தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1main-காப்பியங்கள்



  • பழந்தமிழ் நூல்களுள் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் காப்பிய வகையைச் சேர்ந்தன.

    1.5.1 சிலப்பதிகாரத்தில் சமணம்

    சிலப்பதிகார ஆசிரியர் சமணர்; தமது சமயத்தின் முக்கியமான கொள்கைகளாக அமைந்த கொல்லாமை, வினைக்கோட்பாடு, உலகமூடம் முதலியனவற்றை மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியிருக்கிறார். இவற்றைச் சமணத் தமிழ்க் காப்பியங்கள் என்னும் பாடத்தில் விரிவாகக் காணலாம்.

    1.5.2 மணிமேகலையில் சமணக் குறிப்புகள்

    ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலை கால வரன்முறையில் வைத்துப் பார்க்கும்போது சிலப்பதிகாரத்திற்கு அடுத்து வைக்கப்படுகிறது.

    சமணப்பள்ளி பற்றிய குறிப்பு

    மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில் சுதமதி மணிமேகலையுடன் தான் வந்த வரலாற்றைக் கூறும்போது தன் தந்தையைப் பற்றிக் குறிப்பிடுகிறாள். கன்றினை ஈன்ற பசுவொன்று தன் தந்தையின்மீது பாய்ந்து அவன் வயிற்றில் பெரும்புண்ணை உண்டாக்கிவிடுகிறது. பெரிய குடரைக் கையில் தாங்கிக் கொண்டு அடைக்கலம் வேண்டி முன்பு சுதமதி தங்கியிருந்த சமணப் பள்ளியை அடைகிறான். சமண முனிவர் அடைக்கலம் தர மறுத்து விடுகின்றனர். சினந்து வெளியே போகுமாறு கையால் காட்டி நின்றனர். இந்தக் குறிப்பு சமணம் அக்காலத்தில் இடம் பெற்றிருந்ததையும் சமண முனிவர் தங்கியிருக்கத் தனியிடம் அமைந்திருந்தமையும் காட்டுகிறது.

    நிகண்டவாதி பற்றிய குறிப்பு

    சமயக் கணக்கர் தம்திறம் கேட்ட காதையில் மணிமேகலை வஞ்சிநகரின் கண் இருந்து பல்வகைச் சமயவாதிகளையும் சந்தித்து அவரவர் சமயக் கருத்துகளைக் கேட்க விரும்பி அவர்கள்பால் செல்லுகிறாள். அவள் பார்த்த சமயவாதிகளுள் ஒருவர் நிகண்டவாதி. நிகண்டவாதி சமண சமயவாதியாவர். அக்கால நிலையில் சிறப்புடன் விளங்கிய பல சமயங்களில் ஒன்றாகச் சமணசமயமும் விளங்கியதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 15-06-2018 10:45:30(இந்திய நேரம்)