Primary tabs
7 துயில் எழுப்பிய காதை
[ மணிமேகலாதெய்வம் உவவனம்புகுந்து
சுதமதியைத் துயில் எழுப்பிய பாட்டு ]
மணிமே கலைதனை மணிபல் லவத்திடை
மணிமே கலாதெய்வம் வைத்து நீங்கி
மணிமே கலைதனை மலர்ப்பொழில் கண்ட
உதய குமரன் உறுதுயர் எய்திக்
கங்குல் கழியில்என் கையகத் தாள்எனப்
பொங்குமெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூரும்
மாரிவறங் கூரின் மன்உயிர் இல்லை
மன்உயிர் எல்லாம் மண்ஆள் வேந்தன்
தன்உயிர் என்னும் தகுதிஇன்று ஆகும்
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
உவவனம் புகுந்துஆங்கு உறுதுயில் கொள்ளும்
சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி
இந்திர கோடணை இந்நகர்க் காண
வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்
ஆதிசால் முனிவன் அறவழிப் படூஉம்
ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின்
விஞ்சையின் பெயர்த்துநின் விளங்குஇழை தன்னைஓர்
பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்துஈங்கு
இன்றுஏழ் நாளில் இந்நகர் மருங்கே
வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள்
களிப்புமாண் செல்வக் காவல் பேர்ஊர்
ஒளித்துஉரு எய்தினும் உன்திறம் ஒளியாள்
ஆங்குஅவள் இந்நகர் புகுந்த அந்நாள்
மாதவி தனக்குயான் வந்த வண்ணமும்
ஏதம்இல் நெறிமகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீஅவள் என்திறம் உணரும்
திரைஇரும் பௌவத்துத் தெய்வம்ஒன்று உண்டுஎனக்
கோவலன் கூறிஇக் கொடியிடை தன்னைஎன்
நாமம் செய்த நல்நாள் நள்இருள்
காமன் கையறக் கடுநவை அறுக்கும்
மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே
நனவே போலக் கனவகத்து உரைத்தேன்
ஈங்குஇவ் வண்ணம் ஆங்குஅவட்கு உரைஎன்று
அகல்மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு
வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கு அரங்கியல் மகளிரில்
கூடிய குயிலுவக் கருவிகண் துயின்று
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை
கொளைவல் ஆயமோடு இசைகூட் டுண்டு
வளைசேர் செங்கை மெல்விரல் உதைத்த
பண்புஇல் காதலன் பரத்தமை நோனாது
உண்கண் சிவந்தாங்கு ஒல்குகொடி போன்று
தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்
தளர்நடை ஆயமொடு தங்காது ஓடி
விளையாடு சிறுதேர் ஈர்த்துமெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய் குறுநடைப் புதல்வர்க்குக்
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
இறைஉறை புறவும் நிறைநீர்ப் புள்ளும்
காவுறை பறவையும் நாஉள் அழுந்தி
விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று
கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின்
உறையுள்நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
தேர்வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்
முழங்குநீர் முன்துறைக் கலம்புணர் கம்மியர்
துழந்துஅடு கள்ளின் தோப்பிஉண்டு அயர்ந்து
அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம்
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
புலிக்கணத்து அன்னோர் பூத சதுக்கத்துக்
கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்கென
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர்
தம்துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென
கேட்டுஉளம் கலங்கி ஊட்டிருள் அழுவத்து
முருந்துஏர் இளநகை நீங்கிப் பூம்பொழில்
திருந்துஎயில் குடபால் சிறுபுழை போகி
மிக்கமா தெய்வம் வியந்துஎடுத்து உரைத்த
சக்கர வாளக் கோட்டத்து அங்கண்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
கந்துஉடை நெடுநிலைக் காரணம் காட்டிய
அந்தில் எழுதிய அற்புதப் பாவை
மைத்தடங் கண்ணாள் மயங்கினள் வெருவத்
இரவி வன்மன் ஒருபெரு மகளே
துரகத் தானைத் துச்சயன் தேவி
தயங்குஇணர்க் கோதைத் தாரை சாவுற
மயங்கி யானைமுன் மன்உயிர் நீத்தோய்
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே
மாருத வேகனோடு இந்நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய
இன்றுஏழ் நாளில் இடையிருள் யாமத்துத்
தன்பிறப் பதனொடு நின்பிறப்பு உணர்ந்துஈங்கு
இலக்குமி யாகிய நினக்குஇளை யாள்வரும்
அஞ்சல்என்று உரைத்தது அவ்வுரை கேட்டு
காவ லாளர் கண்துயில் கொள்ளத்
தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிதுஎழுந்து ஆர்ப்பப்
புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப்
பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்பப்
பணைநிலைப் புரவி பலஎழுந்து ஆலப்
பணைநிலைப் புள்ளும் பலஎழுந்து ஆலப்
பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ஒலி சிறப்பக்
கடவுள் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்துஎழ
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்துஎழ
ஊர்துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக்
ஏஉறு மஞ்ஞையின் இனைந்ததுஅடி வருந்த
மாநகர் வீதி மருங்கில் போகிப்
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
மாதவி தனக்கு வழுஇன்று உரைத்தலும்
நல்மணி இழந்த நாகம் போன்றுஅவள்
தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப
இன்உயிர் இழந்த யாக்கையில் இருந்தனள்
துயில் எழுப்பிய காதை முற்றிற்று.