தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.2 மொழிபெயர்ப்பின் தன்மை

  • 5.2 மொழிபெயர்ப்பின் தன்மை

    மொழிபெயர்ப்பு ஒரு கலையா? அறிவியலா? என்பது பலரிடையே விவாதத்திற்கு உரிய ஒரு பொருளாக இருந்து வருவதைக் காண்கிறோம். மொழிபெயர்ப்பின் உள்ளடக்கம் கலைத்துறை சார்ந்ததாகவும் இருக்கும், அறிவியல் துறை சார்ந்ததாகவும் இருக்கும். அதுபோலவே அதன் செய்முறை கூடக் கலைத்தன்மை உடையதாகவும், அறிவியல் பண்பு உடையதாகவும் விளங்குகிறது. கலையும், அறிவியலும் பொதுமையாகச் சந்திக்கும் இடங்களை நம்மில் பலரும் காணத் தவறிவிடுகிறோம். கலைத்தன்மை கலவாத அறிவியல் உரையோ, அறிவியல் நெறிபடாத கலைத்துறையோ இல்லை. அறிவியல் தொடர்பான கருத்துப் படிவங்களையும், செயல் முறைகளையும் வெளியிடுவதில் மொழியின் கலைத்தன்மை கொலுவிருப்பதைப் பற்பல இடங்களிலும் காண முடியும். உருவகங்களும் சந்தங்களும் அறிவியல் மொழிக்கு முற்றிலும் அப்பாற்பட்டவையல்ல என்று பேராசிரியர் சேதுமணி மணியன் தனது ‘மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும் உத்திகளும்’ என்ற நூலில் விளக்குகிறார்.

    5.2.1 கவிதை மொழிபெயர்ப்பு

    முன்னரே கூறியபடி மொழிபெயர்ப்பின் பயன் என்பதே தெளிவாகப் புரிந்து கொள்வதுதான். மனிதனை மனிதனாக நிறுத்தவல்ல அறநூல்கள் தமிழ்மொழியில் பல உள்ளன. அவற்றை உலகறியச் செய்ய வைப்பது நம் கடமையாகும்.

    அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி
    எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
    உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
    பருவத்தால் அன்றிப் பழா

    என்பது ஒளவையாரின் மூதுரைப் பாடல்.

    “Whatever efforts men may put forth
    except at the due season no act will fruictify
    Just as the many branched and grown trees
    do not yield fruit except in season

    இம்மொழிபெயர்ப்பு தமிழில் கவிநயம் சுமப்பது போல ஆங்கிலத்தில் அமைவதாகத் தெரியவில்லை. உரைநடைமுறை போல் ஆங்கிலத்தில் அமைவதால் தமிழில் கூறியுள்ள உயிரோட்டத்தை அப்படியே ஆங்கிலத்தில் பெற இயலவில்லையோ என்ற ஐயம் எழுகிறது.

    மழை கூட ஒருநாளில் தேனாகலாம்
    மணல்கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
    ஆனாலும் அவையாவும் நீயாகுமோ?
    அம்மா வென்றழைக் கின்றசேயாகுமோ?
    விண்மீனும் கண்ணே உன்கண்ணாகுமோ?
    விளையாடும் கிளிஉன்றன் மொழிபேசுமா?
    கண்ணாடி உனைப்போலக் கதை கூறுமா? இரு
    கைவீசி உலகாளும் மகனாகுமா?
    மணமாலை தனைச்சூடி உறவாடுவார் - மனம்
    மாறாமல் பலகாலம் விளையாடுவார்.
    ஒருகாலத் தமிழ்நாடு இதுதானடா - இதை
    உன்காலத் தமிழ்நாடு அறியாதடா.

    என்ற கண்ணதாசன் பாடலை,

    Rain too may become honey one day
    Even the sand as gold within a few days
    But equal thee can these all
    Or like the suckling babbling as ''Ma''
    Will the twinkling stars turn as thy blue eyes.
    Or else the parrot imitate thy speech?
    Can the mirror narrate fables like thee
    Or is anything like thee who reigns the world,
    waving thy hands!
    Enjoyed the lovers in nuptial garlands then
    Going on chatting and playing, O! Child!
    Once this was thy land of Tamils; of which
    Aware not you may be; sleep, please, hearing
    my lullaby

    என்று ‘தெசினி’ அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இதில் ஒரு கவிதை ஓட்டத்தை நம்மால் காண முடிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-07-2018 15:57:18(இந்திய நேரம்)