Primary tabs
-
1.6 தகவல் முறைமையின் வகைகள்
ஓர் அலுவலகம் ஆயினும் ஒரு நிறுவனம் ஆயினும் அதன் அகச் செயல்பாடுகளுக்கும் புற நடவடிக்கைகளுக்கும் தகவல்கள் இன்றியமையாதவை. தகவல்களை முறைப்படி கையாள்வதற்கு தகவல் முறைமைகள் தவிர்க்க முடியாதவை. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதன் நோக்கம், செயல்பாடு, அளவு, வீச்சு ஆகியவற்றுக்கு ஏற்ப தகவல் முறைமையின் தன்மையிலும் வேறுபடக் கூடும். ஒரு வணிக நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் அதன் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவுகின்ற தகவல் முறைமைகள் தேவை. இதை தவிர அந்நிறுவனத்தின் மேலாண்மை, சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவும் தகவல் முறைமைகளும் தேவை.
1.6.1 செயல்பாட்டுத் தகவல் முறைமைகள்
ஒரு வணிக நிறுவனத்தின் அல்லது தொழிற்கூடத்தின் உற்பத்தி, இருப்பு, விற்பனை ஆகிய செயல்பாடுகளையும் நிதி வரவு-செலவு கணக்குகளுக்கான தகவல்களையும் முறைப்படுத்துவது அவசியம். தொழிற்கூடத்தின் உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளுக்கு, செயலாக்கக் கட்டுப்பாட்டு முறைமைகள் உதவுகின்றன. பரிமாற்றச் செயலாக்க முறைமைகள் எனப்படுகின்றன. பரிமாற்றச் செயலாக்கம் என்பது வாடிக்கையாளர், நிறுவனம், சரக்குக் கிடங்கு, தொழிற்கூடம் ஆகியவற்றுக்கு இடையே முறையான தொடர்புகளைப் பராமரிக்கும் அன்றாடச் செயல்பாடுகளைக் குறிக்கின்றன. அலுவலகத்தில் பணியாளர்கள், அவர்களின் சம்பளம், பயிற்சி, பதவி உயர்வு, பணி ஓய்வு, மற்றும் இதுபோன்ற தகவல்களைப் பராமரிக்க அலுவலகத் தகவல் முறைமை தேவைப்படுகிறது.
1.6.2 மேலாண்மைத் தகவல் முறைமைகள்
செயல்பாட்டுத் தகவல் முறைமைகள் அன்றாட நடவடிக்கைகளக்குப் பயன்படுபவை. மேலாண்மைத் தகவல் முறைமைகள், நிறுவன மேலாண்மை அவ்வப்போது உரிய தீர்மானங்களை எடுக்க உதவுபவை. அவ்வப்போது என்கிற காலகட்டம் வாரமாக, மாதமாக ஏன் ஆண்டுகளாகக் கூட இருக்கலாம். வணிகத்தை விரிவுபடுத்தலாமா, புதிய உற்பத்திப் பொருளை அறிமுகப்படுத்தலாமா, லாபமில்லாத ஒரு கிளையை மூடிவிடலாமா, புதிய தொழிலில் முதலீடு செய்யலாமா, வேறொரு நிறுவனத்தை விலக்கு வாங்கலாமா, இன்னோர் நிறுவனத்துடன் இணைத்துவிடலாமா, பொருளின் விலையைக் குறைக்கலாமா, தரத்தைக் கூட்டலாமா – என்பது போன்ற முடிவுகளை மேற்கொள்ள மேலாண்மைத் தகவல் முறைமைகள் உதவுகின்றன.
பரிமாற்றச் செயலாக்கத் தகவல் முறைமையின் தகவல்களிலிருந்து குறிப்பிட்ட காலக்கெடுவில் (வார/மாத/காலாண்டு) முன்வரையறுக்கப்பட்ட அறிக்கைகளை மேலாளர்களுக்கு வழங்குவது மேலாண்மை அறிவிப்பு முறைமை ஆகும். மேலாண்மை, உரிய நேரத்தில் உரிய முடிவுகளை மேற்கொள்ள இந்த அறிக்கைகள் பயன்படும். நிறுவனத்தில் அவ்வப்போது முக்கிய முடிவுகளை எடுக்க தீர்மான உதவி முறைமைகள் உதவுகின்றன. மாதிரியம், பாவிப்பு, தீர்வுக் கருவிகள் போன்ற நவீன நுட்பங்களின் வாயிலாக, இத்தகவல் முறைமைகள், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை மேற்கொள்ள மேலாளர்களுக்கு உதவுகின்றன. தீர்மான உதவி முறைமைகள் பெரும்பாலும் இடைநிலை மேலாண்மைக்கு உதவுகின்றன. உயர்மட்ட மேலாண்மைக்கு தேவையான மிகமுக்கிய செயல்தந்திர தகவல்களை வழங்குபவை உயர்மேலாண்மைத் தகவல் முறைமைகள் என்று அழைக்கப்படுகின்றன. நிறுவனத்தில் திருப்புமுனையான முக்கிய முடிவுகளை மேற்கொள்ள இத்தகவல் முறைமை உதவுகிறது.
ஒரு புற்றுநோய் மருத்துவர் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார். உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான புற்றுநோய் மருத்துவர்கள் லட்சக்கணக்கான நோயாளிகளைச் சந்திக்கின்றனர். அனைத்து மருத்துவர்களின் அறிவையும் அனுபவத்தையும் ஆலோசனைகளையும் ஒரு கணினி முறைமையில் சேமித்து வைத்துக் கொண்டு புற்றுநோய் பற்றிய எவ்வித ஐயத்துக்கும் ஆலோசனை பெறமுடியும். எந்த ஒரு தனிப்பட்ட மருத்துவரைக் காட்டிலும் இக்கணினி அமைப்பு கூடுதலான அறிவும் அனுபவமும் பெற்றதாக இருக்கும். இத்தகைய தகவல் முறைமைகள் வல்லுநர் முறைமைகள் என்று அழைக்கப்படுகின்றன. அறிவுசார்ந்த முறைமைகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
மருத்துவம், வேளாண்மை, வானிலை, விண்வெளி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் வல்லுநர் முறைமைகள் பெருமளவு பயன்படுகின்றன. புயல், பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகளை முன்னறிந்து சொல்லும் ஆற்றல் இந்த வல்லுநர் முறைமைகளுக்கு உண்டு.
1.6.4 செயற்கை நுண்ணறிவு முறைமைகள்
கணினிகள் மனிதனின் ஆணைகளுக்குக் கட்டுப்பாட்டே செயல்படுகின்றன. சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் கணினிகளுக்குக் கிடையாது. மனிதனைப் போல சிந்திக்கும் ஆற்றலை கணினிக்கு ஊட்டுவது அவ்வளவு எளிதான செயலன்று. எனினும் அனுபவத்தின் அடிப்படையில் மனிதன் புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறான். அத்தகைய அனுபவ அறிவை கணினிகளுக்கு வழங்க முடியும். நேரம், காலம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாகக் கணினிகளைச் செயல்பட வைக்க முடியும். இத்தொழில்நுட்பத்தை செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கின்றனர்.
ஆளில்லா வாகனம் சந்திரமண்டலத்தில் புகுந்து, சந்திரனின் மேற்பரப்பில் நடமாடி மண்ணைத் தோண்டி எடுத்து வருகிறது. செவ்வாய்க் கிரகத்தில் பயணம் செய்கிறது. கணினி, மனிதனுக்கு நிகராகச் சதுரங்கம் ஆடுகிறது. உலகச் சதுரங்க வீரரையே தோற்கடித்துக் காட்டுகிறது. முந்தைய அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த முறை புத்திசாலித்தனமாகச் செயல்படும் ஆற்றல் இக்கணினி முறைமைகளுக்கு உண்டு. செயற்கை நுண்ணறிவு முறைமை தகவல் முறைமைகளின் உச்சகட்ட வடிவம் ஆகும்.