தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Coursee- தரவு – தகவல் –அறிவு (Data –Information – Knowledge)

  •  

    1.2 தரவு – தகவல் – அறிவு – ஞானம் (Data – Information – Knowledge – Wisdom)

    தரவுகள் தகவலின் கூறுகள். தரவுகளிலிருந்தே தகவல் பெறப்படுகிறது. அறிவுக்கு ஆதாரம் தகவல். தகவலின் பிழிவாய் அறிவு பெறப்படுகிறது. பயன்பாடு என்ற நோக்கில் பார்த்தால் இவை நிகரான பயன்மதிப்புகளைக் கொண்டவை அல்ல. சரியாகச் சொல்வதெனில் இவற்றின் பயன் மதிப்புகள் ஏறுமுக வரிசையில் (Ascending Order) அமைந்துள்ளன. அதாவது, தரவு குறைந்த பயன்மதிப்பையும் அறிவு உயர்ந்த பயன் மதிப்பையும் கொண்டுள்ளன. ஒட்டுமொத்த நோக்கில் இவை மனித குலத்தின் மதிப்புமிக்க சொத்துகளாய் அமைந்துள்ளன. மனித சமூகத்தின் அனைத்து மேம்பாட்டுச் செயலாக்கங்களுக்கும் விலைமதிப்பில்லா மூலதனமாய் விளங்குகின்றன.

    1.2.1 தரவும் தகவலும்

    தரவும் தகவலும் நெருக்கமான தொடர்புகொண்டவை. தரவு இல்லையேல் தகவல் இல்லை. தரவு என்பது கண்டறியப்படும் ஒரு மெய்ம்மை (fact). இன்னும் துல்லியமாகச் சொல்வதெனில் மனித மூளையால் உணரப்படும் ஒரு மெய்ம்மை எனலாம். ஒரு குறிப்பிட்ட செயல்பாடு தொடர்பாக முறையான ஆய்வுகள் மூலம் பெறப்பட்டதாகவும் இருக்கலாம்.

    தரவு என்பது முறைப்படுத்தப்படாத அல்லது செயலாக்கம் பெறாத தகவல் ஆகும். கச்சாத் தகவல் (Raw Information) எனச் சொல்லலாம். அதாவது, தரவுக்குத் தகவல் ஆகும் தகுதி உண்டு. ஆனால் அதுவே தன்னளவில் தகவல் ஆகிவிடாது.

    செயலாக்கம் பெற்ற தரவே (Processed data) தகவலாய்ப் பரிணமிக்கிறது. அதாவது தகவல் என்பது தரவுகளின் சாரம் எனலாம். தரவுகள் தெரிந்துகொள்ளப்பட வேண்டியவை. தகவல்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை.

    புள்ளி விவரங்களாய்க் கிடக்கும் தரவுகளால் நேரடிப் பயன் எதுவுமில்லை. அவற்றை அலசி, ஆராய்ந்து சாரமாய்ப் பெறப்படும் தகவலே நம்மை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இட்டுச் செல்கின்றது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் அட்டவணைகளில் தொகுக்கப்படுகின்றன. மாநில வாரியாக, இனம் வாரியாக வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களை ஒப்பிட்டு அறிந்துகொண்ட பிறகுதான், அரசின் ஐந்தாண்டுத் திட்டத்தில் நியாயமான நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய முடியும்.

    25 என்று சொன்னால் அது ஓர் எண். 25 ஆண்டுகள் என்று சொன்னால் அது ஒரு காலகட்டம். குமரன் பிறந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சொன்னால் அது குமரனின் வயதைக் குறிக்கிறது. குமரன் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரின் வயதுகளையும் ஏறுமுக வரிசையில் அட்டவணைப் படுத்தும்போது (தரவுச் செயலாக்கம்) அந்த அலுவலகத்திலேயே குமரன்தான் இளையவர் என்கிற தகவல் பெறப்படுகிறது.

    அலுவலகப் பணியாயினும், நிறுவனச் செயல்பாடாயினும், அரசின் நடவடிக்கை ஆயினும், தரவுகளைச் சேகரித்துச் சேமித்து வைத்து, தரவுச் செயலாக்கம் (Data Processing) மூலம் தகவலைப் பிரித்தெடுப்பது கட்டாயத் தேவையாகிவிட்டது. இந்தச் செயலாக்கத்தில் கணினிகளும் கணினிப் பிணையங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. தரவுத் தள மென்பொருள்களும் (Database Software) தரவுத்தள நிர்வாகிகளும் (Database Administrators) இன்றியமையா இடம் வகிக்கின்றனர்.

    1.2.2 தகவலும் அறிவும்

    தகவல்களின் பிழிவாக அறிவு பெறப்படுகிறது. அறிவு என்பது முறைப்படுத்தப்பட்ட கருத்துகளின் தொகுப்பு. தகவல்களிலிருந்து பெறப்படும் கணிப்பாகவோ, ஆய்வுகளிலிருந்து பெறப்படும் முடிவாகவும் இருக்கலாம். புதிய முடிவுகளாகவோ, பழைய முடிவுகளின் புதிய பொருள் விளக்கமாகவோ இருக்கலாம். கற்றலில் கேட்டலில் கற்பித்தலில் அறிவு வெளிப்படுகிறது. தாள்கள், நூல்கள், தகவல் தொடர்வு ஊடகங்களின் மூலமாக அறிவு பரவுகிறது. இன்றைக்குக் கணினியும் இணையமும் அறிவின் வளர்ச்சிக்கும், பரவலுக்கும் ஆதாரமாய் விளங்குகின்றன.

    நிகழ்கால நடப்புகள், நடவடிக்கைகள், அரசின் சட்டங்கள், விதிமுறைகள், அவைகளின் தீர்மானங்கள், நீதிமன்றங்களின் தீர்ப்புகள் , இவை பற்றிய செய்திகள், அறிக்கைகள் போன்றவற்றைத் தகவல் என வகைப்படுத்தலாம். இவற்றின் பொருள் விளக்கமும் விமர்சனக் கருத்துரைகளுமே அறிவு என்று அறியப்படுகின்றன.

    தெரிந்து கொள்ளப்பட்ட தரவுகளிலிருந்து புரிந்துகொள்ளப்பட்டவை தகவல்கள் ஆகும். புரிந்துகொள்ளப்பட்ட தகவல்களிலிருந்து அறிந்து கொள்ளப்பட்ட முடிவுகள் அறிவு ஆகும். ஃபிரிட்ஜ் மேக்லப் (Fritz Machlup) என்னும் அறிஞர், தகவலையும் அறிவையும் வேறுபடுத்திக் காட்டுகிறார்.

    தகவல் என்பது ஒரு செயலாக்கம் (Process), செய்திகளின் பாய்வு (Flow), சொல்லப்படுவது அல்லது கேட்கப்படுவது. ஆனால் அறிவு என்பது அறிந்து கொள்ளும் ஒரு நிலை (State) அல்லது ஒரு புலன் (Sense) சேர்த்து வைக்கப்பட்ட இருப்பு (Accumulated stock). எனவே தகவல் பாய்வு (Flow of information), அறிவு இருப்பு (Stock of Knowledge) எனப் பேசப்படுகிறது. ஃபிரிட்ஜ் மேக்லப் அவர்கள் தகவலையும் அறிவையும் இவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறார்.

    தகவல்
    -
    அறிவு
    1.
    துண்டுதுண்டாக இருக்கும், சிதறிக் கிடக்கும், மிகவும் குறிப்பானது.
    -
    கட்டமைப்பானது, சேர்ந்திசைவுடையது, பொதுவானது.
    2.
    நிலையில்லாதது, நீடித்தில்லாதது.
    -
    இருப்பானது, நீடித்திருப்பது.
    3.
    செய்திகளின் பாய்வு, ஊடகங்களில் பயணிப்பது.
    -
    தகவல் பாய்வுகள், பரிமாற்றங்களின் விளைவான இருப்பில் கூடுதலாகச் சேரும். மறுசீரமைக்கும் அல்லது மாற்றியமைக்கும்.

    அறிவு, அனுபவத்தோடு தோய்ந்து மெய்யறிவாகப் பரிணமிக்கும்போது அதனை ஞானம் என்கிறோம். பட்டுணர்ந்த பகுத்தறிவு, விவேகம் மிக்க மதிநலம், ஆழம்மிக்க அறிவு நுட்பம் ஞானமாகப் பரிணமிக்கிறது. தரவு – தகவல் – அறிவு – ஞானம் என்பது தொடர்ச்சியான படிமுறை வளர்ச்சியைக் குறிக்கிறது. ஒன்று இன்னொன்றாக மாறுகிறது. ஒன்றிலிருந்து இன்னொன்று பெறப்படுகிறது.

    தரவு, தகவல், அறிவு, ஞானம் ஆகிய நான்குக்கும் இடையேயுள்ள உறவுமுறையை ஓர் எளிய எடுத்துக்காட்டு மூலம் விளங்கிக் கொள்ளலாம். பருத்தி என்கிற மூலப்பொருளைத் தரவு என எடுத்துக் கொண்டால், பருத்தியிலிருந்து பெறப்படும் நூல் என்னும் இடைப்பொருளோடு தகவலை ஒப்பிடலாம். நூலினால் நெய்யப்படும் துணியே அறிவாகும். துணியை முறையாகக் கத்தரித்துத் தைக்கப்பட்ட அழகான ஆடையே ஞானம் எனலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:44:04(இந்திய நேரம்)