒரு பொதுமையைக் குறிக்கிறது என்பதாகும். இதன் மூலம் இது குறிப்பிட்ட காலம் எனும் வரையறைக்குள் அடங்காதது என்பது அறிய வருகிறது.
          மனிதப் பண்பாட்டின் தகவமைப்புகளைப் பெற்றுவிட்ட குறியீடுகள், சடங்குகள், எச்சங்கள் இன்று தொன்ம-தொல்படிம நிலைகளைப் பெற்றிருக்கின்றன. இவற்றிலிருந்து மனிதக் குழுமத்தின் உணர்வு நிலைகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்.
      • தொன்மங்களின் நிலை
       
       
       
      கண்ணகி
      சீதை
          தொன்மங்களாகப் படிந்துவிட்ட வாழ்வுச் சாரங்களில் தாய்மை என்பது முக்கியமானது. இன்றைய நாவல்களிலும் திரைப்படங்களிலும் இதனைப் பல வடிவங்களில் நிறையப் பார்க்க முடியும். அதுபோல, கற்பு என்பது கண்ணகி, சீதை, மண்டோதரி முதலியவர்களைக்     கொண்டும் இன்றைய காலத்து நாவல் பாத்திரங்களைக் கொண்டும் அறியலாம். தொன்மங்கள், புராண வடிவங்களையும் பெறுகின்றன. மேலைநாட்டு மரபில், சாத்தான் (Satan) என்பவன் கேடு, தீங்கு என்ற உணர்வுநிலைகளின் தொன்மம் ஆகும். பிறன்மனை நோக்கிய பேதைமைக்கு இராவணனும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கநெறிக்கு இராமனும் தொன்மங்களாக ஆகியிருக்கிறார்கள். இத்தகைய நிலை, இன்றைய படைப்புகளிலும் நிறைய உண்டு.
      5.3.3 சில தொல்படிமங்கள்
          இலக்கியங்களிலும், நாட்டார் கதைகளிலும், புராணங்களிலும், சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் மட்டுமல்லாது இன்றையத் திரைப்படங்களிலும் தொல்படிமங்களும் அவற்றின் வெளிப்பாடுகளும் நிரம்பிக் கிடக்கின்றன. எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய சித்திரிப்புகள் குறிப்பிட்ட வகையான கொடை குறித்த தொல்படிமமாக அமைகிறதைக் காணலாம். பாரி, பேகன் முதலிய கடையெழு வள்ளல்கள் பற்றிய சித்திரங்களின் பாணியில் இவை அமைந்துள்ளன.
      • தொல்படிமமும் திரைப்படமும்
                  கர்ணன்       துரியோதனன்
          ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த ‘தளபதி’ என்ற திரைப்படம், கர்ணன் கதையைப் புதிய சமூகச் சூழல்களில் தொல்படிமமாகச் சித்திரிக்கின்றது. கர்ணன்-துரியோதனன்     (ரஜினிகாந்தும் மம்முட்டியும்) தருமன், பாஞ்சாலி, குந்தி முதலிய தொல்படிமங்கள், இன்றைச் சமூக மனிதர்களாக அதிலே சித்திரிக்கப்பட்டுள்ளனர். திரைப்படத்தில் தொல்படிமம் உருவாக்கத்திற்கு ஒரு சிறப்பான உதாரணம் இது.
      • தொல்படிமங்களின் அடையாளங்கள்
          தலைமுறை,     தலைமுறையாகப் படிந்து கிடக்கும் தொல்படிமங்கள் இவ்வாறு தொடர்ந்து பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. இவற்றிற்கு இலச்சினையாகப் புராண, வரலாற்று மாந்தர்களின் பெயர்கள் நினைவு கொள்ளப்படுகின்றன. கோவலன், கண்ணகி, மாதவி, இராமன், சீதை, வீடணன், அகலிகை என இப்படிப்     பலர் தொல்படிமங்களுக்கு அடையாளங்களாக நிற்கிறார்கள்.
      • தொல்படிமங்களின் சிறப்பு
          தொன்மம் அல்லது தொல்படிமவியலை ஒரு குறியீடாகவும், அடையாளமாகவும் கொண்டு பண்பாட்டினை - சமூக மதிப்பினை அறிந்து கொள்கிறோம். பெயர்கள், அவற்றில் சாராம்சமாகப் படிந்துள்ள கருத்து நிலைகள் தொன்றுதொட்டு நமது வாழ்க்கை நிகழ்வுகளில் கலந்தும் திரிந்தும் எதிர்க்கப்பட்டும் வருவதை இதன்மூலம் அறிய முடிகிறது. ஓர் இனத்தின் பண்பாட்டினை, அதன் தேடலை அதன் இருப்பை, அதன் சிந்தனை முறையை இயற்கையோடும் மனித உறவுகளோடும் அவர்கள் கொண்டிருந்த உறவைக் காண்பதற்குரியனவாகத் தொல்படிமங்கள் ஆராய்ச்சிக்கு இடம் தருகின்றன.
புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 11:04:32(இந்திய நேரம்)