Primary tabs
6.3 நாயக வெண்பாவில் கவிநயம்
நாயக வெண்பாவில், கவிஞர் தனது தமிழ்ப் புலமையாலும், கற்பனை ஆற்றலினாலும் சிறந்த உவமைகளைக் கையாண்டுள்ளார். உவமைகளின் வாயிலாகக் காப்பிய நிகழ்ச்சிகளைச் சுவையாக எடுத்துரைத்துள்ளார். அதைப்போல் பல நிகழ்ச்சிகளைச் சிறந்த வருணனைகளின் வாயிலாகவும் விளக்கியுள்ளார்.
கதீஜாவின் அரண்மனையில் பறக்கும் கொடி அசைவது, பெருமானாரை அழைப்பது போல இருந்தது என்கிறார் புலவர். இது பழைய தமிழ் இலக்கியங்களை நினைவூட்டுவது போல அமைந்துள்ளது. அந்தப் பாடல்:
பாவைஉளம் நெருங்கப் பார்த்திபரும் தானெருங்க
ஏவலார் முன்கதிஜா இல்நெருங்க - மேவியொளிர்
தையல் மனைமேல் தவழும் கொடிநபியைக்
கையால் அழைத்தது கண்டு(விலாதத்துக் காண்டம் -142)
(பார்த்திபர் = நபிகள் நாயகம்; இல், மனை = வீடு; தையல் = பெண் (கதீஜா)
பெருமானார் கதீஜாவின் வீட்டிற்குச் செல்கிறார். அங்குள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடுகின்றன. அக்கொடிகள் அசைந்தாடுவது, பெருமானாரை வரவேற்று அழைப்பது போல இருந்தது என்று தற்குறிப்பேற்ற அணி நயம் தோன்ற இப்பாடலில் அப்துல் மஜீது பாடுகிறார்.
நாயக வெண்பாவில் அக்கால அரபு மக்களின் பிற்போக்கு நிலைகளை 25 பாடல்களில் பாடுகிறார். அரபுநாடு பாவங்கள் பெருகிய இடமாக இருந்தது. மக்கள் அலைகடலில் அகப்பட்ட துரும்புபோலத் துன்புற்றனர். அவர்களின் வாழ்க்கை இருண்ட வாழ்க்கையாக இருந்தது. மேலும் அவர்கள் அறியாமையாலும் இனப் பிரிவுகளாலும் சண்டையிட்டனர். பெண்குழந்தையை உயிரோடு புதைத்தனர். இவ்வாறு அவர்கள் வாழ்ந்த மற (தீய) வாழ்க்கையைக் கடலில் மூழ்கும் கலம்போல இருந்தது என்று குறிப்பிடுகின்றார். இதனை,
சேரிடத்தை விட்டுத் திசைதடு மாறிப்போய்க்
காருவருள் மூழ்கும் கலம்போலப் - பாரினிலே
மக்கிகள் வாழ்வு மறவழியில் ஆழ்ந்திற்று
தக்காரங் கில்லாத தால்(நுபுவ்வத்துக் காண்டம் - 9)
(கலம் = கப்பல்; கார் உவருள் = இருண்ட கடலினுள்; மக்கிகள் = மக்கமா நகரத்தினர்)
என்னும் பாடல் விளக்குகிறது.
முஸ்லீம்கள் ஹபசா என்னும் நாட்டிற்குச் சென்று அங்கு அமைதியோடு இருக்க விரும்பி, பாலை நிலத்தைத் தாண்டிச் சென்றனர்; கடலைக் கண்டனர். அந்த முசுலீம்களின் மன உறுதியைப் புகழ்வதுபோல, கடல் அலைகளின் முழக்கம் இருந்தது என்று குறிப்பிடுகிறார்.
சொத்திழந் தின்பச் சுகம்இழந்தே சூழ்சம்
பத்துஇழந்து இஸ்லாத்தின் பற்றிழக்கா-உத்தமரைப்
பார்த்து மனமகிழ்ந்து பண்பாடி வாழ்த்தினபோல்
ஆர்த்தனவே முந்நீர் அலை(நுபுவ்வத்துக் காண்டம் -119)
(சம்பத்து = செல்வம்; முந்நீர் = கடல்)
எனக் கடல் அலை முழக்கத்தினைப் பாடியுள்ளார் கவிஞர்.
ஹிஜ்ரத்துக் காண்டத்தில் பத்று என்னும் இடத்தில் நடந்த போரினைக் கூறும்பொழுது நான்கு (18 முதல் 21 வரை) பாடல்களில் அனைத்தையும் மிகச் சுருக்கமாகப் பாடுகிறார். இஸ்லாமியர்களின் (தீனவர்களின்) முன் போய் எதிர்ப்பாளர்கள் போரிட்டது கடலைக் கடல் எதிர்த்துப் போர் செய்வது போல் இருந்தது என்றும், யானையோடு யானை போர் செய்வது போல் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். மேலும் நீரோடு நீர் பொங்குவது போன்றும், தீயில் காற்றுப் புகுந்தது போன்றும் போர் நடந்தது என்கிறார். போரில் தலைகள் உருண்டன. இரத்தம் பாய்ந்தோட, கைகள் அறுந்தன. கால்கள் பெரிய மரம் போல வீழ்ந்தன. தோள்கள் இரத்தத்தில் மூழ்கிக் கிடந்தன எனப் பலவாறு வருணிக்கிறார்.
புனலில் புனல்பு குந்தது போலும்
அனலில் புயல்புகுந் தாற்போல் - சினந்தனர்கள்
தீனவரும் மக்கத் திருநகர் செம்மையில்
யீனவரும் முன்னே எதிர்த்து.(ஹிஜ்ரத்துக் காண்டம் - 20 பத்றுப் போர்)
(புனல் = தண்ணீர், அனல் = நெருப்பு, தீனவர் = இஸ்லாத்தைப் பின்பற்றியவர்; மக்கத் திருநகர் = அராபிய நாட்டிலுள்ள மக்கமாநகர்)
வயல்களில் நெற்பயிர்கள் வளமாக ஓங்கி வளர்ந்து இருந்தன. நெல் கதிர்கள் குலை குலையாகச் சாய்ந்து குனிந்து இருந்தன. இந்தக் காட்சியானது, நல்லவர்கள், பெரியவர்களை ஆர்வத்துடன் எதிர்கொண்டு சலாம் (வணக்கம்) கூறித் தழுவி வரவேற்பது போல இருந்தது என்று கூறுகிறார்.
நல்லார் பெரியோரை நாடி எதிர்கண்டால்
எல்லையில் பேர் அன்புபூண்டு ஏற்றசலாம்-சொல்லித்
தலைசாய்த்து மெய்க்கண் தழுவுதல்போல் செந்நெல்
குலைசாய்த்த செய்க்கண் குனிந்து(விலாதத்துக் காண்டம் - 26 நாட்டுச் சிறப்பு)
(சலாம் = வணக்கம்; மெய்க்கண் = உடல்; செய் = வயல்)
அரபு நாட்டில் உள்ள சாலைகளை வருணிக்கின்ற பொழுது, பாடுகின்ற சாலைகள், பெண்கள் கூடிப் பந்தாடுகின்ற சாலைகள், அறச்சாலைகள், தேரோடும் வீதிகள், காவல் அதிகமான வீதிகள் என அவைகளைப் பற்றிக் கூறுகின்றார்.
பாடுகின்ற சாலை பசுந்தொடியார் கூடிப்பந்து
ஆடுகின்ற சாலை அறச்சாலை - நீடியநல்
தேர்நடத்துஞ் சாலை சிறந்த நகர்க்காவல்
போர்நடத்துஞ் சாலை புறத்து(விலாதத்துக் காண்டம் - 33 நகரச் சிறப்பு)
(பசுந்தொடியார் = பெண்கள்; நீடிய = நீண்ட)
தமிழ்நாட்டு நகர்களின் சாலைகளைக் கண்டு மகிழ்ந்த காட்சியாக அரபு நாட்டை வருணித்துப் பாடுகிறார்.
பாலை நில வருணனையினை மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார். இந்தப் பாலை மணலின் ஆவி, வானம் வரை சென்றடைந்து அனலை வெளியிடும். நா வறண்டு போகும். இந்த அளவு பாலை நிலம் வறட்சியானது. அதன் கொடுமையைவிட மக்கா நகரிலுள்ள கொலை வெறியர்களான குறைசியர்களின் கொடுமை மிகுதியானது. அதற்கு அஞ்சிய நல்லவர்கள், அந்தப் பாலை வனத்திலே நடந்தார்கள் என்று அழகாகப் பாடுகிறார்.
ஆவிவான் புக்கி அனல்கக்கும் பாலையிலே
நாவறள நொந்து நடந்ததே - பாவக்
கொலைவாள் குறைசியர்செய் கோறலினுக்கு அஞ்சித்
தொலைவாழச் சென்ற தொகை(நுபுவ்வத்துக் காண்டம் -114)
(ஆவி = மணலில் வெளிப்படும் புகை; நொந்து = வருந்தி; வான் = வானம்; குறைசியர் = குறைசிக் குலத்தவர்; அனல் =நெருப்பு; கோறல் = கொல்லுதல்)
மேலும் விலங்குகள் நீர் இல்லாமல் வருந்துகின்றன. மருந்துக்குக் கூட நீர் இல்லை. அத்தகைய வற்றிய வறண்ட தன்மையுடையது பாலை. எங்கும் கரிந்த நிலை. கள்ளியில் இருக்கும் பாம்பு கோபத்துடன் விடத்தினை உமிழ்ந்ததால் பாலைச்செடிகள் எல்லாம் எரிகின்றன என்றும் பாடுகிறார்.
1)
நாயக வெண்பா ஆசிரியர் - குறிப்பு எழுதுக.
2)
நபிகள் நாயகத்தின் அகவனப்பும் ஆகவனப்பும் யாது?
3)
கடலில் மூழ்கும் கலம் என்னும் உவமையினைப் புலவர் எவ்வாறு விளக்கியுள்ளார்?
4)
கடல் அலை முழக்கத்தினைப் புலவர் ஒப்பிடும் பாங்கினை எழுதுக.
5)
பத்றுப் போரைப் புலவர் எவ்வாறு வருணிக்கிறார்?