Primary tabs
1.4 கிறித்தவ வழிபாட்டுப் பாடல்கள் -I (கீர்த்தனைகள்)
கிறித்தவ வழிபாடுகளில் பாடல்களுக்குச் சிறப்பிடம் உண்டு. ஆலய வழிபாடுகளில் மட்டுமின்றி இல்ல நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடப்படுகின்றன. விவிலியத்தில் உள்ள தாவீதின் ‘சங்கீதம்’ (psalms) பாடல்களாக அமைந்தவை. ‘கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள். அவருடைய துதியைப் பாடுங்கள்’ என்று விவிலியம் கூறுகிறது. கடவுளின் அன்பையும் அருளையும் எண்ணி,
பாடித் துதி மனமே; பரனைக் கொண்
டாடித் துதி மனமேஎன வேதநாயக சாஸ்திரியார் பாடியுள்ளார். இப்பாடல்கள் தனியாகவும் குழுவாகவும் பாடுவதற்கு ஏற்றவை.
தொடக்கத்தில், செர்மன், ஆங்கிலம் முதலிய மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட துதிப்பாடல்கள் தமிழ்த் திருச்சபைகளில் பாடப்பட்டு வந்தன. இவை மேனாட்டு இராகங்களில் அமைந்தவை. இத்தகைய பாடல்கள் ஞானப்பாடல்கள் (Hymns) என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. இவை தமிழிலுள்ள தேவாரப் பாடல்களை ஒத்தவையாகும். இவை ஆழ்ந்த கருத்து வளம் கொண்டவை. தமிழ் யாப்பு அமைப்பிலிருந்து மாறுபட்டவை. செர்மன் பாடல்களில் ஓரசைச் சொற்கள் மிகுதியாக உள்ளன, இவை குறைந்த அடிவரையறை கொண்டவை. இவை இன்றளவும் தமிழ்க் கிறித்தவர்களால் பாடப்பட்டு வருகின்றன. இப்பாடல்களைப் பாடப் பெரும்பாலும் தமிழ்த் திருச்சபைகளில் ‘ஆர்கன்’ என்னும் இசைக் கருவியும் பயிற்சி பெற்ற பாடகர் குழுவும் இருப்பதைக் காணலாம்.
• கிறித்தவக் கீர்த்தனைகள்
இந்திய இசை மரபில் இயேசுவைப் போற்றிப் பாட வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததன் விளைவாகத் தமிழில் கிறித்தவக் கீர்த்தனைகள் தோன்றின. ‘கீர்த்தி’ என்றால் ‘புகழ்’ என்பது பொருள். இறைவனின் அருள், ஆற்றல், பெருமை முதலியவற்றைப் புகழும் வண்ணம் கீர்த்தனைகள் அமையும். கீர்த்தனைகளில் பல்லவி, அனு பல்லவி, சரணங்கள், தொகையறா முதலிய கூறுகள் இடம் பெறும். கிறித்தவ வழிபாட்டில் பயன்படுத்தப்படும் கீர்த்தனைகள் ‘கிறித்தவக் கீர்த்தனைகள்’ (Christian Lyrics) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன.
• கீர்த்தனைகளின் தன்மைகள்
கீர்த்தனைகள் இனிய பண்களில், இலக்கணப்படி அமைந்தவை. சில கிறித்தவக் கீர்த்தனைகள் தெலுங்குக் கீர்த்தனைகளைத் தழுவி அமைந்தவை. சில பாடல்கள் திருப்புகழ் வண்ணங்களில் அமைக்கப்பட்டவை. சில பாடல்கள் நாடகக் கீர்த்தனைகளைத் தழுவி அமைந்துள்ளன. ஒவ்வொரு கீர்த்தனைக்கும் இராகம், தாளம் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நூற்றாண்டுகளாகப் பாடப்பட்டு வரும் கீர்த்தனைகளும் உண்டு. இன்றளவும் வழிபாடுகளில் கீர்த்தனைகளுக்குக் குறிப்பிடத்தக்க இடம் உண்டு. இவை மக்கள் அனைவரும் ஆலயங்களில் ஒன்று கூடிப் பாடுவதற்கும் ஏற்றவை.
• பிற சமயப் பாடல்கள்
திருப்பத்தூரில் கிறிஸ்து குல ஆசிரமத்தை நிறுவிய டாக்டர் சவரிராயன் ஏசுதாசன் என்பவர் தம் ஆசிரம வழிபாட்டு நூலில் திரு.வி.கலியான சுந்தரனார், இராமலிங்க அடிகளார், தாயுமானவர், பட்டினத்தார் ஆகியோர் பாடல்களையும் சேர்த்துள்ளார்.
கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்களுள் வேதநாயகம் சாஸ்திரியார். ஜி.எஸ்.வேதநாயகர், வே.மாசிலாமணி, ஜான் பால்மர், மரியான் உபதேசியார், ஞா.சாமுவேல், சவரிராயன் ஏசுதாசன், சந்தியாகு, யோசேப்பு, மு.ஆபிரகாம் பண்டிதர், வீரமாமுனிவர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள், அண்மைக் காலத்தில் வெளி வந்துள்ள கீர்த்தனைத் தொகுப்புகளில் சத்தியசாட்சி, வீ.ப.கா.சுந்தரம், தயானந்தன் பிரான்சிஸ், தாமஸ் தங்கராஜ் போன்றோர் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. கீர்த்தனைக் கவிஞர்களுள் ஒரு சிலர் குறித்து விரிவாகக் காண்போம்.
• வேதநாயகம் சாஸ்திரியார் (1774-1864)
இவர், தஞ்சைச் சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவராக விளங்கியவர், பெத்லகேம் குறவஞ்சி இவரது தலைசிறந்த படைப்பாகும். ஞான நொண்டி நாடகம், பராபரன் மாலை, பேரின்பக் காதல் முதலிய ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். இவர் எழுதிய ஐம்பதிற்கும் மேற்பட்ட பாடல்கள் கிறித்தவக் கீர்த்தனைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ‘ஆகமங்கள் புகழ் வேதா’ ‘தேவ தேவனே எகோவா’ ‘பாடித் துதி மனமே’ ‘ஏசுவையே துதி செய்’ ‘வானம் பூமியோ’ எனத்தொடங்கும் பாடல்களையும் சாஸ்திரியார் இயற்றியுள்ளார்.
• ஜான் பால்மர் (1812-1883)
இவர் ‘கிறிஸ்தாயணம்’ என்னும் புகழ் பெற்ற காவியத்தை இயற்றியவர். தமிழிலும் விவிலியத்திலும் புலமை மிக்கவர். விவிலியச் செய்திகளைத் தம் கீர்த்தனைகளில் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.
இயேசுவின் திருப்பெயர் தேனின் இனிமையை விட சுவையானது; எனவே மனம் அதைத் தேடிச் செல்ல வேண்டும் என்று பாடுகிறார்.
தேன் இனிமையினும் ஏசுவின் நாமம் திவ்விய மதுரமாமே
அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீமனமே!(கீர்த்தனை எண் : 105)
எத்தகைய துன்பம் வந்தாலும் சோர்ந்து போகாமல் இயேசுவை ஆதாரமாகக் கொள் எனத் தம் மனதிற்குக் கூறுகிறார் கவிஞர். அந்தப் பாடல் பின்வருமாறு தொடங்குகிறது.
வாரா வினை வந்தாலும் சோராதே! மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே(கீர்த்தனை, எண்:203)
இயேசு, நமக்கு ஆதாரமாக விளங்குவதால், எத்தகைய துன்பம் வந்தாலும் மனமே சோர்ந்து போகாதே என்று மனத்திடம் வேண்டுகிறார் கவிஞர்.
• மரியான் உபதேசியார்
வேதநாயகம் சாஸ்திரியாருக்கும், ஜான் பால்மருக்கும் அடுத்தபடியாக, மரியான் உபதேசியார் பாடல்களே அதிக அளவில் கிறித்தவக் கீர்த்தனைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. சாதி வேறுபாடுகளை இவர் கண்டித்தார். இவரது பாடல்கள் உணர்ச்சி ஊட்டுவன. சிறந்த சொல்லடுக்கும் கருத்தோட்டமும் கொண்டவை. ‘தோத்திரம் புகழ் கீர்த்தனம்’ ‘நம்பினேன் உனதடிமை நானய்யா’ எனத் தொடங்கும் பாடல்களை இயற்றிப் புகழ் பெற்றார்.
1.4.3 கிறித்தவக் கீர்த்தனைகளின் பாடுபொருள்
பெரும்பான்மையான கீர்த்தனைகள் இயேசுவின் புகழ் பாடுவன; பக்தனின் உள்ளத்து உணர்ச்சிகளைப் புலப்படுத்துவன. சில பாடல்கள் இயேசுவின் அன்பு வாழ்வை எடுத்துரைப்பவை; சில பாடல்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது திருநாட்களில் பாடுவதற்குப் பொருத்தமாக எழுத்தப்பட்டவை. சில பாடல்கள் காலை, மாலை வேளைகளில் பாடுவதற்கு உரியவை.
• இயேசு பிறப்புப் பாடல்
‘பெத்தலையில் பிறந்தவரைப் போற்றி துதி மனமே’, ‘வானம் பூமியோ! பராபரன் மானிடன் ஆனாரோ’ ‘பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி’ எனத் தொடங்கும் பாடல்கள் கிறிஸ்மஸ் நாட்களில் பாடுவதற்குப் பொருத்தமானவை. இயேசுவின் பிறப்பைப் பாடுபவர்கள் இப்பாடலை மிகுதியும் பயன்படுத்துவார்கள்.
• புனித வெள்ளிப்பாடல்
இது போன்றே, ‘எங்கே சுமந்து போகிறீர்’, ‘குருசினில் தொங்கியே குருதியும் வடிய’ எனத் தொடங்கும் பாடல்கள் புனித வெள்ளியன்று பாடுவதற்கு மிகவும் பொருத்தமானவை.
• வாழ்க்கை நிகழ்ச்சிப் பாடல்கள்
அன்றாட வாழ்க்கையில் இடம் பெறும் பொழுதுகள், பெயர் சூட்டல் (Christening), திருமணம், மரணம் முதலிய நிகழ்ச்சிகளில் பாடுவதற்கெனச் சிறப்புப் பாடல்களும் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, காலையில் எழுந்தவுடன் பாடுவதற்காக,
கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே - எழுந்திராய்(கீர்த்தனை எண்-279)
என்ற பாடல் எழுதப்பட்டுள்ளது. அதைப் போலவே, இரவில், இறைவன் தனக்குப் பாதுகாவலாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்,
வினை சூழாது இந்த இரவினில் காத்து ஆள்!(கீர்த்தனை எண் - 286)
கருணாகர தேவா, இரங்கி இந்தக் கங்குலில் எனக் கா வா!
(கீர்த்தனை எண் - 285)
(கங்குல் = இரவு)
என இறைவனை அழைக்கும் பாடல் மாலை நேரத்தில் பாடுவதற்குரியது.
இவ்வாறு கீர்த்தனைகள் பல சூழலுக்கும் தேவைக்கும் பொருந்தும் வகையில் - பயன்படும் வகையில் கிறித்தவ வழிபாட்டுப் பாடல்கள் உள்ளன.