Primary tabs
-
4.0 பாட முன்னுரை
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் சொல்லாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தொடக்க காலத்தில் சமஸ்கிருதம், ஆங்கிலச் சொற்களைத் தமிழ் வடிவில் எழுதுதல் வழக்காயிருந்தது. பின்னர், தமிழில் சொல்லாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஓரளவு ஆங்கிலம் அறிந்த தமிழ்ப் புலவர்களும் ஓரளவு தமிழ் அறிந்த பிறதுறை வல்லுநர்களும் தத்தம் மனப்போக்கினுக்கேற்பச் சொல்லாக்கத்தில் ஈடுபட்டனர். சொல்லாக்கத்தினை அறிவியல் அடிப்படையில் அணுகியவர்கள் எண்ணிக்கை குறைவு. சொல்லாக்கத்தில் சீர்மை இல்லை. ஒரே ஆங்கிலச் சொல்லுக்குப் பல தமிழ்ச் சொற்களும், பல ஆங்கிலச் சொற்களுக்கு ஒரே தமிழ்ச் சொல்லும் எழுதுவது வழக்கிலிருந்தது. இந்நிலையில் சொல்லாக்கத்தினை நெறிமுறைப்படுத்தச் சிலர் முயன்றதன் விளைவாக, விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இத்தகைய நெறிமுறைகள் இறுக்கமான விதிகள் அல்ல; கால வளர்ச்சிக்கேற்ப மாறக்கூடியன. மொழிபெயர்ப்பின்போது பின்பற்றப்பட வேண்டிய சொல்லாக்க நெறிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.