தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அள்ளூர் நன்முல்லையார்


அள்ளூர் நன்முல்லையார்

32. குறிஞ்சி
காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே.
பின்நின்றான் கூறியது. - அள்ளூர் நன்முல்லையார்

67. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப்
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை

68. குறிஞ்சி
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே.
பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது. - அள்ளூர் நன்முல்லை

93. மருதம்
நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய்,
இன் உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ?
புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே?
வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லையார்

96. குறிஞ்சி
'அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது
நகை என உணரேன்ஆயின்,
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே,
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது- அள்ளூர் நன்முல்லை

140. பாலை
வேதின வெரிநின் ஓதி முது போத்து,
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும்
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து,
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று-இவ் அழுங்கல் ஊரே?
பொருள்வயிற் பிரிந்த இடத்து, 'நீ ஆற்றுகின்றிலை' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அள்ளூர் நன்முல்லை.

157. மருதம்
'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்-
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை

202. மருதம்
நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே!
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு,
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே!
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லை

237. பாலை
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ,
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே;
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு,
கோட் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே?
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது - அள்ளூர் நன்முல்லை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:05:07(இந்திய நேரம்)