தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கிறித்தவ வழிபாட்டுப் பாடல்கள் - II

  • 1.5 கிறித்தவ வழிபாட்டுப் பாடல்கள் - II
    (மெல்லிசைப் பாடல்களும் நாட்டுப்புறப் பாடல்களும்)

    கிறித்தவ வழிபாடுகளில் பாமாலைகளும் (Hymns) கீர்த்தனைகளும் (Lyrics) பயன்படுத்தப்படுவதோடு, மெல்லிசைப் பாடல்களும் பாடப்படுகின்றன. இவற்றைப் ‘புத்தெழுச்சிப் பாடல்கள்’ என்ற பெயரில் கிறித்தவர்கள் அழைக்கின்றனர். இவை கிறித்தவ பக்தி எழுச்சிக்குப் புத்துயிர் ஊட்டி வருகின்றன. இசைப் பயிற்சி பெறாதவரும் இத்தகைய பாடல்களை எளிதாகப் பாட இயலும். நாட்டுப்புற மெட்டில் அமைந்த கிறித்தவக் கிராமியப் பாடல்களையும் கிறித்தவக் கவிஞர்கள் இயற்றியுள்ளனர்.

    1.5.1 மெல்லிசைப் பாடல்களின் தோற்றம்

    கிறித்தவ மெல்லிசைப் பாடல்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிறித்தவ வழிபாடுகளில் பாடப்பட்டு வருகின்றன. புத்தெழுச்சிப் பாடல்களை வழங்கியதில் ‘இரட்சணிய சேனை’ (Salvation Army) சபையினருக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. ஆங்கிலம் மற்றும் மலையாளப் பாடல்களின் மொழி பெயர்ப்புகளும் தமிழ்ப் புத்தெழுச்சிப் பாடல்களுக்கு வளம் சேர்த்துள்ளன. இன்று பலவகைப்பட்ட திருச்சபை பிரிவினரும் இப்பாடல்களை வழிபாட்டில் பயன்படுத்தும் போக்கு காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தெழுச்சிப் பாடல்கள் தமிழில் எழுந்துள்ளன.

    இப்பாடல்களில் காணப்படும் எளிமை, இசை, உணர்ச்சி, கருத்தாழம் ஆகியன யாவரையும் எளிதில் ஈர்ப்பவை. கிறித்தவ ஆன்மீக எழுச்சிக் கூட்டங்களில் இத்தகைய பாடல்களுக்குச் செல்வாக்கு மிகுதி. ‘நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு’ வெளியிட்டுள்ள ‘செயல் வீரர் கீதங்கள்’ மதுரையிலுள்ள ‘தமிழ்நாடு இறையியல் கல்லூரி’ வெளியிட்டுள்ள ‘புத்துயிர்ப் பாடல்கள்’ தந்தை பெர்க்கமான்சின் ‘ஜெபத்தோட்ட ஜெப கீதங்கள்’ ஆகியன குறிப்பிடத்தக்க தொகுப்புகளாகும். கிறித்தவ இலக்கியச் சங்கமும் புத்தெழுச்சிப் பாடல்களைக் கீர்த்தனைகளோடு சேர்த்து வெளியிட்டுள்ளது.

    1.5.2 மெல்லிசைப் பாடல்களின் உள்ளடக்கம்

    கிறித்தவ மெல்லிசைப் பாடல்களில் கடவுளைப் போற்றும் துதிப் பாடல்கள் உள்ளன. கடவுளின் அருளுக்காக நன்றி கூறும் பாடல்களும் உள்ளன. பாவ அறிக்கையாக அமைந்த பாடல்களும் உள்ளன. பல்வகைப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களில் சிக்கித் தவிக்கும் மனிதனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்த பாடல்கள் அதிகமாக உள்ளன. மேலும் நற்செய்திப் பணிக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்த பாடல்களும் உள்ளன.

    • நன்றி செலுத்தல்

    கடவுளுக்கு நன்றி கூறும் முறையில் அமைந்த பெர்க்மான்சின் பாடல் பின்வருமாறு தொடங்குகிறது.

    நன்றியால் துதிபாடு - நம்இயேசுவை
    நாவாலே என்றும் பாடு
    வல்லவர் நல்லவர் போதுமானவர்
    வார்த்தையால் உண்மையுள்ளவர்

    (ஜெபத்தோட்ட ஜெய கீதங்கள்:பாடல் எண்:16)

    • ஆறுதல் மொழி

    மனிதனுக்குப் பல வகையான வாழ்க்கைப் போராட்டங்கள் உண்டு. நோயுற்றவர்கள் உண்டு. கைவிடப்பட்டவர்கள் உண்டு. இதற்காகக் கண்ணீர் விடுபவர் உண்டு. இத்தகைய மக்களுக்குக் கடவுள் ஒருவரே ஆறுதல் அளிக்க இயலும் என்பதை எடுத்துரைக்கும் கிறித்தவ மெல்லிசைப் பாடல்கள் மிகுதியாக உள்ளன.

    ‘இயேசு அழைக்கிறார்’ எனத் தொடங்கும் பாடல் புகழ் பெற்ற பாடலாகும். இப்பாடலை இயற்றியவர் எப்.ஜே.செல்லத்துரை என்பவர். இயேசு, தம் கைகளை நீட்டி அழைக்கிறார்; அவர் கண்ணீரைத் துடைப்பார்; எத்தகைய துன்பங்கள் வந்தாலும் நம்மைக் காத்து ஆறுதல் அளிப்பார் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

    இயேசு அழைக்கிறார்! இயேசு அழைக்கிறார்!
    கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
    கருத்துடன் உன்னைக் காத்திடவே - இயேசு

    (101 பாடல் பிறந்த கதை: பாடல் எண்:74)

    இவ்வாறு மெல்லிசைப் பாடல்களின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.

    1.5.3 நாட்டுப்புறப் பாடல்கள்

    கிறித்தவக் கவிஞர்கள் நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளில் பாடல்கள் பலவற்றைப் புனைந்துள்ளனர். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில், இசை இனிமை கொண்ட சிந்துப் பாடல்களைக் கிறித்தவக் கவிஞர்கள் இயற்றியுள்ளனர். எண்பதுக்கும் மேற்பட்ட கிறித்தவ அம்மானைகளும், நாற்பதுக்கும் மேற்பட்ட கிறித்தவ கும்மிப்பாடல்களும் தமிழில் வெளிவந்துள்ளன. கிராமிய மணம் கொண்ட வில்லுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, கைச்சிலம்பு பாடல் முதலியவற்றையும் கிறித்தவக் கலைஞர்கள் படைத்துள்ளனர். இவை கிராமத் திருச்சபையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் எழுதப்பட்டவை. இவை இனிய இசையுடன் எளிமையாக அமைந்தவை. பேராசிரியர் தியோபிலஸ் அப்பாவு, மோகன்ராஜ் பீட்டர், பெருமாத்தூர் சீராளன், வெ.சாமிக்கண்ணு போன்றோர் இத்தகைய பாடல்களை எழுதியுள்ளனர்.

    • அல்லேலூயா பாடல்

    தியோபிலஸ் அப்பாவு ‘அல்லேலூயா’ எனத் தொடங்கும் பாடல் ஒன்றினை எழுதியுள்ளார். இப்பாடல், பல வகையான மேளத்தோடும், தாளத்தோடும், ஆட்டத்தோடும் கடவுளை வழிபட மக்களை அழைக்கிறது.

    உருமி மேளம் முட்டித் தாளம்
    பெரிய மேளம் உடுக்கை ஓலம்
    பம்பை மத்தாளத்தோட போடுங்கையா சிங்கிதாளம்
    கும்மியாட்டம் ஒயிலு ஆட்டம் வீர சிலம்பாட்டம்ஆடி
    கும்மாளமா ஆராதிச்சி பண்ணுங்க ஆர்ப்பாட்டம்,

    (புத்துயிர் பாடல்கள்: பாடல் எண்-11)

    (உருமி, உடுக்கை, பம்பை = தோல் இசைக் கருவிகள், கும்மி, ஒயிலு, சிலம்பம் = நாட்டுப்புற ஆடல் வகைகள்)

    என்னும் பாடல் மேற்குறிப்பிட்டவற்றிற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஆயினும், இத்தகைய பாடல்கள் அரிதாகவே வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 14:38:44(இந்திய நேரம்)