தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1:3-காப்பியப் பாகுபாடு

  • 1.3 காப்பியப் பாகுபாடு

    தண்டியலங்காரம் காப்பியத்தைப் பெருங்காப்பியம், காப்பியம் என்று இரு வகைப்படுத்துகிறது என்பதை முன்னர்க் கண்டோம். பன்னிரு பாட்டியல் தலை, இடை, கடை என்று மூன்று வகையாகப் பிரித்துக் கூறுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்தினையும் ஐம்பெருங் காப்பியங்கள் என்று வழங்குவது மரபாக இருந்து வருகிறது. வடமொழியில் பஞ்சமகாகாவியம் என்று வழங்குவதைப் பின்பற்றி இவ்வாறு தமிழிலும் வழங்கும் போக்கு அமைந்தது எனலாம்.

    1.3.1 ஐம்பெருங் காப்பியம்

    ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கு, முதன்முதலில் நன்னூல் மயிலைநாதர் உரையில் காணப்படுகிறது. கந்தப்ப தேசிகர் இயற்றிய திருத்தணிகை உலாவில் இவ்வைந்து காப்பியங்களையும் ஐம்பெருங்காப்பியங்கள் என்று முதன் முதலில் தெளிவாகக் கூறியுள்ளார். சூளாமணி, நீலகேசி, யசோதர    காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம் ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்று குறிக்கப்படுகின்றன.

    1.3.2 தன்மை அடிப்படை

    மேலை நாட்டினர் காப்பியத்தின் தன்மைகளுக்கு ஏற்பப் பின்வருமாறு வகைப்படுத்துவர். அவை,

    1) தொல்பழங்காலக் காப்பியம் (PRIMITIVE EPIC)
    2) கலைக் காப்பியம் அல்லது இலக்கியக் காப்பியம்
    (ART EPIC (or) LITERARY EPIC) என்பன.

    1) தொடக்கக் காலக் காப்பியங்களில் வீரதீரச்    செயல்களே முக்கியத்துவமும் தலைமைச் சிறப்பும் பெற்றன. இந்த வீர உணர்வில் மிகுந்து விளங்கிய காப்பியங்களையே தொல்பழங்காலக் காப்பியம் என்பர். இவ்வகைக் காப்பியங்களுக்கு எடுத்துக்காட்டு: ஹோமரின் இலியாது, ஒதீஸி.

    2) ஒரு தனிப் பெருவீரனைச் சுற்றி மட்டும் அமையாமல், கதை நிகழ்வுகளுக்கு ஓர் இலட்சியக் கனவு நோக்கத்தையும் இணைத்துக் காட்டப்பட்டிருப்பது கலை அல்லது இலக்கியக் காப்பியம் என்பர். மிகப் பழைய காப்பியங்களைத் தனியே பிரித்து விட்டால், மற்றவை இவ்வகையில் அடங்கும்.

    1.3.3 பாடுபொருள் அடிப்படை

    இவை தவிரப் புலவர்கள் பாடக் கூடிய பாடுபொருள் அடிப்படையிலும் (சுவை, வரலாறு, பக்தி முதலியன) பாகுபாடு செய்யலாம் என்பது கீழே விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.


    பெயர்
    ஆங்கிலப் பெயர்
    நகைச்சுவைக் காப்பியம்
    Burlesque Epic
    நிகழ்ச்சிக் காப்பியம்
    Epic of Action
    வீர சாகசக் கற்பனைக்
    காப்பியம்
    Romantic Epic
    வீரக் காப்பியம்
    Heroic Epic
    அங்கதப் பொருண்மைக்
    காப்பியம்
    Satire Epic
    உருவக நிலைக் காப்பியம்
    Symbolic Epic
    எள்ளல் (கேலி) காப்பியம்
    Mock Epic
    செந்நடைக் காப்பியம்
    Classical Epic
    வரலாற்றுக் காப்பியம்
    Historical Epic
    தேசியக் காப்பியம்
    National Epic
    புராணக் காப்பியம்
    Mythological Epic
    சமயக் காப்பியம்
    Religious Epic
    அறக் காப்பியம்
    Moral Epic
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 17:23:22(இந்திய நேரம்)