Primary tabs
-
பெரியாருடன் பாரதிதாசன்
காங்கிரஸ் இயக்கத்தில் பெரும் பங்கு பெற்றிருந்த பெரியார் ஈ.வெ.இராமசாமி, சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனப் பிள்ளைகளுக்கும், பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளுக்கும் தனிப்பந்தி வைத்து உணவிடுவதை அறிந்தார். அதற்கு ஆதரவளித்த தேசபக்தர் வ.வே.சு. ஐயரின் செயலைப் பெரியார் கண்டித்தார். காங்கிரஸ் இயக்கத்தவர் வருணாசிரமத்தையும் சாதிப் பாகுபாட்டையும் கண்டிக்காத செயலை வெறுத்த பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். பெரியாரின் முயற்சியில் சுயமரியாதைச் சங்கம் தோன்றியது. பெரியார் தோற்றுவித்த 'குடி அரசு' இதழ் சாதி மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, வருணாசிரம எதிர்ப்பு ஆகியவற்றைத் தீவிரமாக வெளிப்படுத்தியது. பாரதிதாசன் இந்த இதழால் கவரப்பட்டார். சுயமரியாதை வீரரானார். 1938-இல் குடி அரசு ஏட்டில் பெரியார்,
"தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல. அவர் சென்ற பத்து ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார். மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் சந்தோஷ வாழ்க்கைக்கும் இன்றியமையாத புரட்சியான பல சீர்திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமன்றி, அவைகளை ஜன சமூகத்தில் பல வழிகளிலும் பரப்ப வேண்டுமென்ற ஆசையைக் கொண்டவர். சிறப்பாகவும் சுருக்கமாகவும் கூற வேண்டுமானால், பாரதிதாசன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி என்றுதான் கூறவேண்டும் . . . "
என்று எழுதியுள்ளதைக் கவிஞரின் மகனார் மன்னர் மன்னன் தம் நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.
நெருப்பில் துடித்திடும் மக்கட் கெல்லாம் நல்ல காப்பு - நல்கும் நீதிச் சுயமரியாதை யென்னும் குளிர் தோப்பு.
என்று சுயமரியாதைப் பெருமையைப் பாரதிதாசன் பாடுவார்.
கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், கதரே உடுத்தும் தேசபக்தராகவும் விளங்கிய பாரதிதாசனைச் சுயமரியாதை வீரராக்கியது பெரியாரின் 'குடி அரசு' ஏடு. புதுவையில் நடந்த சுயமரியாதைப் பொதுக் கூட்டத்திற்கு வந்த பெரியாரைப் பாரதிதாசன் பாட்டு வரவேற்கின்றது.
சுயமரியாதைப் பெயர்கொள் பயிர்செழிக்கத்
தொண்டு செய்யும் இராமசாமித் தலைவா!என்று பெரியாரைப் போற்றும் கவிஞரின் கவிதை 'குடி அரசில்' வெளியிடப்படுகின்றது. கடவுளர்களைப் பாடுவதைக் கவிஞர் அறவே விட்டு விட்டார். 1929ஆம் ஆண்டில் அவரிடம் இம்மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
என்று கவிஞர் கூறினார். கவிஞருக்கு ஊரில் இதனால் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதை அவர் பொருட்படுத்தவில்லை.
.
சிவப்பிரகாசம்கவிஞர் சுயமரியாதைக் கருத்துகளைப் பறைசாற்ற சிவப்பிரகாசம், நோயெல் என்ற நண்பர்களோடு சேர்ந்து 'புதுவை முரசு' என்ற இதழைத் தொடங்கினார். இவ்வேட்டில் பல புனைபெயர்களில் தலையங்கம், கவிதை, கட்டுரை, நூல் மதிப்புரை ஆகியவற்றைக் கவிஞர் எழுதினார். இவ்வேட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை காரணமாகக் கிறித்துவப் பாதிரிமார்கள் வழக்குத் தொடுத்தனர். இப்பத்திரிகைக்குச் சில காலம் குத்தூசி குருசாமியும் பூவாளூர் பொன்னம்பலனாரும் ஆசிரியராக இருந்ததுண்டு. அரசின் நெருக்கடிக்கு உள்ளாகி இவ்வேடு நிறுத்தப்பட்டுவிட்டது.
தொடர்ந்து பல இதழ்களில் எழுதிவந்த பாரதிதாசனைத் திரை உலகம் அழைத்தது. ஒளவை டி.கே. சண்முகம் அவர்களின் வற்புறுத்தலால், 'பாலாமணி அல்லது பாக்தாத் திருடன்' படத்திற்குக் கவிஞர் பாடல்கள் எழுதினார். அதற்குப் பிறகு தேசபக்தர் வ.ரா.வின் அழைப்பின்பேரில் 'ராமானுஜர்' படத்திற்கு உரையாடலையும் பாடல்களையும் வரைந்தார். அவ்வளவு விருப்பமாக இப்பணியை அவர் செய்யவில்லை. எனினும், பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர்கள் எடுத்த படங்களில் எழுதப்பட்ட பாடல்கள் வழியாக அவர் புகழ்பெற்றார். தட்டிப் பறித்தார் என்வாழ்வை என்று தொடங்கும் திரைப்பாட்டு இதோ ஒலிக்கிறது பாருங்கள்!
பாரதிதாசன் பணியாற்றிய திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் தொகுப்பு