48. மருத நிலங் கடந்தது
 

இதன்கண்: வாசவத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போகும் உதயண குமரனைத் தடுத்தற்கு வந்த பிரச்சோதனன் படை மறவரை, உதயணன் மறவர் வென்று வீழ்த்தியதும், பிடியின் வேகத்தைப் பொறாமல் வாசவத்தை வருந்தலும், அவளைக் காஞ்சனமாலை தேற்றுதலும், பிடியானை மருதநிலத்தைக் கடந்ததும் பிறவும் கூறப்படும்.
 
              விழவணி விழுநகர் விலாவணை எய்த
            முழவணி முன்றிலொடு முதுநகர் புல்லென
            அழுகை யாகுல கழுமிய கங்குல்
            மதியா மன்னனைப் பதிவயின் றருமென
        5   வெல்போர் வேந்தன் விடுக்கப் பட்ட
            பல்போர் மறவர் ஒல்லென உலம்பிப்
 
              புடைப்போர்ப் புளகத்து உடப்புமறைப் பருமத்துத்
            தீப்படு கரணத்துக் கணைவிடு விசைய
            செய்வினைத் தச்சன் கைவினைப் பொலிந்த
       10   வேற்றவர் ஒல்என வேற்றினன் பாய்த்துள
            கண்திரள் கலினமொடு பிண்டுகைக் கவ்வித்
            திரைத்தலைப் பிதிர்வின் உரைக்கும் வாயின
            கற்றோர்க்கு அமைந்த கருவி மாட்சிய
            பொன்தார் உடுத்த பொங்குமயிர்ப் புரவி
 
         15   புரவி பூண்ட பொன்னுகக் கொடுஞ்சிப்
            பரவைத் தட்டில் பன்மணிப் பலகை
            அடிதொடைக்கு அமைந்த கிடுகுடைக் காப்பில்
            காழமை குழிசிக் கதிர்த்தஆ ரத்துச்
            சூழ்பொன் சூட்டில் சுடர்மணிப் புளகத்
       20   தாழாக் கடுஞ்செலல் ஆழித் திண்தேர்
 
              திண்டேர்க் கமைந்த தண்டாக் காப்பின்
            குன்றுகண் டன்ன தோன்றல குன்றின்
            அருவி அன்ன உருவுகொ ஓடையர்
            ஒடைக்குள் அமைந்த சூழிச் சுடநுதல்
       25   சோடில வெழுதிய கோலக் கும்பத்து
            இடுபூந் தாமம் இருங்கவுள் இசைஇப்
            படுவண்டு ஓப்பும் பண்ணமை கோலத்து
            விண்உரும் அன்ன வெடிபடு சீற்றத்து
            அண்ணல் யானை அவைஅவை தோறும்
 
         30   மேல்ஆள்கு அமைந்த காலாள் காப்பில்
            கருவிப் பல்படை கடல்கிளர்ந்து எனஉறப்
            பரவை எழுச்சி  பக்கமும் முன்னும்
            வெருவரத் தாக்கி வீழ நூறி
            நல்துணைத் தோழர் உற்றுழி உதவ
       35   அமிழ்தின் அன்ன அம்சில் கிளவி
            மதர்வை நோக்கின் மாதரைத் தழீஇ
            ஓங்கிய தோற்றமொடு ஒருதான் ஆகி
            நீங்கிய மன்னற்கு நிகழ்ந்தது கூறுவேன்
            சேரா மன்னனும் சேனையம் பெரும்பதிக்
       40   ஓரிரு காவதம் ஊரா மாத்திரம்
 
              விரிகதிர் பரப்பி வியலகம் விளக்கும்
            பரிதி ஞாயிறு பல்லவர் காணின்
            அற்றம் தருமென அருள்பெற் றதுபோல்
            கொற்ற வெம்கதிர் குளிர்கொளச் சுருக்கிக்
       45   குண்டுஅகன் கிடக்கைக் குடகடல் குளிப்ப
 
              வண்டகத்து அடக்கிய வாய வாகிக்
            கூலப் பொய்கையுள் நீலமொடு மலர்ந்த
            கோலக் கழுநீர் குழிவாய் நெய்தல்
            எழுநீர்க் குவளையொடு இன்னவை பிறவும்
       50   தாமரை தலையாத் தன்னகர் வரைப்பகம்
            ஏமம் ஆகலிவன் எய்துவன் என்றுதம்
            தூய்மை உள்ளமொடு கோமகற் கூப்பும்
            குறுந்தொடி மகளிர் குவிவிரல் கடுப்ப
            நறுந்தண் நாற்றம் பொதிந்த நன்மலர்த்
       55   தடங்கயம் துறந்த தன்மைய ஆகிக்
            குடம்பை சேர்ந்து குரல்விளி பயிற்றிப்
            புட்புலம் உறுத்த புன்கண் மாலை
            கல்புல மருங்கிண் கலந்த ஞாயிற்று
            வெப்ப நீக்கிதம் தட்பந் தான்செயக் 
 
         60   கண்ணுறு பிறங்கல் கருவரை நுனித்தலை
            வெண்ணிற அருவி வீழ்ச்சி ஏய்ப்ப
            மத்தக மருங்கின் மாலையொடு கிடந்த
            நித்திலத் தாமம் நிலையின் வழாமை
            வைத்த தலையிற் றாக வலிசிறந்து
       65   வித்தகக் கோலத்து வீழ்ந்த கிழவன்குப்
            பத்தினி ஆகிய பைந்தொடிப் பணைத்தோள்
            தத்தரி நெடுங்கண் தத்தை தம்இறை
            ஆணை அஞ்சிய அசைவுநன்கு ஓம்பிக்
            கோணை நீள்மதில் கொடிக்கோ சம்பி
       70   நகைத்துணை ஆயம் மெதிர்கொள நாளைப்
            புகுத்துவல் லென்பது புரிந்தது போலப்
 
              பறத்தரல் விசையினும் பண்ணினும் மண்மிசை
            உறப்புஅனைந்து ஊரும் உதயணன் வலப்புறத்து
            அறியக் கூறிய செலவிற்று ஆகிக்
       75   கோடுதல் செல்லாது கோமகன் குறிப்பறிந்து
            ஓடுதல் புரிந்த உறுபிடி மீமிசைக்
            கூந்தலுங் கூந்தல் வேய்த்த கோதையும்
            ஏந்திளங் கொங்கையும் எடுக்கல் ஆற்றாள்
            அம்மென் மருங்குல் அசைந்தசைந்து ஆடப்
       80   பொம்மென உயிர்க்கும் பூநுதல் பாவையைக்
            கைமுதல் திழீஇக் காஞ்சனை உரைக்கும்
 
              கட்டி லாளர் டன்புகன்று உறையும்
            நாகத்து அன்ன நன்நகர் வரைப்பின்
            ஏகத் திகிரி இருநிலத்து இறைவன்
       85  நீப்பருங் காதல் நின்பயந்து எடுத்த
            கோப்பெருந் தேவியொடு கூடிமுன் நின்று
            பொற்குடம் பொருந்திய பொழிஅமை மணித்தூண்
            நற்பெரும் பந்தருள் முத்துமணல் பரப்பி
            நல்லோர் கூறிய நாளமை அமயத்துப்
       90   பல்லோர் காணப் படுப்பியல் அமைந்த
            செந்தீ அம்தழல் அந்தணன் காட்டச்
 
              சே தா நறுநெய் ஆசின்று உகுத்துச்
            செழுமலர்த் தடக்கையில் சிறப்பொடு மேற்படக்
            கொழுமலர்க் காந்தள் குவிமுகை அன்னநின்
       95   மெல்விரல் மெலிவுகொண்டு உள்ளகத்து ஒடுங்கப்
            பிடித் துவலம் வந்து வடுத்தீர் நோன்பொடு
            வழுவில் வாலொளி வடமீன் காட்டி
            உழுவல் அன்பின் உதயண குமரன்
            அருமறை யாளர்க்கு அருநிதி ஆர்த்திப்
      100    பெருமறை விளங்கப் பெற்றனன் கொள்ளக்
            கொடுத்திலன் என்பது கூறின் அல்லதை
 
              அடுத்தனன் கண்டாய் அணிமுடி யண்ணல்
            வையத் தேன்ஓர் வல்லர் அல்லாத்
            தெய்வப் பேரியாழ் கைவயின் தரீஇ
      105    எழுவியல் கரணம் வழுவிலன் காட்டும் நின்
            ஆசான் இவன்என அருளிய அச்சொல்
            தூசார்ந்து துளும்பும் காசுவிரி கலாபத்துப்
            பைவிரி அல்குல் பாவாய் மற்றுஇது
            பொய்யுரை அன்றிப் புணர்ந்தன்று அதனால்
      110    பொருளென இகழாது பொலங்கலம் மடவோய்
            மருளெனக் கருதிய மடியுறை கேள்மதி
 
              எண்திசை மருங்கினும் எதிர்எதிர் ஓடி
            மண்டில மதியமொடு கதிர்மீன் மயங்கி
            நிலைக்கொண்டு இயலா ஆகித் தம்முள்
      115    தலைக்கொண்டு இயலும் தன்மை போலக்
            கண்ணகன் மருங்கின் விண்ணகம் சுழலும்
            மண்ணக மருங்கின் விண்உற நீடிய
            மலையும் மரனும் நிலையுறல் நீங்கிக்
            கடுகிய விசையொடு காற்றென உராஅய்
      120    முடுகிய இரும்பிடி முகத்தொடு தாக்கிய
            எதிரெழுந்து வருவன போலும் அதிர்வொடு
            மண்திணி இருநிலம் மன்னுயிர் நடுங்கத்
            துளக்கம் ஆனாது ஆசில் நிலைதிரிந்து
            கலக்கம் கொண்டு கைவரை நில்லாது
      125    ஓடுவன போன்ற ஆதலின் மற்றுநின்
            நீடுமலர்த் தடங்கண் பாடுபிறழ்ந்து உறழ
            நோக்கல் செல்லாது இருவென நுதல்மிசை
 
              வேர்த்துளி துடைத்து வித்தக வீரன்
            அருவரை அகலத்து அஞ்சுவனள் நீட்டித்
      130    திருவளர் சாயலைத் திண்ணிதின் தழீஇ
            உவணப் புள்இனம் சிவணிச் செல்லும்
            சிறகர் ஒலியின் திம்என ஒலிக்கும்
            பறவை இரும்பிடிப் பாவடி ஓசையின்
            அவணை போதல் அஞ்சி வேய்த்தோள்
      135    வாள்அரித் தடங்கண் வால்இழை மாதர்
            கேள்விச் செவியில் கிழித்துகில் பஞ்சி
            பன்னிச் செறித்துப் பற்றினை இருஎனப்
            பிடிஇடை ஒடுங்கும் கொடிஇடை மருங்கில்
            நோய்கொளல் இன்றி நொவ்விதின் கடாவல்என்று
      140    ஆய்புகழ் அண்ணல் அசைதல் செல்லான்
 
              அங்கண் அகல்வயல் ஆர்ப்புஇசை வெரீஇய
            பைங்கண் எருமை படுகன்று ஓம்பிச்
            செருத்தல் செற்றிய தீம்பால் அயல
            உருவ அன்னமொடு குருகு பார்ப்புஎழப்
      145    பாசுஅடைப் பிலிற்றும் பழனப் படப்பை
            அறைஉறு கரும்பின் அணிமடல் தொடுத்த
            நிறைஉறு தீந்தேன் நெய்த்தொடை முதிர்வை
            உழைக்கவின்று எழுந்த புழல்கால் தாமரைச்
            செம்மலர் அரங்கண் தீஎடுப் பவைபோல்
      150    உள்நெகிழ்ந்து உறைக்கும் கண்ணகன் புறவில்
 
             பாளைக் கமுகும் பணையும் பழுக்கிய
            வாழைக் கானமும் வார்குலைத் தெங்கும்
            பலவும் பயினும் இலைஉளர் மாவும்
            புன்னையும் செருந்தியும் பொன்இணர் ஞாழலும்
      155    இன்னவை பிறவும் இடையறவு இன்றி
            இயற்றப் பட்டவை எரிகதிர் விலக்கிப்
            பகல்இருள் பயக்கும் படிமத்து ஆகி
            அகலம் அமைந்த அயிர்மணல் அடுக்கத்துக்
            கால்தோய் கணைக்கதிர்ச் சாறுஓய் சாலி
      160    வரம்பணி கொண்ட நிரம்பணி நெடுவிடை
 
              உழவர் ஒலியும் களமர் கம்பலும்
            வளவயல் இடைஇடைக் களைகளை கடைசியர்
            பதலை அரியல் பாசிலைப் பருகிய
            மதலைக் கிளியின் மழலைப் பாடலும்
      165    தண்ணுமை ஒலியும் தடாரிக் கம்பலும்
            மண்அமை முழவின் வயவர் ஆர்ப்பும்
            மடைவாய் திருத்தும் மள்ளர் சும்மையும்
            இடையறவு இன்றி இரைஆறு தழீஇ
            வயல்புலச் சீறூர் ரயல்புலத்து அணுகி
      170    மருதம் தழீஇய மல்லல்அம் பெருவழி
 
              ஒருநூற்று இருபத்து ஓரைந்து எல்லையுள்
            வலப்பால் எல்லை வயல்பரந்து கிடந்து
            அளற்றுநிலைச் செறுவின் அகல்நிலம் கெழீஇ
            இடப்பால் மருங்கில் பரல்தலை முரம்பில்
      175    புன்புலம் தழீ இய புகற்சித்து ஆகி
            வன்தொழில் வயவர் வலிகெட வகுத்த
            படைப்புறக் கிடங்கும் தொடைப்பெரு வாயிலும்
            வாயிற்கு அமைந்த ஞாயில் புரிசையும்
            இட்டுஅமைத்து இயற்றிய கட்டளைக் காப்பின்
      180    மட்டுமகிழ் நெஞ்சின் மள்ளர் குழீஇய
            அருட்ட நகரத்து அல்கூண் அமயத்து
 
              அம்சொல் மகளிர் அடிமிசை ஆற்றும்
            பைம்பொன் பகுவாய்க் கிண்கிணி ஒலியும்
            மைஅணி இரும்பிடி மணியும் பாகுஅவித்து
      185    எய்தினன் மாதோ இருளிடை மறைத்துஎன்.