தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கனகாபிசேக மாலை

  • 5.1 கனகாபிசேக மாலை

    இசுலாமிய அடிப்படையில் முஸ்லீம் புலவர்களால் பாடப்பெற்ற தமிழ்க் காப்பியங்களுள் காலத்தால் மூத்தது கனகாபிசேக மாலை.

    5.1.1 ஆசிரியர்

    இதனைப் பாடியவர் செய்கு நயினார் கான். இவர் முகவை மாவட்டத்தில் இராஜகம்பீரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். கவிச்சக்ரவர்த்திகளுக்கு எல்லாம் பொன் போன்றவர் எனப் பொருள்படும் கனகக் கவிராயர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். அப்பெயர் பின்னர் கன கவிராயர் எனச் சுருக்கம் பெற்றது.

    5.1.2 பெயர்க் காரணம்

    கனகம் + அபிசேகமாலை என்பதன் பொருள், பொன் + புனிதமாக்குதல் என்பதாகும். ஓர் அரசனுக்கு முடிசூட்டும் பொழுது அவனைக் குளிக்கவைத்தல், பொன்னால் குளிப்பாட்டுதல் எனப் பொருள்படும். இக்காப்பியத்தில் எட்டு மன்னர்கள் ஒருவர்பின் ஒருவராக ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றனர். எனவே முடிசூட்டப்படுதல் என்னும் செய்திகள் ஒரு மாலையாகப் பாடப்படுகின்றன என்பதால் இப்பெயர் பொருந்துகிறது. எட்டு மன்னர்கள் 1) முகம்மது நபி (2) அபூபக்கர் (3) உமறு (4) உதுமான் (5) அலி (6) ஹஸன் (7) ஹுஸைன் (8) செயினுலாபிதீன் ஆகியோர் ஆவர்.

    இக் காப்பியம் நான்கு பரம்பரையின் வரலாற்றுக் கதையைக் கூறுகின்றது.

    5.1.3 காப்பிய அமைப்பும் சிறப்பும்

    இக் காப்பியத்தில் காண்டம், சருக்கம் என்னும் பகுப்புகள் இல்லை. 35 படலங்களில் 2791 பாடல்கள் உள்ளன. பிற இசுலாமியக் காப்பியங்களில் இடம்பெறாத நூற்பயன் கூறும் முறை இதில் காணப்படுகிறது. 38 செய்யுட்களைக் கொண்ட பதிகப் படலமும் அமைந்துள்ளது. பின்னர் நாட்டுப் படலம், நகரப் படலம் ஆகிய படலங்கள் இடம் பெற்றுள்ளன. பதிகப் படலம் வருபொருள் உரைத்தலாக அமைந்திருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள சக்ருவான் என்பவளின் சுயம்வரம் பிற இசுலாமியக் காப்பியங்களில் இல்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 18:43:16(இந்திய நேரம்)