தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பிய வகை

  • 1.2 காப்பிய வகை

    காப்பியம் என்றாலே தமிழர்களுக்குச் சிலப்பதிகாரம், சிந்தாமணி முதலான ஐம்பெருங் காப்பியங்களும், சூளாமணி, நீலகேசி முதலான ஐஞ்சிறு காப்பியங்களுமே நினைவுக்கு வரும். தொடர்ந்து பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான பலவும் நம் நினைவுக்கு வருவதுண்டு. 20ஆம் நூற்றாண்டில் பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, புலவர் குழந்தையின் இராவண காவியம், கண்ணதாசனின் ஏசு காவியம் போன்றனவும் காப்பியங்களாகவே எண்ணப்படுகின்றன. எனவே காப்பியம் என்ற இலக்கிய வகையைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

    1.2.1 மேலை இலக்கியக் காப்பிய வகை

    கிரேக்கம், இலத்தீன், பாபிலோனியம் முதலான பழமை வாய்ந்த மொழிகளில் எழுந்துள்ள காப்பியங்களைப் பின் வருமாறு வகைப்படுத்துகின்றனர்.

    1) முன்முறைக் காப்பியம் (Primitive or Oral Epic)
    2) வழிமுறை அல்லது கலைக் காப்பியம் (Secondary or Literary Epic)
    3) வீரயுகக் காப்பியம் (Chivalric Epic)
    4) வீரயுகக் காதல் காப்பியம் (Chivalric Romance)
    5) காதல் காப்பியம் (Romantic Epic)
    6) நகைச்சுவைக் காப்பியம் (Burlesque Epic)

    கலைத் தன்மை பெறாத - அதே நேரத்தில் உணர்ச்சிப் பெருக்காகக் கவிஞனால் தங்கு தடையின்றி வாய்மொழி மரபில் பாடப்பட்டு வருவன முன்முறைக் காப்பியங்கள்.

    இதனை அடுத்துத் தோன்றுவன கலைக்காப்பியங்கள். இவற்றில் கவிஞனின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் இடம் உண்டு. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தியல் இவ்வகைப் படைப்புகளில் சிறப்பான இடத்தைப் பெறும்.

    வீரயுகக் காப்பியங்களில் வீரதீரச் செயல்கள், அற்புத ஆற்றல்கள், உணர்ச்சி பூர்வமாக மிகையான கற்பனையுடன் வெளியிடப் பெறும்.

    வீரயுகக் காதல் காப்பியங்களில் காதல், காதலுக்காகப் போராடும் மிகப்பெரிய போராட்டம் முதன்மைப்படுத்தப் பெறும்.

    நகைச்சுவைக் காப்பியங்களில் கிண்டலும் கேலியும் நிறைந்து, தன்னேரில்லாத் தலைவனாக உருவகப்படுத்தப்பட்ட காப்பியத் தலைவன், இங்குக் கிண்டலுக்கும் கேலிக்கும் உரியவனாக, ஆளுமையில் தரம் தாழ்ந்தவனாகச் சித்திரிக்கப்படுவான்.

    1.2.2 வடமொழியில் காப்பிய வகை

    வடமொழியில் காப்பியங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப் பெறுகின்றன.

    1) இதிகாசம்
    2) மகாகாவியம்
    3) காவியம்
    4) புராண காவியம்
    5) உத்பாத்தியம்
    6) சம்பு காவியம்
    7) சந்தேச காவியம்
    8) கண்ட காவியம்

    இதிகாசம் என்ற சொல்லுக்கு ‘இவ்வாறு முன் இருந்தது’ என்று பொருள். இதிகாசங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட கால வரலாறாக (Pre-historic Period) நம்பப்படுவன. வால்மீகி ராமாயணமும், வியாச பாரதமும் இவ்வகைப் படைப்புகளே. வடமொழியின் மகாகாவியம் என்பது இதிகாசக் கதையின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, விரிவாகப் பேசுவது. இதில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நாற்பொருள் இடம் பெறும். கற்பனை வளமும் வருணனைத் திறனும் பெற்றிருக்கும். மகா காவியத்திலிருந்து அளவால் குறைந்தது காவியம். நாற்பொருளும் இதில் இடம் பெறாது. ஒரு சில குறைந்து அமையும். உயரிய நோக்கமும் கற்பனை வளமும் குறைவாகவே காணப்படும். கடவுளர் பற்றிய புராண வரலாறாக அமைவது புராண காவியம். இதிகாசத்திலோ, புராணங்களிலோ இடம் பெறாத, புதிய கதையை மையமாகக் கொண்டு படைக்கப் பெறுவன உத்பாத்தியம் என்னும் காப்பிய வகையாகும். சம்புகாவியம் என்பது உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுளாகும். சந்தேச காவியம் என்பது தூது இலக்கிய வகையாகும். கண்ட காவியம் என்பது பழைய இதிகாச - காப்பியக் கதையை எடுத்துக் கொண்டு, கால வேறுபாட்டிற்கு ஏற்ப மாற்றங்களையும், புதுமைகளையும் சேர்த்துப் படைக்கப் பெறுவது. தமிழில் பாரதிதாசனின் கண்ணகி புரட்சிக் காப்பியம், சாலை இளந்திரையனின் சிலம்பின் சிறுநகை போன்றவை இக்கண்ட காவிய வகையைச் சார்ந்தவை.

    1.2.3 தமிழில் காப்பிய வகை

    தமிழ்க் காப்பியம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவன ஐம்பெருங் காப்பியங்கள் - ஐஞ்சிறு காப்பியங்கள் என்பனவே. கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை என்ற ஒரு மிகச் சிறந்த காப்பியமும் உள்ளது. பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் என்பனவும் தமிழில் தோன்றிய மிகச் சிறந்த காப்பியப் படைப்புகளே. இருபதாம் நூற்றாண்டிலும் காப்பியம் என்ற பெயரில் பல படைப்புகள் வெளி வந்துள்ளன. இவற்றைப் பின்வரும் வகைப்பாடுகளில் பகுத்துக் காணலாம்.

    1)  இதிகாசம்
    2)  புராணம்
    3)  பெருங்காப்பியம்
    4)  சிறுகாப்பியம்
    5)  மறைந்துபோன தமிழ்க் காப்பியம்
    6)  மொழிபெயர்ப்புக் காப்பியம்
    7)  இசுலாமிய சமயக் காப்பியம்
    8)  கிறித்தவ சமயக் காப்பியம்
    9)  தற்காலக் காப்பியம் - மற்றும் கதைப் பாடல்கள்

    கம்பராமாயணமும் வில்லிபாரதமும் தமிழில் இதிகாசக் காப்பியங்களாகும். ஆனால் இவை இதிகாசத் தன்மையான வாய்மொழி மரபோ, உணர்ச்சியோ இன்றிக் கலைத்தன்மையோடு, கற்பனை வளமும், கருத்தியல் புனைவும் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. இதனால், இவை மேலை இலக்கியக் கலைக்காப்பியம் என்ற வகையைச் சார்ந்தன எனலாம்.

    தமிழில் புராணக் காப்பியங்கள் மூன்று வகையாகப் படைக்கப் பட்டுள்ளன. ஒன்று, கந்தபுராணம் போன்ற கடவுளர் பற்றிய புராணக் காப்பியம். இரண்டாவது வகை திருவிளையாடல் புராணம் போன்ற கடவுளர் பற்றிய தலபுராணம். மூன்றாவது வகையைச் சார்ந்தவை மாமனிதர் பற்றிய பெரியபுராணம் போன்றவை ஆகும்.

    சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன பெருங்காப்பியங்கள் என்றும்; உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகியன சிறு காப்பியங்கள் என்றும் எண்ணப்படுகின்றன.

    சமயப் போராட்டங்கள், மக்களின் கவனிப்பு இன்மை முதலான காரணங்களால் அழிந்து போன தமிழ்க் காப்பியங்கள் பல. உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சில காப்பியங்களில் தகடூர் யாத்திரை, வளையாபதி, குண்டலகேசி, விம்பசார கதை, சாந்தி புராணம், நாரத சரிதை, கலியாணன் கதை, பருப்பதம், புராண சாகரம், அமிர்தபதி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி, இராசராச விசயம், வீரணுக்க சரிதம், குலோத்துங்க சோழன் சரிதை முதலான காப்பியங்களின் பெயர்கள் அறியப்படுகின்றன.

    நச்சினார்க்கினியர் உரையிலும், புறத்திரட்டிலும் காணப்படும் இராமாயணச் செய்யுள்கள், பெருந்தேவனார் குறிப்பிடும் இராமாயண வெண்பா, யாப்பருங்கலத்திலும், வீரசோழியத்திலும் மேற்கோள் காட்டப்படும் வெண்பாவில் அமைந்த இராமாயணச் செய்யுள்கள், ஸ்ரீபுராணம் குறிப்பிடும் சைன ராமாயணம், பல திரட்டு என்னும் சுவடித் தொகுப்பில் உள்ள நான்கு இராமாயண வெண்பாக்கள் ஆகியவற்றின் மூல நூல்கள் அழிந்து போய்விட்டன.

    இதே போன்று சங்ககாலம் தொட்டுப் பாரதக் கதை தொடர்பான பல காப்பியங்கள் எழுந்துள்ளன. சின்னமனூர்ச் செப்பேடு மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் எனச் சங்க காலத்ததான ஒரு பாரதம் பற்றிக் குறிப்பிடுகிறது. அடுத்தது பெருந்தேவனார் பாடிய பாரதம். இவர் பாரதம் பாடிய காரணத்தால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பட்டார். இவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர் ஆவார். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு ஆகிய சங்கத் தொகை நூல்களுக்கு அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் பாடியவர் ஆவார். மேலும் வத்சராசன் பாரதம் அல்லது அருணிலை விசாகன் பாரதம் என்ற ஒரு பாரத நூலும் குறிப்பிடப்படுகின்றது. இப்பாரத நூல்கள் அனைத்தும் மறைந்து போயின.

    தமிழில் பல தழுவல் காப்பியங்கள் எழுந்துள்ளன. இத்தகைய தழுவலன்றி மொழிபெயர்ப்பாகவும் பல காப்பியங்கள் எழுந்துள்ளன. மனுசரிதை, வசுசரிதை, பிரபுலிங்க லீலை, வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் துறக்க நீக்கம் (மில்டனின் Paradise Lost), அனந்த நாராயணரின் இலியதம் (ஹோமர்), அ.சிங்கார வேலுவின் ஒதீசியம் (ஹோமர்), ஜமதக்னியின் மொழிபெயர்ப்பான இரகுவம்சம், குமார சம்பவம், மேக சந்தேசம் (காளிதாசர்), ஆதி வரகவி மொழிபெயர்த்த காதம்பரி ஆகியன இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.

    இசுலாமியக் காப்பியங்களில் குறிப்பிடத்தக்கது சீறாப்புராணம். கிறித்தவக் காப்பியங்களில் தேம்பாவணியும், இரட்சணிய யாத்திரிகமும் சிறப்புடையன. தற்காலத்தில் பாரதியின் பாஞ்சாலி சபதம் முதலானவும், பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி முதலானவும் காப்பிய வரிசையில் குறிப்பிடப்படுவன. முடியரசனின் பூங்கொடி, கவியோகி சுத்தானந்த பாரதியின் பாரத சக்தி மகா காவியம், புலவர் குழந்தையின் இராவண காவியம் ஆகியன பழந்தமிழ்க் காப்பிய மரபில் பாடப்பட்டனவாகும். பஞ்சபாண்டவர் வனவாசம், கர்ணன் சண்டை, நல்லதங்காள் கதை முதலான பல எண்ணற்ற கதைப் பாடல்கள் தற்காலக் காப்பிய வரிசையில் இடம் பெற்றுள்ளன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    காப்பியம் என்னும் சொல் முதலில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது?

    2.

    மேலை இலக்கியக் காப்பிய வகைகளைச் சுட்டுக.

    3.

    வடமொழிக் காப்பியங்கள் எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன?

    4.

    தமிழ்க் காப்பிய வகைகளைக் கூறுக.

    5.

    மறைந்து போன தமிழ்க் காப்பியங்கள் சிலவற்றின் பெயர்களைச் சுட்டுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-07-2017 12:00:18(இந்திய நேரம்)