Primary tabs
5.6 கவித்திறன்
காப்பியம் முழுவதிலும் கவிஞர் தனது கவித்திறனை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பழைய தமிழ் மரபையும் பின்பற்றியுள்ளார். உவமையையும் உருவகத்தையும் பயன்படுத்திக் காப்பியத்திற்குச் சிறப்புச் செய்துள்ளார்.
நாட்டுப் படலமும் நகரப் படலமும் (படலங்கள் 2, 3) தமிழ் நாட்டையும் தமிழ் நகரத்தையுமே காட்டுகின்றன. தமிழ் மரபு போற்றுவதிலும் புலவர் சிறந்து நிற்கிறார். கவிஞரின் கவிதையில் அரபு நாடு தமிழ் நாடு ஆகிறது.
● மருத நிலக் காட்சி
ஜெயிலான் நாட்டு மருத நிலத்தில், உழத்தியர் நாற்றினை நடுகின்றனர். முகத்தில் சேற்றுத் துளிகள் தெறித்தன. அப்போது உழத்தியர் எழுப்பிய இனிய குரவை ஒலி விண்ணை எட்டியது. அவ்வொலியைக் கேட்டு வானவர், வான் உலக மகளிர் ஆகியோர் வியப்பு அடைந்தனர். அவர்கள் உழவர் பெண்களைப் பார்த்தனர். அந்தப் பார்வையால் கண்ணேறு பட்டுவிடாதவாறு மதன் இட்ட திட்டிப் பொட்டாகச் சேற்றுத் துளிகள் விளங்கின எனத் தமிழ் நாட்டு மருத நிலக் காட்சியைப் புலவர் கற்பனைத் திறத்தோடு பின்வருமாறு பாடுகிறார்:
தேன்இனிது அருந்திக் களித்திரு விழியுஞ்
சிவப்புற நாற்றினை நடுவார்
கூனிய பிறைஒண் மதிநுதன் முகத்துங்
குயத்தினுஞ் சேதகந் தெறித்த
லான்இங்கு இவர்கள் குரவையின் ஒலியால்
அடைய அற்புதத்தொடு நோக்கும்
வானவர் மகளிர் விழியினே றணுகா
வகைமதன் இடுவது ஒத்திடுமே(நாட்டுப் பாடலம் - 24 (64))
(தேன் = கள்; விழி = கண்; கூனிய பிறை = வளைந்த பிறை; மதி = சந்திரன்; நுதன் = நெற்றி; மதன் = மதனன்; குயம் = மார்பகம்; சேதகம் = சேறு)
பெண்கள் கை கோத்து ஆடும் கூத்து, குரவை இடுதல் (மகிழ்ச்சி ஒலி) எனக் கற்பனையுடன் அரபு நாட்டைத் தமிழ்நாடாக்கிப் பாடியுள்ள அழகு பலமுறை கற்று அனுபவிப்பதற்குரியது.
உவமையும் உருவகமும் அமைத்து, காப்பிய நாயகராம் நாயகம் முகியித்தீன், பகுதாது வந்த பொழுது அடைந்த நன்மைகளை விளக்குகிறார்.
ஒளி பொருந்திய மணி இருளை நீக்கும். முகியித்தீன் என்னும் மணி அறியாமை என்னும் இருளை நீக்கவே உலகில் தோன்றியுள்ளார். உடலிலே நோய் உள்ளது. அந்த நோயைத் தீர்க்க மருந்து உதவுகிறது. ஒரு மனிதனிடத்தில் இடம் பெற்றிருக்கும் பாவங்கள் நோய்க்குச் சமம். பாவம் செய்தோர் மீட்சி பெற்றால் சொர்க்கம் அடைவர். எனவே அப்பாவ நோய் தீர்க்கும் மருந்தாக நபிகள் நாயகத்தின் பேரர் குத்பு நாயகம் எனும் முகியித்தீன் தோன்றினார் என்னும் கருத்து அமைய,
வளஞ்செறி பகுதாது என்னும்
பதியில்வந் துற்றேன் என்றார்
உளஞ்செறி இருளை மாற்ற
உதித்துஒளிர் மணியாய் நாளும்
களஞ்செறி பவநோய் தீர்த்துக்
கதியின்பந் தரும்அரு மருந்தாய்
நளஞ்செறி புகழ்கள் ஓங்கு
நபியுல்லா பேரர் தாமே(கல்வி நெறிப் படலம் - 40 (232)
எனப் பாடுகிறார்.
வண்ணக்களஞ்சியப் புலவர், கணவன் என்னும் சொல்லின் பெண்பாலாகக் கணவி (மனைவி) என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி ஆகும். தமிழ் இலக்கியத் திருமண மரபுகள் இசுலாமிய மரபுகளுக்கு உடன்படாதவை ஆயினும் புலவர் தமிழ் மரபு பேணுதலைக் காணலாம். பகுதாதில் நிகழ்ந்த ஒரு திருமண நிகழ்ச்சி தமிழ்நாட்டு விழாவாக வருணிக்கப்படுகிறது.