Primary tabs
- 6.5 மஹ்ஜபீன் - புனித பூமியிலே - தமிழகத்தில் புகழ்பெற்ற முஸ்லீம் நாவலாசிரியர் ஹஸன் எழுதிய இரண்டு வரலாற்று நாவல்களைக் காப்பியமாகப் பாடியவர் இலங்கை ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ஆவார். சுல்தான் சலாஹுத்தீன் அவர்களின் வீரச் செயல்களும், அவர் தனது எதிரியான இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டுடன் செய்த போரும், அவனது உறவினர்களை விடுதலை செய்து உதவிய செயலும் இக்காப்பியத்தில் சிறப்பிடம் பெறுகின்றன. - ● கதைக் கரு - மூன்றாம் சிலுவைப் போரில் ஜெருசலத்தை மீட்க முடியாத நிலையில் சுல்தான் சலாஹுத்தீனுடன் ரிச்சர்ட் சமயப்பொறையை நிலைநாட்டும் பொருட்டுச் சமாதானத்தை மேற்கொண்டதைக் கதைக் கருவாகக் கொண்டுள்ளது. - இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற அயல்நாடுகள் பாலஸ்தீனத்தைப் போர்க்களமாகக் கொண்டு நடத்திய போரை மையமாகக் கொண்டு பாடப்பட்டது. - ● ஆசிரியர் - இக்காப்பியத்தை டாக்டர். ஜின்னாஹ் ஷரீபுத்தீன் என்பவர் எழுதினார். இவர் இலங்கை, மருதமுனை புலவர்மணி ஆ.மு. ஷரீபுத்தீன் அவர்களின் மகன். இவரது பிற கவிதை நூல்கள்: - 1) முத்து நகை - 2) பாலையில் வசந்தம் - 3) மஹ்ஜபீன் (582 பாடல்கள்) - 4) புனித பூமியிலே (1000 பாடல்கள்) - 5) ஜின்னாஹ்வின் இரு குறுங்காவியங்கள் - தமிழகத்தில் புகழ்பெற்ற முஸ்லீம் நாவலாசிரியர் ஹஸன் எழுதிய இரண்டு வரலாற்று நாவல்களின் உரைநடைச் சொற்களையே கொண்டு கவிதையாக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக, - பருவமடைந்தது முதல் தந்தையைத் தவிர்த்து வேறு ஆடவருடன் பழகாது முழு இஸ்லாமியப் பண்பாட்டிலே வளர்ந்திருந்த அப்பேதைப் பெண்ணுக்கு, காமத்தினால் கண்ணிழந் திருந்த அக்கயவனின் பேச்சு அருவருப்பையும் ஆத்திரத்தையும் மூட்டியது - என்பது புதின உரைநடை. இதனைக் கவிதையாக்கி, பருவமுற்ற நாளிருந்து தந்தை யன்றிப்
 பிறஆண்க ளோடுபழ காத பெண்ணாள்
 அருவருக்கும் அவன்வார்த்தை கேட்டு மீறும்
 அழுகையுடன் ஆத்திரமும் கொண்டாள் ...- (மஹ்ஜபீன் -2, அழகின் குற்றம் - 41) - எனப் பாடுகிறார். - இன்பமும் துன்பமும் என்னும் ஆறாவது பகுதியில் அஷ்ரப், மஹ்ஜபீனின் நினைவால் தூக்கமின்றித் துன்பம் அடைந்தான். படுத்து வெகுநேரமாகியும் அஷ்ரபுக்குத் தூக்கம் வரவில்லை. பின் நிலாக் காலத்தில் சந்திரன் நன்கு உயர்ந்து வந்த பிறகும் கூட உறங்காமல் புரண்டான். இதனை மிகவும் சிறப்பாக வருணித்துள்ளார். - வானப்பந்தலில் நிலவு வெளிச்சத்தை அள்ளித் தந்து, குளிர் தருகிறது. அது உலகு எங்கும் பளிங்கு வில்லைப் போலச் சுற்றுகின்றது. வானத்தில் உலவும் நிலவுக்குக் களங்கமுண்டு. ஆனால் அஷ்ரபின் இதயத்துள் உலவும் நிலவுக்குக் (மஹ்ஜபீன்) களங்கமில்லை. அது கருமேகம் மூடாத நிலவு, இன்ப உணர்வை வழங்கும் நிலவு எனப் பின்வருமாறு வருணிக்கிறார்: ஒளியைஅள்ளிக் குளிர்நீரில் தோய்த்து எடுத்தே
 உலகுஎங்கும் வீசியேவான் பந்தல் மீது
 பளிங்குவில்லைப் போல்சுற்றும் நிலவைக் கண்டு
 புன்னகைத்தான் தனிமையிலே அஷ்ரப் நெஞ்சுள்
 களங்கமற்ற மதியொன்று நினைவு வானில்
 கருமேகம் மூடாமல் ஒளியைச் சிந்தி
 வழங்கும்இன்ப உணர்வுகளால் துயில்அ ழிந்தே
 வான்நோக்கிப் படுத்திருந்த போதி லம்மா- (மஹ்ஜபீன் - 154) - (மதி = சந்திரன்; துயில் = உறக்கம்) - எனக் களங்கமற்ற காதலி அஷ்ரபின் உள்ளத்தில் இருப்பதைச் சிறப்பாக எடுத்துரைக்கிறார் கவிஞர். - பரங்கியர் வைத்த தீ என்ற இரண்டாவது பகுதியில் அலைகளில் அசைந்தாடி மிதந்து வருகின்ற கப்பலையும், அக் கப்பல் பாய் விரித்துக் கொள்ளும் அழகையும் மிக அற்புதமாகப் பெண்ணோடு ஒப்பிட்டு உவமிக்கின்றார். - அக்காத் துறையை நோக்கி மரக்கலங்கள் அசைந்துவரும் காட்சியை அழகிய தெய்வப் பெண்கள் பலர் அசைந்து நடந்து வருகின்ற அழகோடு ஒப்பிட்டு உவமிக்கிறார் கவிஞர் ஜின்னாஹ். சலனமற்றுத் துயிலுகின்ற கடலைத் தட்டித்
 துயில்எழுப்ப வேண்டும்என்றோ காற்றும் தன்னைப்
 பலமாக அசைத்த'தக்காத்' துறையை நோக்கிப்
 படிப்படியாய் வேகத்தைக் கூட்டிற் றன்றோ
 அலையடங்கிக் கிடக்கஅதன் மீது சற்றே
 அசைந்துவரும் ஆரணங்கின் எழிலைக் காட்டி
 நிலைகொண்டு நின்றபல மரக்க லங்கள்
 நீண்டுஉயர்ந்து பாய்மரங்கள் விரிக்கச் செய்யும்- (புனித பூமியிலே - 41) - (சலனம் = அசைவு; துயில் = உறக்கம்; ஆரணங்கு = பெண்; எழில் = அழகு) - எனத் துறைமுகம் எழில் பெறுகிறது என்று குறிப்பிடுகின்றார். - இந்த வகையில், மரக்கலங்களை அழகிய தெய்வப் பெண்களின் நடை அழகோடு ஒப்பிடுகிறார். அம்மரக்கலங்கள் பாய்விரித்த காட்சியை இன்னும் அழகுற உயிர்த்துடிப்பாக உவமை மூலம் பின்வருமாறு பாடுகிறார்: பட்டுமஞ்சந் தனில்உறங்கிக் கண்வி ழித்தே
 பக்கமிரு கைஉயர்த்திச் சோம்பல் நீக்கும்
 கட்டழகுப் பெண்களைப்போல் காற்றைக் கண்டு
 காத்திருந்த கப்பல்கள் பாய்வி ரிக்க- (புனித பூமியிலே - 42) - (மஞ்சம் = படுக்கை) - எனப் பட்டு மெத்தையில் படுத்து உறங்கிய கட்டழகுப் பெண்கள் காலைப் பொழுதில் இருகைகளையும் மேலே உயர்த்திச் சோம்பல் முறித்துக் கொள்வதைப் போல, அக்கப்பல்கள் பாய் விரித்ததாக உவமித்து வருணிக்கிறார். - இருட்டைப் போர்த்திக் கொண்டு இரவு நித்திரை கொள்கிறது என்பதைக் கற்பனை நயம்படக் கவிஞர் பாடும்போது, இரவை ஒரு பெண்ணாகக் கொண்டால் இருள்தான் அவளது போர்வை. இருளாகிய போர்வைக்குள்ளே முகம் புதைத்துக் கொண்டு இரவாகிய பெண் நித்திரை செய்கின்றாள் என்று கூறுகின்றார். இக்கருத்தை, முன்னிருட் போர்வை யுள்ளே
 முகம்பதித்து இரவு துஞ்ச
 தன்னுடல் போர்த்தி யாரும்
 தனைஅறி யாத வாறே
 மன்னவன் கான்ராட் வாழும்
 மாளிகை தன்னை நோக்கிச்
 சென்றதோர் உருவம் காவல்
 செய்பவர் உறங்க லுற்றார்- (புனித பூமியிலே - 85) - (துஞ்ச = தூங்க) - என்ற பாடலில் குறிப்பிடுகிறார். - ● காதலியின் அழகு - அஸீஸின் காதலி ஆன். அவளது அழகைக் கவிஞர் வருணிப்பதைப் பாருங்கள். - ஆனின் பாதங்களைப் பார்த்து, வண்டுக் கூட்டங்கள் தாம் முன்பு எப்பொழுதும் பார்க்காத அழகிய மலர்கள் என நினைத்து மொய்ப்பதற்கு நெருங்கின. அப்பொழுது கால் அசைக்க, தண்டைகள் ஒலி எழுப்பின. வண்டுகள் திசைமாறி ஓடின. அவளது அழகிய இரு கரிய கண்களும் கெண்டை மீன்கள் என்று நினைத்துக் கொக்கு உற்றுப் பார்த்தது. மீன்கள் என்றால் நீரில் அல்லவா இருக்கும். இவை தரையில் எப்படி வந்தன என மனம் மாறியது கொக்கு எனப் பாடும் பாடல் இதோ: அண்டின மலர்என் நோக்கில்
 அளிகளும் மென்தாள் பார்த்தே
 தண்டைகள் குலுங்க அஞ்சித்
 திசைமாறித் திரும்பி ஓடும்
 கெண்டைஎன்று எண்ணிக் கண்ட
 கொக்குஒன்றும் உற்று நோக்கித்
 தண்டலை அன்றே இஃது
 தரைஎன மனம்மா றிற்றே- (புனித பூமியிலே - 940) - (அளிகள் = வண்டுகள்; தாள் = அடி; தண்டலை = சோலை) - எனக் கற்பனை தோன்ற இனிமையாகப் பாடியுள்ளார். 
 
						 
						 


