17. தேவியைப் பிரித்தது

 

இதன்கண்-யூகி, காமச் சேற்றில் அழுந்தித் தன் கடமையில் சோர்ந்திருந்த உதயண குமரனை வாசவத்ததை யினின்றும் பிரித்துத் தன் கடமையைக் கருதும்படி செய்வித்தற் பொருட்டு நண்பருடன் ஆராய்ந்து, வளமலைச் சாரலின்கண் விளையாட்டு விரும்பிஇருந்த உதயணனை வாசவதத்தையொடு வந்து இலாவாண  நகரத்தில் அரண்மனையின்கண் இருக்கச் செயவித்ததும், பின்னர் உதயணன் வாசவதத்தையின் வேண்டுகோட்கு இணங்கிக்காடு செல்லுதலும், அவன்  மீண்டு வருவதற்குள் அரண்மனையின் கண் வேடர்களானே தீக் கொளுவச் செய்து அரண்மனை அகத்திருந்த வாசவதத்தையைச் சாங்கியத்தாயுடன் சுருங்கை வழியே தான்இருக்கும் இடத்திற்கு வருவித்துக் கோடலும், அவளுக்கு உண்மை கூறித் தேற்றுதலும் பிறவும் கூறப்படும்,
 
              கழிக்குங் காலைக் கானத்து அகவயின்
            வழுக்கில் தோழரொடு இழுக்கின் றெண்ணி
            வந்தவண் ஒடுங்கிய வெந்திறல் அமைச்சன்
            பொய்நிலம் அமைத்துப் புரிசைக் கோயில்
        5   வெவ்அழல் உறீஇ விளங்குஇழைப் பிரித்து
            நலத்தகு சேதா நறுநெய்த் தீம்பால்
            அலைத்துவாய்ப் பெய்யும் அன்புடைத் தாயின்
            இன்னா செய்து மன்னனை நிறூஉம்
            கருமக் கடுக்கம் ஒருமையின் நாடி
       10    உருமண் ணுவாவொடு வயந்தகற்கு உணர்த்தித்
 
              தவமுது மகளைத் தக்கவை காட்டி
            உயர்பெருங் கோயிலுள் தேவியை ஒழியா
            நிலாமணிக் கொடும்பூண் நெடுந்தகைக் குருசிலை
            உலாஎழப் போக்கி ஒள்அழல் உறீஇயபின்
       15    இன்னுழித் தம்மின்என்று அன்னுழி அவளொடு
            பின்கூட் டமைவும் பிறவும் கூறிக்
            கல்கூட் டெய்திக் கரந்தனன் இருப்ப
 
              மந்திர நாவின் அந்த ணாட்டி
            தேருடை மன்னர் திறல்படக் கடந்த
       20   போரடு குருசிலைப் பொழுதில் சேர்ந்து
            வரையுடைச் சாரலில் வருஉங் குற்றத்(து)
            உரையுடை முதுமொழி உரைத்தவற்கு உணர்த்தித்
            தோல்கை எண்கும் கோல்கைக் குரங்கும்
            மொசிவாய் உழுவையும் பசிவாய் முசுவும்
       25   வெருவு தன்மைய ஒருவயின் ஒருநாள்
            கண்ணுறக் காணில் கதுமென நடுங்கி
            ஒண்நுதல் மாதர் உட்கலும் உண்டாம்
            பற்றார் உவப்பப் பனிவரைப் பழகுதல்
            நற்றார் மார்ப நன்றிஇன் றாகும்
       30   இன்னெயில் புரிசை இலாவா ணத்துநின்
            பொன்னியல் கோயில் புகுவது பொருளென
 
              உறுவரை மார்பன் உவந்தன னாகி
            இறுவரை இமயத்து உயர்மிசை இழிந்து
            பன்முகம் பரப்பிப் பௌவம் புகூஉம்
       35   நன்முகக் கங்கையின் நகரம் நண்ணிப்
            பன்மலர்க் கோதையைப் பற்றுவிட்டு அகலான்
            சின்னாள் கழிந்த காலைச் சிறந்த
 
              நன்மாண் தோழர் நண்ணுபு குறுகிச்
            செய்வினை மடிந்தோர்ச் சேர்ந்துறை விலளே
       40   மையறு தாமரை மலர்மகள் தான்எனல்
            வையகத்து உயர்ந்தோர் வாய்மொழி ஆதலின்
            ஒன்னா மன்னர்க்கு ஒற்றுப்புறப் படாமைப்
            பன்னாட் பிரிந்து பசைந்துழிப் பழகாது
            வருவது பொருளென வாசவ தத்தையைப்
 
         45   பிரிதல் உள்ளம் பெருந்தகை மறுப்பத்
            தாழிருங் கூந்தலைத் தணப்ப நின்றதோர்
            ஊழ்வினை உண்மையின் ஒளிவளைத் தோளியும்
            வேட்டகம் போகி அடிகள் காட்டகத்து
            அரும்பினும் மலரினும் பெருஞ்செந் தளிரினும்
       50   கண்ணி கட்டித் தம்மின் எனக்கென
            வள்ளிதழ் நறுந்தார் வத்தவ மன்னனும்
            உள்ளம் புரிந்தனன் ஒள்ளிழை ஒழியக்
            கழிநாள் காலைக் கானம் நோக்கி
            அடுபோர் மாவூர்ந்து அங்கண் நீங்க
 
         55   வடுநீங்கு அமைச்சர் வலித்தனர் ஆகிப்
            பிணைமலர்ப் படலைப் பிரச்சோ தனன்தன்
            இணைமலர்ப் பாவையை இயைந்ததற் கொண்டும்
            ஊக்கம் இலன்இவன் வெட்கையின் வீழ்ந்தென
            வீக்கங் காணார் வேட்டுவர் எள்ளிக்
       60   கலக்கம் எய்தக் கட்டுஅழல் உறீஇய
            தலைக்கொண் டனர்எனத் தமர்க்கும் பிறர்க்கும்
            அறியக் கூறிய செறிவுடைச் செய்கை
            வெஞ்சொல் மாற்றம் வந்துகை கூட
            வன்கண் மள்ளர் வந்துஅழல் உறீஇப்
       65   போர்ப்பறை அரவமொடு ஆர்ப்பனர் வளைஇக்
            கோப்பெருந் தேவி  போக்கற மூடிக்
            கைஇகந்து பெருகிய செய்கைச் குழ்ச்சியுள்
 
              பொய்ந்நிலம் அமைத்த பொறிஅமை மாடத்து
            இரும்பும் வெள்ளியும் இசைத்துருக்கு உறீஇ
       70   அருங்கலம் ஆக்கி யாப்புப்பிணி உழக்கும்
            கொலைச்சிறை இருவரைப் பொருக்கெனப் புகீஇ
            நலத்தகு மாதர் அடிக்கலம் முதலாத்
            தலைக்கலங் காறுந் தந்தகத் தொடுக்கிச்
            சிந்திரப் பெரும்பொறி உய்த்தனர் அகற்றி
       75   வத்தவர் கோமான் மனத்தமர் துணைவியொடு
            தத்துவச் செவிலியைத் தலைப்பெருங் கோயில்
            மொய்த்துஅழல் புதைப்பினும் புக்கவன் போமினென்று
            அத்தக அமைத்த யாப்புறு செய்கையொடு
            அருமனை வரைப்பகம் ஆரழல் உறீஇய
       80   கருமக் கள்வரைக் கலங்கத் தாக்கி
            உருமண் ணுவாவும் ஒருபால் அகலப்
            பொறிவரித் தவிசில் பொன்நிறப் பலகை
            உறநிறைத்து இயற்றி உருக்கரக் குறீஇய
            மாடமும் வாயிலும் ஓடெரி கவர
 
         85   இளையரும் மகளிரும் களைகண் காணார்
            வேகுறு துயரமொடு ஆகுலம் எடுப்பத்
            தடங்கண் பிறழத் தளர்பூங் கொடியின்
            நடுங்கிவெய்து உயிர்க்கும் நன்நுதல் பணைத்தோள்
            தேவியைப் பற்றித் தெரிமூ தாட்டி
       90   யூகி கூறிய ஒளிநில மருங்கில்
            பெருங்கல நிதியம் பெய்துவாய் அமைத்த
            அரும்பிலத்து யாத்த அச்ச மாந்தர்
            வாயில் பெற்று வழிப்படர்ந் தாங்குப்
            போக அமைத்த பொய்ந்நிலச் சுருங்கையுள்
       95   நற்புடை அமைச்சனை நண்ணிய பொழுதில்
 
              கற்புடை மாதரைக் காதல் செவிலி
            அன்புடைப் பொருள்பே ரறிவின் காட்டி
            அஞ்சில் ஓதி அஞ்சல்நும் பெருமான்
            நெஞ்சுபுரை அமைச்சன் நீதியில் செய்த
      100    வஞ்சம் இதுஎன வலிப்பக் கூறி
            அருந்திறல் அமைச்சனொடு ஒருங்குதலைப் பெய்தபின்
            இன்நகை முறுவலொடு எண்ணியது முடிந்ததுஎன்று
            எதிரெழுந்து விரும்பி யூகி இறைஞ்சி
            மதிபுரை முகத்திக்கு மற்றிது கூறும்
 
        105    இருங்கடல் உடுத்தவிப் பெருங்கண் ஞாலத்துத்
            தன்னின் அல்லது தாமீக் கூரிய
            மன்னரை வணக்கும் மறமாச் சேனன்
            காதல் மகளே மாதர் மடவோய்
            வத்தவர் பெருமகன் வரைபுரை அகலத்து
      110    வித்தக நறுந்தார் விருப்பொடு பொருந்தி
            நுகர்தற்கு அமைந்த புகர்தீர் பொம்மல்
            கோல வனமுலைக் கொடிபுரை மருங்குல்
            வால்வளைப் பணைத்தோள் வாசவ தத்தாய்
            அருளிக் கேண்மோ அரசியல் வழாஅ
 
        115    இருளறு செங்கோல் ஏயர் இறைவன்
            சேனை நாப்பணும் பெருமான் செய்த
            யானை மாயத்து அருந்தளைப் படுதலின்
            கொங்கலர் நறுந்தார்க் கோல மார்பில்
            பிங்கல கடகர் பெற்றியில் பிழைப்பப்
      120    பாஞ்சால ராயன் பரந்த படையொடு
            மாண்கோ சம்பி வௌவியதும் அறியான்
            அருஞ்சுழி நீத்தத்து ஆழும் ஒருவன்
            பெரும்புணை பெற்ற பெற்றி போல
            நின்பெறு சிறப்பொடு நெடுநகர் புகல
      125    முற்படத் தோன்றிய முகைப்பூண் மார்வன்
            தன்படு துயரம் தன்மனத்து அணையான்
            மட்டுறு கோதாய் மற்றுநின் வனமுலை
 
              விட்டுஉறைவு ஆற்றா வேட்கையில் கெழுமிப்
            பட்டுறை பிரியாப் படிமையின் அவ்வழி
      130    ஒட்டுடை விட்டபின் அல்லதை ஒழிதல்
            வாள்நுதல் மடவோய் அரிதும்மற் றதனால்
            சேண்வரு பெருங்குடிச் சிறுசொல் நீங்க
            ஆர்வ நெஞ்சத்து ஆவது புகலும்
            இன்உயிர் அன்ன என்னையும் நோக்கி
      135    மன்னிய தொல்சீர் மரபின் திரியா
            நலமிகு பெருமைநின் குலமும் நோக்கிப்
            பொருந்திய சிறப்பின் அரும்பெறல் காதலன்
            தலைமையின் வழீஇய நிலைமையும் நோக்கி
            நிலம்புடை பெயரினும் விசும்புவந்து இழியினும்
      140    கலங்காக் கடவுள்நின் கற்பு நோக்கி
            அருளினை யாகி அறியா அமைச்சியல்
            பொருள்எனக் கருதிப் பூங்குழை மடவோய்
            ஒன்னா மன்னனை உதயண குமரன்
            இன்னா செய்துதன் இகல்மேம் படநினைச்
      145    சின்நாள் பிரியச் சிதைவதுஒன்று இல்லை
            வலிக்கற் பாலை வயங்கிழை நீயென்று
            ஒலிக்குங் கழற்கால் யூகி இரப்ப
 
              நெறிதாழ் ஓதி நெஞ்சின் அகத்தே
            பொறிதாழ் மார்பின் புரவலன்கு இயைந்த
      150    நூல்வல் லாளர் நால்வர் உள்ளும்
            யூகி முடிந்தனன் உருமண் ணுவாவொடு
            வாய்மொழி வயந்தகன் இடபகன் என்ற
            மூவரும் அல்லன் முன்நின்று இரப்போன்
            யாவன் கொல்இவன் என்றவற்கு எதிர்மொழி
      155    யாவதும் கொடாஅள் அறிவில் குழ
 
 

            விம்முறு நிலைமை நோக்கித் துன்னிய
            உறுதி வேண்டும் யூகி மற்றுஇவன்
            இறுதி செப்பி இவண்வந் தோன்எனத்
            தாய்தெரிந்து உரைப்பச் சேயிழை தேறி

 
        160    உரைத்த கருமத்து றுதி விழுப்பமும்
            கருத்துநிறை காணாது கண்புரை தோழன்
            வலித்த கருமமும் வத்தவர் பெருமகன்
            உதயண குமரன் யூகி என்பதை
            உரையினும் உடம்பினும் வேறெனின் அல்லது
      165    உயிர்வேற இல்லாச் செயிர்தீர் சிறப்பும்
            திண்ணிதின் அறிந்த செறிவினள் ஆயினும்
            பெண்ணியல்பு ஊதரப் பெருங்கண் பில்கிக்
            குளிர்முற்று ஆளி குளிர்ப்புள் உறாஅது
            ஒளிமுத் தாரத்து உறைப்பவை அரக்கி
 
        170    அரிமான் அன்ன அஞ்சுவரு துப்பின்எம்
            பெருமான் பணிஅன்று ஆயினும் தெரிமொழி
            நூலொடு பட்ட நுனிப்பியல் வழாமைக்
            கால வகையில் கருமம் பெரிதெனல்
            நெறியின் திரியா நீர்மையில் காட்டி
      175    உறுகுறை அண்ணல் இவன்வேண்டு உறுகுறை
            நன்றே ஆயினுந் தீதே ஆயினும்
            ஒன்றா வலித்தல் உறுதி உடைத்தெனக்
            கைவரை நில்லாது கனன்றுஅகத்து எழுதரும்
            வெய்துஉயிர்ப்பு அடக்கிநீ வேண்டியது வேண்டாக்
 
        180    குறிப்புஎமக்கு உடைமை கூறலும் உண்டோ
            மறந்தகை மார்வன் மாய யானையின்
            சிறைப்படு பொழுதில் சென்றவன் பெயர்க்க
            மாய இறுதி வல்லை ஆகிய
            நீதி யாளநீ வேண்டுவ வேண்டென
      185    முகிழ்நகைக் கிளவி முகமன் கூறி   
            அண்ணல் அரசற்கு ஆகுபொருள் வேண்டும்
            ஒண்நுதல் மாதர் ஒருப்பாடு எய்தி
            அரிதின் வந்த பெருவிருந் தாளரைச்
            சிறப்புப் பலியறாச் செல்வனின் பேணும்
      190    பெறற்கரும் பெரும்பண்பு எய்தியது எனக்கென
 
              அசதிக் கிளவி நயவர மிழற்றி
            நேர்ந்த மாதரை நெடுந்தகைக் குருசில்
            பெயர்ந்த காலைப் பிழைப்பிலன் ஆகுதல்
            அறியும் மாத்திரம் அவ்வழி அமைத்துச்
      195    செறியச் செய்த செவியும் தானும்
            மறுதர வுடைய மாயச் சூழ்ச்சி
            உறுதியொடு ஒளித்தனர் உள்ளியது முடித்துஎன்.