தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மொழிபெயர்ப்பு

  • 1.1 மொழிபெயர்ப்பு

    நம்முடைய தீர்க்கதரிசிப் பாவலன் பாரதியின்,

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்
                                (பாரதியார் பாடல்கள் - 21)

    சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்
    செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
                                (பாரதியார் பாடல்கள் - 22)

    போன்றகருத்துகள் மொழிபெயர்ப்பின் இலக்குக்கு வழிகாட்டுகின்றன. பல்திசைக் கலை, இலக்கிய, அரசியல் கருத்துகள் மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாகும். மொழி பெயர்ப்பு செம்மையாகவும், எளிமையாகவும், தெளிவாகவும் அமைய, அனுபவம் என்னும் ‘பட்டறிவு’ கட்டாயம் தேவை. எந்த ஒரு செய்தியையும் எளிதில் புரிய வைக்க வேண்டும் என்ற அகத்தெழுச்சி அதி முக்கியமாகக் கருதப்படவேண்டும். மொழிபெயர்ப்புக்குக் கருத்துப் பரிமாற்றம் மொழி மாற்று முறை அடிப்படையில் அமைந்தது. ஒரு மொழியில் ஏற்படும் புதுமைகளை வேற்று மொழிக்குக் கொண்டுவரும் அரிய பெரிய கலையே மொழிபெயர்ப்புக்கலை ஆகும். மொழிபெயர்ப்புச் செய்யப்படும் பொழுது மூலமொழி சார்ந்துள்ள சமுதாயப் பின்னணியை எண்ணிப்பார்ப்பது தேவையானது. அறிவு வளர்ச்சிக்குக் கல்வி முக்கியம், கல்வி மேம்பாட்டிற்கு மொழிப்பயிற்சி பெருந்துணையாகும். அந்தத் துணை, மொழிபெயர்ப்பு முயற்சியிலும் துளிர்த்து நிற்பதை நாம் அறியலாம். இன்று மொழியியல், அறிவியல், இலக்கியம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தனிக்கவனம் செலுத்தப் படுதலின் இன்றியமையாமையை உணர்ந்து வருகிறோம். பிறநாட்டுத் தொழில் நுட்பங்கள் நம்வரை எட்டத் துணை நிற்கும் மொழி பெயர்ப்பு, நமது கூர்த்த அறிவுக் கூறுகள் வேற்று நாட்டவர்க்கும் எட்டுவதில் பயன்பட வேண்டும் என்று விழைவது இக்கலை மேம்பாட்டின் ஒரு பகுதியாக அமைகிறது.

    1.1.1 மொழிபெயர்ப்பின் தோற்றம்

    உலக இலக்கிய வரலாற்றில் இந்த மொழிபெயர்ப்புக் கலை என்று தொடங்கியது என்ற புள்ளி விவரத்தை அறுதியிட்டு உரைக்க இயலவில்லை. கி.மு. 250 இல் விவியஸ் அன்டோனிக்ஸ் என்பவர் கிரேக்கத்திலிருந்து இலத்தீனில் மொழிபெயர்த்த ஹோமரின் ‘ஒடிசியை’ முன்னோடியாகக் கொள்ளலாம். இலத்தீன் மொழியும் கிரேக்க மொழிக்கு இணையான பழம் பெரும் மொழி என்ற உண்மை வேரூன்ற இது துணையாகிறது. இலத்தீன் அறிஞர்கள்தாம் உலகில் பன்மொழி அறிந்தோரில் முதலிடம் பெற்றிருந்தனர் என உய்த்துணர முடிகிறது. காலப் போக்கில் இலத்தீனிலிருந்து பல மொழிபெயர்ப்புகள் தோன்றின. இந்நிலை அரசியல் மாற்றத்தால் நிகழ்ந்ததென வரலாறு விளம்புகிறது. இதற்குப்பின் 8ஆம் நூற்றாண்டில் அரபுக் கல்வி வளர்ச்சி பெருகத் தொடங்கிய சூழலில், அரேபியத் தலைநகரான பாக்தாத்தில் மொழிபெயர்ப்பு மையம் ஒன்று உருவானது. இந்த மையத்தில் அரபு மொழி நூல்கள் பல இலத்தீன் மொழிக்கு மாற்றப் பெற்றன. தொடர்ந்து 12ஆம் நூற்றாண்டு மொழிபெயர்ப்பின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உரமிட்ட காலமாக அமைகிறது. இருபதாம் நூற்றாண்டு மொழிபெயர்ப்பியலின் உயர்வளர்ச்சிக் காலம் எனறால் மிகையாகாது.

    1.1.2 வளர்ச்சி

    கி.மு 250-இல் வித்திடப்பட்ட இந்த மொழிபெயர்ப்புக் கலை இன்று ஆல் போல் தழைத்து இதழியல், வானொலி, தொலைக்காட்சி, விளம்பரம் போன்ற பல துறைகளில் அருகுபோல் வேரூன்றி வீறுநடை போடுவதே அதன் பெருநிலை வளர்ச்சிக்குச் சான்றாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:32:07(இந்திய நேரம்)