தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- தகவல் முறைமையின் கூறுகள் (Components Of Information System)

  • 1.4 தகவல் முறைமையின் கூறுகள்

    பொதுவான ஒரு முறைமையின் அமைப்புக் கூறுகளையும் செயல்பாடுகளையும் அறிந்து கொண்டோம். இனிக் குறிப்பாகத் தகவல் முறைமையின் கூறுகள் பற்றியும் அது செயல்படும் முறையையும் படித்தறிவோம். உள்ளீடு, செயலாக்கம், வெளியீடு, கட்டுப்பாடு போன்ற அமைப்பு தகவல் முறைமையிலும் செயல்படுகின்றன. ஆனால் தகவல் முறைமை பல்வேறு வளங்களை (Resources) சார்ந்தே செயல்படுகிறது. தரவுகளை உள்ளீடாகப் பெற்று அவற்றைச் செயல்படுத்தி தகவல்களைப் பிழிந்து தரும் பணியே தகவல் முறைமையின் முக்கியச் செயல்பாடு. தரவுகள், தகவல்கள் பற்றி ஏற்கெனவே நாம் விரிவாக அறிந்துள்ளோம். தகவல் முறைமையின் இச்செயற்பணிக்கு கீழ்க்காணும் உறுதுணைகள் அவசியம் தேவையாகும்.

    1.
    மக்கள் (People).
    2.
    வன்பொருள் (Hardware).
    3.
    மென்பொருள் (software).
    4.
    தரவு (Data).
    5.
    பிணையங்கள் (Networks).

    தகவல் முறைமையின் செயல்பாடுகள் உள்ளே சித்தரிக்கப்பட்டுள்ளன. அவை பற்றி அடுத்த பத்தியில் படிப்போம். தகவல் முறைமையின் ஐங்கரங்களாக விளங்கும் அமைப்புக் கூறுகள் பற்றித் தனித்தனியே விளக்கம் காண்போம்.

    1.4.1 மக்கள்

    தகவல் முறைமையின் அங்கமாக விளங்கும் மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    1.
    படைப்பாளிகள்
    2.
    பணியாளர்கள்
    3.
    பயனீட்டாளர்கள்

    தகவல் முறைமையை வடிவமைத்து உருவாக்கியவர்களே படைப்பாளிகள். முறைமைப் பகுப்பாய்வர் (System Analyst), முறைமை வடிவாக்குநர் (System Designer), முறைமை உருவாக்கிகள் (System Developers) ஆகியோரைப் படைப்பாளிகள் வரிசையில் சேர்க்கலாம். கணினி நிரலர்கள் (Programmers), உருவாக்கிகளில் அடங்குவர். தகவல் முறைமைக்குத் திட்டமிடும் மேலாண்மைப் பிரிவினரையும் படைப்பாளர்கள் பிரிவிலேயே சேர்க்க வேண்டும்.

    தகவல் முறைமையின் அங்கமாய் இருக்கும் கணினிகளை இயங்குபவர்கள், பராமரிப்பவர்கள், தரவுகளை உள்ளீடு செய்பவர்கள் (Data Entry Operators), மற்றும் தகவல் முறைமை மையத்தில் பணியாற்றும் பிறரும் பணியாளர்கள் பிரிவில் அடங்குவர்.

    மூன்றாவது பிரிவினர் பயனீட்டாளர்கள், இறுதிப் பயனர்கள் (End Users) என்னும் அழைக்கப்படுவர். தகவல் முறைமையின் வெளியீடுகளால் பயன்பெறுபவர்கள். தகவல் முறைமையில் பெறப்படும் தகவல்களை தமது அன்றாடப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள், கணக்காளர்கள் (Accountants), விற்பனைப் பிரதிநிதிகள் (Sales Persons), வாடிக்கையாளர்கள் (Customers), மேலாளர்கள் (Managers) மற்றும் தகவல் முறைமையால் பயன்பெறும் வேறெவரையும் இப்பிரிவில் அடக்கலாம்.

    1.4.2 வன்பொருள்

    தகவல் முறைமையில் தரவுச் செயலாக்கம் உட்பட அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் கணினிகள் இதில் அடக்கம். கணினி எனில், கணினிக்குள் இருக்கும் நுண்செயலி நினைவகம் மட்டுமின்றி திரையகம், விசைப்பலகை, சுட்டி, அச்சுப்பொறி, வருடி, வரைவி போன்ற அனைத்துப் புறநிலைச் சாதனங்களையும் குறிக்கும்.

    தகவல் முறைமையின் வன்பொருள் என்பது, கணினிகளை மட்டுமின்றி கண்ணால் கண்டுணரும் அனைத்துப் பருப்பொருள்களையும் குறித்து நிற்கிறது. எனவே தகவல் முறைமைக்காகப் பயன்படுத்தப்படும் தரவுச் சேமிப்புச் சாதனங்களான காந்தநாடாக்கள், மின்காந்த வட்டுகளையும் வன்பொருளில் சேர்க்க வேண்டும். அச்சிடுவதற்கான தூள்களும் வன்பொருளில் அடங்கும்.

    1.4.3 மென்பொருள்

    பொதுவாக மென்பொருள் என்பது கணினியை இயக்குவதற்குத் தேவையான நிரல்களை (Programs) குறித்தபோதும் தகவல் முறைமையின் மென்பொருள்களை நான்கு பிரிவுகளில் அடக்கலாம்.

    (1) முறைமை மென்பொருள் : கணினியை இயக்குவதற்குக் கட்டாயம் தேவைபடுகின்ற இயக்க முறைமையும் (Operating System) பிற பயன்கூறு நிரல்களும் (Utility Programs) இதில் அடங்கும்.
    (2) பயன்பாட்டு மென்பொருள் : தகவல் முறைமையின் இறுதிப் பயனர்கள் பயன்படுத்தும் விற்பனைப் பகுப்பாய்வு நிரல், சம்பளக் கணக்கு நிரல், சொல் செயலி நிரல் போன்ற பயன்பாட்டு நிரல்களைக் குறிக்கிறது.
    (3) செய்முறைகள் : தகல் முறைமையைப் பயன்படுத்துபவர்களுக்கான செயல்முறை வழிகாட்டுதல்களை இவை குறிக்கின்றன. தகவல் முறைமையில் ஒரு படிவத்தை நிறைவு செய்வது எப்படி, ஓர் அறிக்கையை அச்சிடுவது எப்படி, குறிப்பிட்ட மென்பொருளை இயக்குவது எப்பது என்பது போன்ற வழிகாட்டுதல்கள் இதில் அடக்கம்.

    கணினி வன்பொருள், மென்பொருள்கள் பற்றி நான்காவது ஐந்தாவது பாடங்களில் விரிவாகப் படிக்க இருக்கிறோம்.

    1.4.4 தரவுகள்

    தகவல் முறைமைக்குத் தரவுகளே மூலப்பொருள் என்பது சொல்லாமலே விளங்கும். மூலப்பொருள் என்பதைவிட மூலதனம் என்பது பொருத்தமாக இருக்கும். ஒரு நிறுவனம் பிற நிறுவனங்களுடன் போட்டியிட்டு முன்னணிக்கு வர வேண்டும் எனில், ஏராளமான தரவுகளைச் சேகரித்துச் சேமித்து வைத்து அவற்றை திறமையுடன் கையாள வேண்டும்.

    தரவுகளை அகநிலைத் தரவுகள், புறநிலைத் தரவுகள் எனப் பிரிக்கலாம். ஒரு நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான தரவுகளை அகநிலைத் தரவுகள் எனலாம். பிற நிறுவனங்கள் பற்றிய தரவுகள், அரசின் விதிமுறைகள் பற்றிய தரவுகள், வரி, தீர்வை, சுங்கம் பற்றிய தரவுகள் – இவற்றைப் புறநிலைத் தரவுகள் எனலாம்.

    தரவுகள் பல வடிவங்களில் அமையும். பெரும்பாலான தரவுகள் எண்களாகவும் எழுத்துகளாகவும் அமைந்துள்ளன. சொற்களாகவும் தொடர்களாகவும் இருக்கலாம். இவை தவிர, படங்களாகவும் (Pictures), படிமங்களாகவும் (images) தரவுகள் இருக்க முடியும். மனிதரின் பேச்சுக் குரல் உட்படக் கேட்போலி (audio) மற்றும் நிகழ்பட (video) வடிவிலும் தரவுகள் இருக்க முடியும்.

    தரவுகள், தரவுத் தளங்களில் (Database) சேமித்து வைக்கப்படுகின்றன. தரவுத் தளம் என்பது மென்பொருளில் ஒரு வகை ஆகும். தரவுத் தளங்கள் காந்த நாடா மற்றும் வட்டுகளில் எழுதி வைக்கப்படுகின்றன. சேமிக்கப்பட்ட தரவுகளிலிருந்து தகவல்களை பிழிந்தெடுக்கவும், அறிக்கையாகவும் அச்சுப்பொறியாகவும் பெறுவதற்கு பல்வேறு மென்பொருள் நிரல்கள் பயன்படுகின்றன.

    1.4.5 பிணையங்கள்

    ஒரேயொரு சிறிய அலுவலகத்துக்கு தகவல் முறைமையை அமைக்க ஒரேயொரு கணினி போதும். ஆனால் உலகம் முழுவதும் அல்து நாடு முழுவதும் கிளைகளைப் பரப்பியுள்ள ஒரு பெரிய வணிக நிறுவனத்துக்கு ஒரேயொரு கணினி போதாது. ஒரே நகரில் பல்வேறு கிளைகளையுடைய நிறுவனத்துக்கும், ஒரே இடத்தில் பல்வேறு பணிப்பிரிவுகளை உடைய நிறுவனத்துக்கும்கூட ஒரேயொரு கணினி போதாது. பல்வேறு கணினிகள் தேவைப்படும். அதுமட்டுமின்றி தரவுகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு அவை ஒன்றிணைக்கப்பட வேண்டும். பல கணினிகளைப் பிணைத்து, ஒன்றுக்கொன்று ஊடாடிச் செயல்படும் ஓர் அமைப்பையே பிணையம் (Network) என்கிறோம்.

    கணினிப் பிணையம் இல்லையேல் தகவல் முறைமை என்னும் கருத்துருவே உருபெற்றிருக்க வாய்ப்பில்லை. அதுபோலவே தொலை தகவல் தொடர்புப் பிணையம் (Telecommunication Network) இல்லையேல் கணினிப் பிணையத்தையோ இன்றைய இணையத்தையோ (Internet) எண்ணிப் பார்க்க இயலாது.

    தகவல் முறைமையில் பங்குபெறும் பிணையங்கள் என்பவை (1) தகவல் தொடர்பு ஊடகங்கள் (2) பிணைய வன்பொருள்கள் (3) பிணைய மென்பொருள்கள் (4) விணைய நிர்வாகிகளை உள்ளடக்கியதாகும். செப்புக் கம்பிகள், இணையச்சு வடங்கள், ஒளிவ இழைகள், நுண்ணலை, செயற்கைக்கோள் ஆகியவை தகவல் தொடர்பு ஊடகங்களாகப் பயன்படுகின்றன. வழங்கி (Server) மற்றும் நுகர்வி (Client) கணினிகள், குவியம் (Hub), தொடர்பி (Switch), திசைவி (Router), நுழைவி (Gateway) போன்ற சாதனங்களை பிணைய வன்பொருளில் அடக்கலாம். பிணைய இயக்க முறைமை (Network Operating System) மற்றும் தகவல் தொடர்பு மென்பொருள் (Communication Software) ஆகியவை பிணைய மென்பொருள்களாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:44:26(இந்திய நேரம்)