தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1main-சங்கம் மருவிய கால இலக்கியம்



  • சங்ககாலத்திற்குப் பிற்பட்ட காலத்தைச் சங்கம் மருவிய காலம் என்கிறோம். சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.

    1.4.1 திருக்குறள்

    இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதன்மையானது. சங்கத்திற்கும் பிற்பட்டது என இதன் காலத்தை வரையறை செய்யலாம். எல்லாச் சமயத்தாராலும் எமது நூல் எமது நூல் என்று கூறப்படுவதால் இதன் பொதுத்தன்மை புலனாகிறது. ஆயினும் இதனைப் பழைய நாளிலிருந்தே சமணநூல் என்றும் இதன் ஆசிரியர் சமணர் என்றும் கூறுகின்ற மரபும் உண்டு. சமண நூல் என்பதற்கும் ஆசிரியர் சமணர் என்பதற்குமான சில சான்றுகளை இங்குக் காணலாம்.

    குறள் ஆசிரியர்

    குறளாசிரியர்க்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று தேவர் என்பது. தேவர் என்ற பெயர் சமண சமயத்தார்க்கு உரியதாகையால் இவர் சமணர் என்பர். தவிர, நீலகேசிக்கு உரை எழுதிய சமயதிவாகர முனிவர் திருக்குறளை ‘எமது ஓத்து’ என்று கூறுவார். எம்முடைய நூல் என்று அது பொருள்படுவதால் திருக்குறள் சமணரால் இயற்றப்பட்டது என்று கொள்ளலாம்.

    கடவுள் வாழ்த்து : தீர்த்தங்கரர் வாழ்த்து

    இன்னொரு கருத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டும். தமிழகத்தில் சமணர்களின் சமயத் தலைமை இடமாக இருந்த திராவிடச் சங்கத்தின் (திரமிளசங்கம்) தலைவராக இருந்த  குந்தகுந்தர் என்ற ஏலாச்சாரியார்தான் திருக்குறளை இயற்றியவர் என்ற கருத்து சமணர்களிடையே நிலவுகிறது. வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் பொன்னூர் மலையில் இவருடைய பாதங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இன்றும் சமணர்கள் போற்றுகின்ற இடமாக அது விளங்குகின்றது. கடவுள் வாழ்த்தில் கூறப்படும் ஆதிபகவன் முதல் தீர்த்தங்கரராகிய விருஷபதேவரைக் குறிக்கிறது என்றும் சமணர் குறிப்பர். கடவுள் வாழ்த்தில் குறளாசிரியர் பயன்படுத்தும் ‘இருள்சேர் இருவினையும் சேராதவன்’, ‘பொறிவாயில் ஐந்தவித்தான், ‘மலர்மிசை ஏகினான்’ ஆகிய தொடர்கள் சமணத் தீர்த்தங்கரர்களுக்கு உரியன. இத்தொடர்களின் பொருள் முறையே (1) இருவினைகளையும் வென்று வினைப்பயனுக்கு அப்பாற்பட்டவன், (2) ஐம்புலன்களையும் வென்றவன், (3) மலர்மேல் இருப்பவன் ஆகும்.

    குறள் கூறும் கொல்லாமை: சமணக் கொள்கையின்
    வெளிப்பாடே!

    குறள், அறங்கள் பலவற்றையும் விரிவாகப் பேசுகிறது. ஆயினும் கொல்லாமை அறத்தைப் பேசும்போது

        ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
        பின்சாரப் பொய்யாமை நன்று     (323)

    என்று கூறுகிறது. அதாவது, இணையில்லாத ஓர் அறமாக இருப்பது கொல்லாமை என்னும் நல்லறமாகும். அதற்கு அடுத்த நிலையில் வைத்துக் கூறத்தக்கதாகப் பொய்யாமை என்னும் அறம் நல்லது. அத்துடன் அமையாது

        நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
        கொல்லாமை சூழும் நெறி     (324)

    என்றும் கூறுவார்.

    அதாவது நல்லவழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எதுவென்றால் எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும் என்பார். மேலும்

        அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
        உயிர்செகுத் துண்ணாமை நன்று     (259)


    என்றும் கூறுவார். இதன் பொருள்,

    நெல் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது எனலாம்.

    மேற்கண்ட குறட்பாக்கள் கொல்லாமை நெறியை எத்துணை அழுத்தமாகப் பேசுகின்றன என்பதை அறியலாம். சமணரின் அடிப்படைக் கோட்பாடு கொல்லாமையாகும். இந்த அளவிற்கு அந்தக் காலக்கட்டத்தில் வேறு எந்தச் சமயமும் கொல்லாமைக் கோட்பாட்டை வற்புறுத்தியதாகத் தெரியவில்லை. அதனால் குறளாசிரியர் சமணராக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

    1.4.2 நாலடியார்

    சங்ககாலச் சூழல் மாறியபோது சங்க இலக்கியப் போக்கிலும் மாறுபாடு தோன்றியது. வீரமும் காதலும் பாடுபொருளாக மேலோங்கிய போக்கு மாறி, தமிழிலக்கியப் பரப்பில் அறநூல்கள் ஒரு கணிசமான பகுதியாகத் தோன்றி வளர்ந்தன.

    அறநூல்கள் என்று பொதுவாகக் கொள்ளப்படுவன நீதிமுறைகள், ஒழுகலாறுகள் என்பவற்றை நேரே எடுத்துக் கூறும் நூல்களாகும். இதைச் செய், அதைச் செய்யாதே என்று அறிவுறுத்தும் வகையில் அமைந்தாலும் இலக்கிய நயம் தோன்றப் படைக்கப்படுவனவாகும். அதனால் அறநூல்களை இலக்கியங்களாகப் போற்றுவது தமிழுக்குள்ள தனிச்சிறப்பாகும்.

    நாலடியார் சிறப்பு

    திருக்குறள் அமைத்த அறவாழ்வின் அடிப்படையில் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களாக உள்ள ஏனைய அறநூல்கள் எழுந்தன. அவற்றுள் தனிச்சிறப்புப் பெறுவது நாலடியார். இந்நூல் திருக்குறளோடு சேர்த்து ஒப்பநோக்கி மதிக்கப்பட்டு வருகிறது. ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி ஆலங்குச்சியும் வேலங்குச்சியும் பல்லுக்கு உறுதியளிப்பதுபோல நாலடியாரும் திருக்குறளும் சொல்லுக்கு உறுதி அளிப்பன என்ற வழக்கால் நாலடியாரின் சிறப்பை அறிய முடிகிறது.

    மேல்நாட்டு அறிஞர் ஜி.யு. போப் அவர்களால் நாலடியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    நாலடியார்: ஒரு சமண நூல்

    நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுதி எனக் கருதப்படுகிறது. பஞ்சம் வந்தபோது பாண்டியனை வந்தடைந்த சமண முனிவர்கள் பஞ்சம் முடிந்ததும் பாண்டியனைப் பிரிந்து செல்லும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாட்டு எழுதி வைத்துச் சென்றனர் எனவும், அவற்றுள் அழிந்தனபோக நின்றவையே நாலடியார் பாடல்களாயின எனவும் கூறுவர்.

    நாலடியாரில் சமணக் கொள்கைகள்

    நாலடியார், சிறந்த உவமைகளாலும் ஆற்றலுள்ள சொற்களாலும் உலக நடைமுறையைக் காட்டுதலில் சிறந்து விளங்குகிறது. நாலடியார் முழுவதிலும் நிலையாமைக் கொள்கை ஊடுருவிச் செல்கிறது. செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவை நூலின் தொடக்கத்திலே தொகுக்கப்பட்டுள்ளன.  அதன்பின் அறன் வலியுறுத்தல் கூறப்படுகிறது.

    பல்லாவுள் உய்த்து விடினுங் குழக்கன்று
    வல்லதாந் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
    பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

    கிழவனை நாடிக் கொளற்கு

                 (நாலடி 101)


    (பல் = பல; ஆ = பசு; உய்த்துவிடு = செலுத்து; குழக்கன்று = கன்றுக்குட்டி; கோடல் = கொள்ளுதல்; தொல்லை = முன்னையதான; தற்செய்த = தன்னைச் செய்த; கிழவனை = உரியவனை)

    பல பசுக்கள் இருந்தபோதிலும் தன்னுடைய தாயை நாடிச்செல்லும் கன்றுபோல, உலகத்தில் பல மனிதர்கள் இருந்தபோதிலும் அவர்பால் போகாது, வினை தன்னைச் செய்தவனையே சென்று சேர்ந்து, அனுபவிக்கச் செய்யும்.

    1.4.3 பழமொழி

    இதன் கடவுள் வாழ்த்து அருகனைக் குறிப்பிடுவதால் இதன் ஆசிரியர் சமணர் என்றறியலாம். ஆசிரியர் முன்றுறை அரையனார் என்பவர்.

    தமிழ்நாட்டில் வழங்கிய பழமொழிகளில் ஒன்றை ஈற்றடியாகக் கொண்டு ஒவ்வொரு பாடலும் அமைந்துள்ளது. சொல்லப்படும் கருத்துகள் தெளிவாகவும் சுருக்கமாகவும் கேட்போர் உள்ளங்கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளன. நானூறு பாடல்களை உடையது என்பதால் இது பழமொழி நானூறு என்றும் வழங்கப்படும். இதற்கு முன்பும் பழமொழிகள் சில குறுந்தொகை, அகநானூறு என்பவற்றிலும் பிற்கால இலக்கியங்களிலும் கையாளப்பட்டுள்ளன. ஆனால் நூல் முழுவதிலும் அமையுமாறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றால் நிலைநாட்டிக் கூறப்படும் நீதிகளையும் அறங்களையும் கூறி, ஒவ்வொரு செய்யுளிலும் விளக்கிய நூல் இதுவேயாகும்.

    1.4.4 பிற அறநூல்கள்

    நாலடியார், திருக்குறள், பழமொழி முதலிய நூல்களைப் பற்றிப் பார்த்தோம். பிற அறநூல்களிலும், சமணம் வலியுறுத்தும் அறக் கொள்கைகளையே பரவலாகக் காண்கிறோம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-06-2018 18:42:02(இந்திய நேரம்)