Primary tabs
5.3 இராஜ நாயகம்
இசுலாமியக் காப்பிய வரலாற்றில் இராஜநாயகம் எனும் காப்பியத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. இவ்வரலாறு விவிலியத்தில் (BIBLE) இடம் பெற்றுள்ள தாவீதையும் சாலோமனையும் பற்றிக் கூறுகிறது.
இக்காப்பியத்தைப் பாடியவர் முகம்மது இப்ராகீம் புலவர். இவர் வண்ணம் பாடுவதில் வல்லவர். ஆதலால் வண்ணக்களஞ்சியப் புலவர் என்னும் பட்டப் பெயரால் அழைக்கப் பெற்றார்.
இவர் இராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூரின் பக்கத்திலுள்ள சிற்றூராகிய மீசலில் பிறந்தார். பின்னர் மதுரையில் வாழ்ந்தார்.
மதுரையில் அமைந்த ஆதீன மடத்தின் தலைவரிடம் தமிழ், வடமொழி ஆகியவற்றைக் கற்றார்.
தஞ்சையை ஆண்ட அரசர் இவரது சிறப்பு அறிந்து, சிங்கமுகப் பொற்சிவிகை பரிசளித்தார் எனக் குறிப்பிடுகின்றனர்.
இராமநாதபுர இராசசிங்க மங்கலத்தின் பக்கத்திலுள்ள தும்பட்டிகா என்ற கோட்டையில் இறந்தார்.
வண்ணக் களஞ்சியப் புலவர் ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும், பரந்த கல்வி ஞானமும், அசையாத சமயப் பற்றும், கற்பனை வளமும் பெற்றிருந்தார். அந்தப் புலமைகளை இராஜநாயகத்தில் உரிய இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.
நாயகம் என்றால் தலைவன் என்று பொருள். எனவே இராஜநாயகம் என்றால் அரசர்களுக்குத் தலைவன் என்பது பொருள். அரசர்களுக்கு அரசராகத் திகழ்ந்தவர் சுலைமான் நபி. எல்லா நபிமார்களுள்ளும் தலைவராகத் திகழ்பவர் நபி சுலைமான் ஆவர். எனவே இராசாக்களுக்கும் தலைவர் என்னும் பொருளில் இராஜநாயகம் எனப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இது, நாற்பத்தாறு படலங்களையும் 2240 செய்யுட்களையும் உடையது. இதில் காண்டப் பிரிவு இல்லை. காப்பிய இலக்கணங்கள் அனைத்தும் முழுமை பெற்று, பொருளாலும் அமைப்பாலும் சிறந்து விளங்கும் பெருங்காப்பியம் ஆகும்.
● திருக்குர்ஆனும் விவிலியமும்
விவிலியத்தில் இடம் பெற்றுள்ள பல பெயர்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அவை சிறு மாற்றங்களுடன் இடம் பெற்றுள்ளன. விவிலியத்தில் இடம் பெற்றுள்ள சாலோமோன், தாவீது என்னும் இரு பெயர்களும் திருக்குர்ஆனில் முறையே
சுலைமான் நபி, தாவூது நபி என அழைக்கப் பெற்றுள்ளன. விவிலியம் ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்டது. திருக்குர்ஆன் அரபி மொழியில் எழுதப்பட்டது. எனவே இரு மொழிகளின் ஒலி மாறுபாட்டிற்கு ஏற்ப, பெயர்களை ஒலித்தலில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே விவிலியத்தில் தாவீது எனவும், திருக்குர்ஆனில் தாவூது எனவும் கூறப்பட்டது.● விவிலியக் கதைகள்
அறிவுள்ள சாலமனும் ஷீபாவும், தாவீதும் கோலியாத்தும் போன்ற கதைகள் எல்லாம் மக்களிடையே மிகவும் அறிமுகமானவை என்பதை அறிவீர்கள்.
திருக்குர்ஆனில் கூறப்படும் தாவூது நபி, சுலைமான் நபி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது இராஜநாயகம்.