Primary tabs
6.3 உரைநடை இலக்கியங்கள்
ஐரோப்பியரின் ஆதிக்கத்தின் கீழிருந்து வந்த தமிழகத்தில் கி.பி 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை அரசியல் குழப்பங்கள் இருந்து அடங்கின. ஆங்கிலேயர்களின் வலுவான ஆட்சியும் அமைந்தது. 1850இல் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம் (தி மெட்ராஸ் ஸ்கூல் புக் சொசைட்டி) சிறந்த மொழி பெயர்ப்புப் புத்தகங்களுக்குத் தகுந்த பரிசு வழங்கி உரை நடைவளர்ச்சிக்கு வித்திட்டது. கிறித்தவ சங்கம் நாடெங்கும் அச்சுக்கூடத்தை நிறுவி எண்ணற்ற உரைநடை நூல்களை அச்சிட்டு வெளியிட்டது. கிறித்தவ மத சார்பான பலதரப்பட்ட உரைநடை நூல்களைக் குறைந்த விலைக்குக் கொடுத்தனர். சைவ சமயத் தொண்டர்களால் புராண இதிகாசங்கள் உரைநடையில் வெளிவந்தன. இந்நிலையில் இஸ்லாமிய உரைநடை நூல்களும் வெளிவரத் தொடங்கின.
முதல் இஸ்லாமிய உரைநடை இலக்கியம் வெள்ளாட்டி மசலா (1856) எனலாம். இஸ்லாம் சமய மார்க்கச் சட்டங்களை உண்மை மாந்தர்களும், கற்பனை மாந்தர்களும் கலந்த கற்பனைப் பின் புலத்தில் வினாவிடைப் பாங்கில் வெளிப்படுத்தும் இலக்கியமாகிய வெள்ளாட்டி மசலாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 1856இல் வெளிவந்த முதற் பதிப்பிற்குப்பின், 1879, 1884, 1910, 1917, 1953ஆகிய ஆண்டுகளில் ஆறு பதிப்புகள் வெளி வந்துள்ளன.
வெள்ளாட்டி என்பதற்குப் ‘பணிப்பெண்’ அல்லது ‘அடிமைப்பெண்’ என்று பொருள். உணவும் உறையுளும் கொடுத்து இளைய தலைவியைப்போல் இருத்திக்கொள்ளும் பணிப்பெண் வெள்ளாட்டி ஆவாள். ‘மசலா’ என்பது அறபி மொழிச்சொல்லான ‘மஸ்லா’ என்பதன் தமிழ் வடிவமாகும். இதற்கு, கேள், விசாரி, தெளிவுபெறு என்று சொல்லகராதியில் பல பொருள்கள் உண்டு. இஸ்லாமிய சமய அறிஞரிடம் சென்று அம்மார்க்கத்தைப் பற்றிய ஐயப்பாடுகளைக் கேட்டுத் தெளிவு பெறுதலே மசலாவாகும் - என இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தில் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. தன்னை மன்னனுக்கு விலை பேச வந்த தவத்துது என்ற வெள்ளாட்டியிடம் அவளுடைய அறிவாற்றலைச் சோதிக்கும் வகையில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் கேட்கப்பட்ட வினாக்களும் அவ்வினாக்களுக்கு வெள்ளாட்டி அளித்த மறுமொழிகளுமே வெள்ளாட்டி மசலாவின் உள்ளடக்கமாகும். வெள்ளாட்டி மசலா உரைநடை இலக்கியத்தின் ஆசிரியர் ஷெய்க் அப்துல் காதர் லெப்பை ஆலிம் ஹாஜி ஆவார். இஸ்லாமியத் திருமறையாகிய குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் நவின்ற நல்லுரைகளான ஹதீஸ்களிலிருந்தும் இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள் 550 தேர்ந்தெடுத்து, முதலில் அச்சிட்டு வெளியிட்டதாகவும் பின்னர் முகையித்தீன் - இப்ன - அறபி முதலான மார்க்க அறிஞர் ஐவரின் கருத்துகளில் 119 - ஐ எடுத்துச் சேர்த்து, இப்போது 619 மசலாக்களுடன் நூல் வெளி வருவதாகவும், 1856 ஆம் ஆண்டிற்குப் பின் வந்த பதிப்புகளின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
வெள்ளாட்டி மசலாவைத் தொடர்ந்து அறபுப் பாரசீக நாட்டுக் கதை இலக்கியங்கள் தமிழில் வந்தன. மகான் மாப்பிள்ளை வெலப்பை மதீனதுன் நூஹஸ் என்னும் பார்சி மொழிக் காவியத்தைத் தாமிரப்பட்டணம் (1859) என்ற பெயரில் தந்தார். ஹக்கீம் முகம்மது இஸ்மாயில் ஹாத்திம் தாய் (1877) என்னும் நூலை வெளியிட்டார். லைலா மஜ்னு, ஹூர்மூஸ் கதை போன்றனவும் தமிழில் வந்தன. அப்துல் வஹ்ஹாப், யூசுப் நபி கிஸ்ஸா (1882) என்னும் நூலைப் படைத்தார். 1888இல் ஆறுமுக முதலியார் அராபியக் கதைகளை மூன்று பாகங்களாக வெளியிட்டார். தொடர்ந்து அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்றனவும் பாரசீகத்திலிருந்து தமிழுக்குத் தாவின.
- அப்பாஸ் கதை
அந்துமான் நகரத்து இளவரசன் அப்பாஸ் என்பான் பலவிதத் துன்பத்திற்குள்ளாகி, சீனப்பதிக்கு வந்து சேர்கின்றான். சீனப்பதி ஆளும் மன்னனின் மகள் மெஹர் பானு, இஸ்லாமிய மார்க்க ஞானத்தில் முதிர்ச்சி பெற்று ஞானவல்லி என்னும் சிறப்புப் பெயருடன் விளங்கினாள். இவள் ''இஸ்லாம் சமயம் தொடர்பாகத் தான் கேட்கும் நூறு வினாக்களுக்கும் விடை அளிப்பவர்களுக்கே மாலையிடுவேன். விடை தராதவர்களை வெட்டித் துண்டாக்குவேன்'' என்ற உறுதி மொழியில் வாழ்கிறாள். ஞான வல்லியை மணம் கொள்ள முற்பட்ட ஐந்நூறு இளவரசர்கள் தோல்வியுற்றுத் தலை இழந்தனர். இந்நிலையில் இளவரசன் அப்பாஸ் அவளைக் கண்டு அவள் கேட்ட வினாக்களுக்கு எல்லாம் சரியான விடையைச் சொல்லி மாலையிடுகிறான்.