Primary tabs
1.2 மொழிபெயர்ப்பின் தேவை
ஒரு மொழியில் பயன்படுத்தப்படுகின்ற மொழிஅமைப்பு, அம்மொழியோடு தொடர்புடைய கலை, இலக்கியம், மக்கள் பண்பாடு, சமுதாய, சமய அரசியல் நிலைகளைத் தெளிவுறக் கண்டுணர மொழிபெயர்ப்பு இன்றியமையாதது ஆகின்றது. கருத்துப் பரிமாற்றத்திற்கும் இது ஒரு தலைசிறந்த ஊடகமாக அமைகிறது. வரலாறு, சட்டம், அறிவியல், நிதித்துறை, ஆட்சித்துறைகளில் மொழிபெயர்ப்பு ஒரு தனி உயர்நிலையைப் பெற்றிருப்பது போற்றுதற்குரிய ஒன்றே.
1.2.1 கருத்துப் பரிமாற்றம்
ஒரு தனிமனித உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் எவ்வளவுதான் மெய்ப்பாடு புலப்படுத்தினாலும் மொழிப் பயன்பாட்டால் பெறும் புலப்பாடு மிகுதிதான். ஒரு மனிதன் பெற்ற அதே உணர்வை அடுத்தவனும் பெறும் நிலைக்கு உணர்த்துவது மொழிதான். இங்ஙனமே, ஒரு மொழியின் உள்ளீட்டை அம்மொழி உணர்வோடு புரிந்து கொள்ளத் துணை நிற்பது சிறந்த மொழியாக்கம்தான். விலங்கு, பறவைகளின் ஓசை ஒரு மொழியில் சுட்டப்பெற்றால், மொழிபெயர்க்கப்படும் மொழியிலும் வந்து படிப்போனுக்கு முன்னர் ஒரு தோற்றம் உருவாக வேண்டும். ‘He kicked the bucket’ என்ற தொடரை மொழிபெயர்க்க வேண்டுமென்றால் ‘அவன் வாளியை உதைத்தான்’ என்று எளிதாக, நேர்மொழி பெயர்ப்பாகச் சொல்லி விடலாம். அந்த மொழிபெயர்ப்பில் மூலமொழியின் உட்கருத்து வெளிப்படவில்லை. ‘அவன் இயற்கை எய்தினான்’ என்பதே இதனுடைய உட்பொருள் சார் மொழிபெயர்ப்பு ஆகும். ‘Don’t wash your dirty linen in the public’ என்ற ஆங்கிலப் பழமொழியைத் தமிழுக்குக் கொண்டு வருவதாக வைத்துக் கொள்வோம். ‘உங்கள் அழுக்கு ஆடைகளைப் பொது இடங்களில் துவைக்க வேண்டாம்’ என்பதுதான் அதன் நேரான பொருள். ஆனால் அதற்கான உள்ளீட்டோடு தமிழாக்கம் செய்யும்போது ‘உங்கள் ஊழல்களைப் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டாம்’ என்று வரும். இங்ஙனம் மொழியின் கருத்து அமைப்பைப் புலப்படுத்தும் வகையில் மொழிபெயர்ப்பு அமைதல் வேண்டும். அப்படிப் பெயர்த்தால் மொழி உயிரோட்டம் பெறுவதுடன் கருத்தும் தெளிவு பெறும்.