தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1:4-காப்பிய உறுப்புகள்

  • 1.4 காப்பிய உறுப்புகள்

    முன்பு காப்பிய இலக்கணம் என்னும் பகுதியில் நாம் கண்ட காப்பிய உறுப்புகள் சிலவற்றை இங்குக் காணலாம்.

    1.4.1 கதை அமைப்பு

    காப்பியத்தின் உயிர் நாடியான கதை, காலத்திற்கும், காப்பிய ஆசிரியனின் நோக்கத்திற்கும் ஏற்ப அமையும். வாய்மொழிக் கதைகள், பழமரபுக் கதைகள், வரலாற்று நிகழ்ச்சிகள், கற்பனையில் எழுந்தவை என்பனவற்றுள் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் காப்பியத்தின் கதை அமையும்.

    1.4.2 தலைவன்

    மக்களில் நற்பண்பு மிக்கவர்களைக் காப்பியத் தலைவர்களாகக் கொள்ளும் மரபு உள்ளது. தன்னேரில்லாத் தலைவன் என்பவன் பேராண்மை, எல்லாரையும் தன்வயப்படுத்தும் தகுதி, உயர்பண்புடைமை, விழுமிய கல்வியறிவு, அனைவரையும் ஈர்க்கும் தோற்றப் பொலிவு, அனைவராலும் விரும்பப்படும் இயல்பு, தான்வாழும் காலத்திலேயே தன்னைப் பற்றிய வரலாறு தோன்றக் காரணமாக இருத்தல் போன்ற தலைமைப் பண்புகள் உடையவனாய் இருத்தல் வேண்டும் எனலாம்.

    1.4.3 பாத்திரப் படைப்பு

    பாத்திரப் படைப்புத்தான், காப்பியங்களுக்கு உயிர்த் தன்மையாகும். காப்பியத்தில் எல்லாப் பாத்திரங்களும் ஒரே அளவில் ஒரே சீராகப் பங்கு பெறுவதில்லை. காப்பியக் கதையின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை, கதை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாத்திரங்களை முதன்மைப் பாத்திரங்கள் எனலாம். ஒன்றிரண்டு செயல்களோடு காப்பிய அரங்கிலிருந்து மறைகின்ற பாத்திரங்களைத் துணைப் பாத்திரங்கள் எனலாம். மேலும் எதிர்நிலைப் பாத்திரங்களும் உண்டு.

    1.4.4 கிளைக் கதைகள்

    கிளைக் கதைகள், மையக் கதைக்குத் துணையாக அமையும். இவை இன்றியும் கதை நிகழலாம் என்பதால் இவை முதன்மை இடம் பெறுவதில்லை, கிளைநிலை மட்டுமே பெறும். காப்பியத்தில் சுவை கூட்டுவதற்காக, தேவைக்கு ஏற்பக் கிளைக் கதைகள் மிகுந்தும் குறைந்தும் அமையும்.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    தண்டியலங்காரம் காப்பியத்தை எவ்வாறு வகைப்படுத்துகிறது?
    2.
    பாவிகம் என்பது யாது?
    3.
    ஐம்பெருங் காப்பியங்கள் என்பவை யாவை?
    4.
    காவியம் என்று பெயர் பெறும் இலக்கியங்களைக் கூறுக.
    5.
    தன்னேரில்லாத் தலைவனின் பண்புகள் யாவை?
    6.
    காப்பியத்தில் கதையமைப்பு எவ்வாறு அமைய வேண்டும்?
    7.
    காப்பிய மரபுகள் சிலவற்றைக் கூறுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 17:34:50(இந்திய நேரம்)