Primary tabs
1.1 தகவல் சகாப்தம் (Information Era)
மனித சமூகம் இரண்டு சகாப்தங்களைக் கடந்து வந்துள்ளது. மனித நாகரிகம் வேளாண் சகாப்தத்தில் (Agricultural Era) தொடங்கி வளர்ச்சி பெற்றது. வேளாண் புரட்சி (Agricultural Revolution) நாகரிக மனித வாழ்வின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது. தொழில் புரட்சி (Industrial Revolution) மனித வரலாற்றை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றது. தொழில்புரட்சியின் பலன்களை மனிதன் முழுமையாக நுகர்ந்து அனுபவித்த காலகட்டம் தொழில் சகாப்தம் (Industrial Era) எனப்படுகிறது. இன்றைக்கு மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பது தகவல் சகாப்தம் (Information Era) ஆகும். எங்கும் தகவல், எதிலும் தகவல், எதற்கும் தகவல், எப்போதும் தகவல், எல்லோருக்கும் தகவல், ஏற்றம் பெறத் தகவல் எனத் தகவலின் தாக்கம் மனித வாழ்வின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. வாழ்வுக்கும், அரசாண்மைக்கும், வணிகத்துக்கும் இன்றியமையாத தகவல் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
தகவல் இல்லையேல் வாழ்க்கை இல்லை. தகவல் பரிமாற்ற ஊடகங்கள் செயலற்றுப் போனால் மனித வாழ்க்கைப் பயணம் நிலைகுத்திப் போகும். வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகள் ஒவ்வொன்றுமே தகவலைச் சார்ந்தே அமைகின்றது.
நாளை மழைவரும் என்கிற தகவல் முன்பே தெரிந்தால்தான் குடை எடுத்துப் போக முடியும். புயல் வரும் என்னும் தகவல் தெரிந்தால்தான் தற்காத்துக் கொள்ள முடியும். கடுமையான நிலநடுக்கம் சுமித்ராவையும் அந்தமானையும் தாக்கியவுடன் சுனாமி தாக்கப் போகிறது என்கிற தகவல் முன்கூட்டியே எட்டியிருந்தால் ஏராளமான மனித உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்க முடியும். நாளை கடை அடைப்பு என்கிற தகவல் அனைவருக்கும் எட்ட வேண்டும். முதல்நாளே பொருட்களை வாங்கி வைத்திருக்க முடியும். ‘இந்தந்தப் பகுதிகளில் நாளை மின்சாரம் கிடையாது’, ‘இங்கெல்லாம் நாளை குழாயில் தண்ணீர் வராது’, ‘இந்தச் சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம்’, ‘இந்த ரயில் நாளை தாமதமாகப் புறப்படுகிறது’, ‘புதிய குடும்ப அட்டைக்கு இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்’, ‘நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் இது’ – இவ்வாறு நாள்தோறும் மனிதன் தகவலைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. சரியான தகவல், சரியான நேரத்தில் பரிமாறிக் கொள்ளப்படவில்லை எனில் வாழ்க்கை நரகமாகிப் போய்விடும்.
மனிதனுக்கு தேவையான தகவலை தேவையான நேரத்தில் வழங்க, நவீனத் தகவல் பரிமாற்ற ஊடகங்களும் நடைமுறைக்கு வந்துவிட்டன. செல்கின்ற இடத்திலிருந்து தகவல் அறி செல்பேசி வந்துவிட்டது. உலகில் எங்கோ நடக்கும் நிகழ்வை உடனுக்குடன் அறிந்துகொள்ள தொலைக்காட்சி வந்துவிட்டது. முன்பின் அறியாத, முகம் காணாத வேற்றுநாட்டவருடன் தகவலைப் பரிமாறிக் கொள்ள இணையம் வந்துவிட்டது. ஒரு மாணவன் தன் ஆராய்ச்சிக்குத் தேவையான அனைத்துத் தகவலையும் ஒரு நொடியில் திரட்டிக் கொள்ள இணையம் வழிவகுத்துள்ளது.
அரசாங்கத்தைச் செவ்வனே நடத்திச் செல்ல தகவல் அவசியத் தேவை. இன்றைய மக்கள் தொகை எவ்வளவு, எழுத்தறிவு பெற்றோர்/பெறாதோர் எவ்வளவு, விளைநிலங்கள் எவ்வளவு, தரிசு நிலங்கள் எவ்வளவு, அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் பணியில் இருப்போர் எவ்வளவு, வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் எவ்வளவு என்கிற தகவல் எல்லாம் புள்ளி விவரமாய் அரசுக்குத் தெரிந்திருக்க வேண்டும். எந்தெந்த வணிகம் எவ்வளவு கோடிக்கு நடைபெறுகிறது, ஏற்றுமதி, இறக்குமதி என்னென்ன, எவ்வளவுக்கு நடைபெறுகிறது என்கிற தகவல்களின் அடிப்படையிலேயே அரசாங்கம் ஆண்டுதோறும் வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரிக்க முடியும். வரி, தீர்வை, சுங்கம் ஆகியவற்றைச் சரியான அளவில் நிர்ணயிக்க முடியும்.
இன்றைய நவீன சூழலில் தாமதமாகக் கிடைக்கும் தகவல் தவறான தகவலாகி விடுகிறது. எனவே இன்றைய காலகட்டத்தில் மின்-அரசாண்மை (e-governance) பற்றி எங்கும் பேசப்படுகிறது. அரசுப் பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட வேண்டும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களும் தலைமையகத்தோடு கணினிப் பிணையங்கள் மூலமாக இறைக்கப்பட வேண்டும். வட்டாட்சியர் அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் பிணையங்களின் மூலம் நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். மாநிலத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களும் தகவல் தொடர்புப் பிணையங்கள் மூலம் பிணைக்கப்பட வேண்டும். அரசின் அன்றாட நடவடிக்கைகளுக்கான தகவல் பாய்வு (Information Flow) தாமதமின்றி உடனுக்குடன் விரைவாக நடைபெற வேண்டும். தகவல் பிழையற்றதாக இருக்க வேண்டும். ஒரு தகவல், தொடர்புடைய அனைத்துப் பிரிவினராலும் ஒரே மாதிரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இவற்றையெல்லாம் மின்-அரசாண்மை மூலமே சாதிக்க முடியும்.
மின்-அரசாண்மை, முழுக்க முழுக்க தகவல் முறைமைகளையே சாந்திருக்கிறது. கணினி மற்றும் கணினிப் பிணையங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமைகள் கட்டாயத் தேவையாகி விட்டன.
ஒரு வணிக நிறுவனம் ஆதாயம் ஈட்டி வெற்றிகரமாக வளர்ச்சி பெறுவதற்கு, அதன் தகவல் கையாளும் திறன் ஆதாரமாய் அமைகிறது. வணிக நிறுவனத்தின் அகக் கட்டமைப்பில் பல்வேறு மட்டங்களிலும், பல்வேறு பணிப் பிரிவுகளுக்கு இடையேயும் தகவல் பாய்வு (Information Flow) ஒழுங்கு முறையோடு நடைபெற வேண்டும். கொள்முதல், உற்பத்தி, சரக்கிருப்பு, விற்பனை போன்ற விவரங்கள் காலத்தாழ்வின்றி உடனுக்குடன் செயலாக்கப்பட வேண்டும். ஒரு நாட்டில் வெவ்வேறு நகரங்களில் அல்லது உலகமெங்கும் வெவ்வேறு நாடுகளில் கிளைகளைக் கொண்ட பெரிய நிறுவனமாக இருப்பின் கிளைகளுக்கு இடையேயான தகவல் பாய்வுக்குக் கணினிப் பிணையங்கள் (Computer Networks) கட்டாயத் தேவை ஆகும்.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, அகநிலைச் செயல்பாடுகளுக்கான தகவல்கள் மட்டுமின்றி புறநிலையான தகவல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்நிறுவனச் செய்பொருள்களின் (Products) வினியோகம் (Supply) மற்றும் அவற்றின் தேவை (Demand) பற்றிய சரியான கணிப்புகளும் புள்ளி விவரங்களும் கைவசம் இருக்க வேண்டும். போட்டி நிறுவனங்களின் செய்பொருளுக்குச் சந்தையில் இருக்கும் மதிப்பு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட தொழில்துறை பற்றிய அரசின் அணுகுமுறை, வரி, தீர்வை, சுங்கம் பற்றிய அரசின் சட்டங்கள், சலுகைகள், கட்டுப்பாடுகள் ஆகியவை பற்றிய சரியான தகவல்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
சந்தைப் போட்டிகளைச் சமாளிக்க தனக்கிருக்கும் பலம் (strengths) மற்றும் பலவீனங்கள் (Weaknesses), பிற நிறுவனங்களைக் காட்டிலும் தனக்குக் கூடுதலாக அமைந்துள்ள வாய்ப்புகள் (Opportunities) மற்றும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் (Threats) ஆகியன பற்றி ஒரு நிறுவனம் பகுப்பாய்வு (Swot Analysis) செய்ய வேண்டும். இல்லையேல் வணிகத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிடும். ஸ்வோட் பகுப்பாய்வுக்கு ஒரு நிறுவனம், பெருமளவு தகவல்களைச் சார்ந்துள்ளது. தகவல் முறைமைகளும் (Information systems), தகவல் முறைமை மேலாளர்களும் (Information System Manager) இதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
1.1.4 தொழில்நுட்பமும்
தகவலும் தகவல் பரிமாற்றமும் மனித இனம் தோன்றிய காலந்தொட்டே இருந்து வருபவைதாம். நாகரிக வளர்ச்சியில் தகவலின் தன்மையிலும், தகவல் பரிமாற்ற வழி முறையிலும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீன வாழ்வின் நடைமுறைச் செயல்பாடுகள் தகவலைச் சார்ந்தே அமைந்துள்ளன. எனவே, தகவல் பரிமாற்றத்தில் நுட்பமும் வேகமும் தேவைப்படுகின்றன.
நடந்து சென்றே தகவலைச் சொன்ன மனிதன் நாளடைவில் ஒலி/ஒளி (முரவு / நெருப்பு) தகவலைப் பரப்பக் கற்றுக் கொண்டான். அடுத்து, புறாக்கள் தகவல் பரிமாற்ற ஊடகமாய்ப் பயன்பட்டன. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் வாகனங்கள் வலம்வந்த நீராவியின் கண்டுபிடிப்புக்குப் பின் போக்குவரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. அஞ்சல் வழியே தகவல் பரிமாற்றம் வேகம் பெற்றது. தந்தியும் தொலைபேசியும் வந்தபின் தகவல் பரிமாற்றம் புதிய பரிமாணம் கண்டது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Communication Technology) பல்வேறு பரிமாணங்களைக் கடந்து வந்துள்ளது. இரும்புக் கம்பியில் தந்திச் சேவை தொடங்கியது. செப்புக் கம்பியில் தொலைபேசி பேசியது. இணையச்சு வடம் (Co-axial cable), நுண்ணலை (Microwave), செயற்கைக்கோள் (Satellite), ஒளிவ இழை (Optical Fibre) எனப் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. மின்னணுத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி தகவல் தொடர்பில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டுவந்தன.
கணினியின் கண்டுபிடிப்பு மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தது. மின்னணுத் தொழில்நுட்பமும் கணினித் தொழில்நுட்பமும் போட்டி போட்டு வளர்ந்தன. தொலைதொடர்பு (Telecommunication) தொழில்நுட்பம் மற்றும் கணினித் தொழில்நுட்பத்தின் சங்கமத்தில் இணையம் பிறந்தது. அத்தோடு, தகவல் தொழில்நுட்பம் (Information Technology) என்றி புதிய தொழில்நுட்பமும் உருவானது.
இணையம் வழியாக, மின்னஞ்சல் மூலமும் (E-mail), உடனடிச் செய்தி (Instant Messenger) மற்றும் இணைய அரட்டை (Chat) மூலமாகவும் உலகமெங்கும் வாழும் மக்கள் உடனுக்குடன் தகவலைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. உலகளாவிய தொலைபேசிப் பிணையத்தை (Telephone Network) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இணையம், இன்றைக்குத் தனித்தனி தகவல் போக்குவரத்து ஊடகமாய்ப் பரிணமித்துள்ளது. இணையம், தகவல் நெடுஞ்சாலை (Information Highway) எனவும், சைபர் வெளி (cyber space) எனவும் அழைக்கப்படுகிறது. இணையக் கட்டமைப்பு வழியாகவே தொலைபேசித் தொடர்பும் சாத்தியமாகிறது.