Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
6. திண்ணனாருக்கு, கண்ணப்பர் எனப் பெயர் வரக் காரணம் என்ன?
சிவ கோசரியாருக்கு, இறைவன் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, தமது வலக்கண்ணில் இருந்து உதிரம் பெருகச் செய்தார். இதனைக் கண்ட திண்ணனார் தாம் செய்வது அறியாமல் திகைத்தார். பின்னர் துடைத்தாலும், பச்சிலையிட்டாலும் நிற்காதது கண்டு வருந்தி நின்றார். அப்போது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி நினைவுக்கு வர, தன் கண்ணையே அம்பினால் அகழ்ந்தெடுத்து அப்பினார். உதிரம் நின்றது. அது கண்டு மகிழ்ந்தாடினார். உடனே, சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். உடனே அஞ்சாமல் இடது கண்ணையும் அப்ப, காளத்தி நாதரின் திருக்கண்ணில் தமது இடக்கால் விரலை ஊன்றி, அம்பினால் இடக்கண்ணைத் தோண்ட முனைந்தார், குடுமித் தேவர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் தடுத்தருளினார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தன் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார், கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.