Primary tabs
-
தமிழ்நாட்டில் இந்திய விடுதலை உணர்வை விதைத்து வளர்த்த பெருமைக்குரியவர்கள் பலர்; அவர்களில் சிலரைக் குறித்து இங்குக் காணலாம். இப்பெரியோர்கள் நாட்டுத் தொண்டிற்குத் தம்மை முழுதும் ஒப்படைத்துக் கொண்டவர்கள். தமிழர் பண்பாட்டு வரலாற்றில் இவர்களுக்குப் பேரிடம் உண்டு. எழுத்து, பேச்சு, செயல் ஆகிய மூன்றாலும் இவர்கள் செய்த பணிகள் அளவிடற்கரியன. இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழர் பங்கு கணிசமானது என்பதை இவர்கள் வரலாறு காட்டும்.
என்று ச.து.சு.யோகியார் என்ற விடுதலைக் கவிஞர் பாடுகிறார். தமிழகத்தில் விடுதலை இயக்கக் கிளர்ச்சியில் நூற்றுக்கணக்கானவர் மடிந்தனர். பல்லாயிரவர் சிறைபுகுந்தனர். ஓர் ஒருமை உள்ளம் உருவாகிய காலமாக அக்காலம் திகழ்ந்தது
4.4.1 வ.உ.சிதம்பரமும் சுப்பிரமணிய பாரதியும்
மாமன் மைத்துனன் என்று உறவு சொல்லிப் பழகியவர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய பாரதியும். “சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்" என்று முழங்கியவர் வ.உ.சி.
வ.உ.சிதம்பரம்
பாரதி
விஞ்ச் துரையோடு அவர் நிகழ்த்திய வீர உரையைப் பாரதியார் கவிதையாகப் படைத்துள்ளார். சிறையில் கிடந்து நலிந்த சிதம்பரம் பிள்ளைக்குச் சிலநாள் உணவு அனுப்பிய ஒருவரும் சிறைக்குள் தள்ளப்பட்டார்.
என்று வ.உ.சி. எழுதுகிறார். சாக்குத்துணியில் கால்சட்டை, கைச்சட்டை, குல்லா அணிந்து சிறையில் சிதம்பரம் பல தொழில் புரிந்தார்.
அவன் என்னைச் சணல்கிழி யந்திரம் சுற்றெனச்
சுற்றினேன். என்கைத் தோல் உரிந்து ரத்தம்
கசிந்தது. என்னருங் கண்ணீர் பெருகவே
திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாய்ப்
பகலெல்லாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன். அவனுடைய அன்புதான் என்னே!என்று சுயசரிதையில் கூறுகிறார். விடுதலை இயக்க மென்ற வேள்விக்குச் சிதம்பரனார் தம் இரத்தத்தை நெய்யாக ஊற்றினார் எனக் கூறின் மிகை ஆகாது.
சுப்பிரமணிய பாரதி கவிதைகளால் விடுதலை உணர்வை எழுப்பியவர். தாகூரைக் காட்டிலும் பாரதியே இந்திய தேசியத்தின் குரலைக் கவிதையில் உணர்வுற எழுப்பியவர்.
என்று எல்லா இன்பங்களையும் இழந்து துன்பப்பட்டவர் பாரதி. பாரதி ஒரு பெரிய சீர்திருத்தவாதி. தீண்டாமையைக் கடுமையாக அவர் எதிர்த்தார். சாதியில் தாழ்த்தப்பட்ட தம்போலா என்பவர் வீட்டில் போய் உட்கார்ந்து அவர் உணவு உண்டார். கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவர்க்குப் பூணூல் அணிவித்து இன்று முதல் நீ பிராமணன் என்று கூறினார். இதோ பாரதியார் பாட்டை இசைத்தட்டிலிருந்து கேளுங்கள்.
4.4.2 திரு.வி.க.வும் பெரியார் ஈ. வெ.ராவும்
திரு.வி.கலியாணசுந்தர முதலியார் தமிழ்நாட்டுக் காங்கிரசில் குறிப்பிடத்தக்க தலைவர். மேடைதோறும் பேசித் தம் நாவன்மையால் தேசிய விடுதலை உணர்வை வளர்த்தவர். தமிழ்த்தென்றல் என்று இவரைச் சிறப்புப் பெயரால் குறிப்பிடுவர். திரு.வி.க. அரசியலில் சமரசத்தையும் சன்மார்க்கத்தையும் வளர்த்தவர். தமிழகத்தில் முதன் முதல் தொழிற்சங்கம் தோன்ற விதையிட்டவர். தொழிலாளர்களிடையே பண்பாட்டை வளர்த்தவர். இவர் நடத்திய தேசபக்தன், நவசக்தி என்ற இரு பத்திரிகைகளும் அக்கால விடுதலை இயக்க நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பன. தமிழ்நாட்டில் வகுப்பு வேற்றுமை வளராமல் தடுத்த தொண்டு திரு.வி.க.வைச் சாரும். வன்முறை இல்லாத அரசியலை, தொழிலாளர் இயக்கத்தை நடத்திய பெருமையும் திரு.வி.க. அவர்களுக்கு உண்டு. ஆயிரக்கணக்கான தொழிலாளர் வன்முறையில் இறங்க முயன்றபோது,
திரு.வி.க.
“உங்களை நோக்கி விண்ணப்பம் செய்கிறேன். கூட்டத்தை அமைதியாக நடத்தப் போகிறீர்களா? குழப்பத்தில் முடிக்கப் போகிறீர்களா? கூட்டம் அமைதியாக நடந்தால் நான் உயிருடன் வீட்டுக்குத் திரும்புவேன். இல்லையேல் இக்கடலில் பாய்ந்து உயிர் துறப்பேன். என்ன செய்யப் போகின்றீர்கள்? என்னை வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்களா? கடலுக்கு அனுப்பப் போகிறீர்களா?"
என்று கேட்டார். கூட்டம் அலை அடங்கிய கடலானது. இத்தகைய பண்பாட்டை வளர்த்தவர் திரு.வி.க. திரு.வி.க. அவர்களின் இல்லறம் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஆறே ஆண்டுகள்தாம் அவர் மனைவி வாழ்ந்தார். அக்காலத்தில் திரு.வி.க. அவருக்கு திருக்குறளைக் கற்பித்தார். பொருளின் மீது நாட்டமில்லாத அறவாழ்வு இவர்களுடையது.
பெரியார் ஈ.வெ.இராமசாமி தமிழகக் காங்கிரசின் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தவர். பெரியார் காந்தியடிகளிடம் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். திரு.வி.க. பெரியாரைப் பற்றிக் கூறுகையில்,
பெரியார் ஈ.வே.இராமசாமி
“முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால் முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது. அவர் காங்கிரஸ் வெறி கொண்டு நாலாபக்கமும் பறந்து பறந்து உழைத்ததை யான் நன்கு அறிவேன்"
என்கிறார். காங்கிரசிடம் மனம் மாறுபட்டுப் பிரிய வேண்டிய சூழலில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்தார். பின் சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தார். பின் திராவிடர் கழகத்தை உருவாக்கினார். அவரது 70 ஆண்டுக்கால வாழ்க்கை தமிழக அரசியல் வரலாற்றில் புறக்கணிக்க இயலாத ஒன்று. தமிழர் பண்பாட்டில் சீர்திருத்தம் என்ற பகுதியில் பெரியாரே பேரிடம் பெறுவார். வைக்கம் நகரில் பெரியாரே மாபெரும் போரில் ஈடுபட்டுத் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துச் சிறை சென்றார். வைக்கம் வீரர் என்ற சிறப்புப் பெயர் பெரியாருக்கு உரியது.
4.4.3 சுப்பிரமணிய சிவாவும் வ.வே.சு ஐயரும்
சுப்பிரமணிய சிவா
தமிழக விடுதலைக்குச் சுப்பிரமணிய சிவா ஆற்றிய தொண்டு மறக்க முடியாதது. வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆற்றிய அனல் கக்கும் சொற்பொழிவுகள் வெள்ளையரசைக் கதிகலங்கச் செய்தன. சுப்பிரமணிய சிவா வெள்ளை அடக்கு முறையை எதிர்த்துச் சிறை சென்றார். சிறை வாழ்வு அவருக்குத் தொழு நோயைத் தந்தது. சிவா திலகர் வழி நின்றவர். தீவிரத் தேசியவாதம் தமிழகத்தில் வளர வழிசெய்தவர்.
வ.வே.சுப்பிரமணிய ஐயர் இலண்டனில் வழக்கறிஞர் கல்வி பயிலும் போது புரட்சி வீரர் வீரசாவர்க்கரைச் சந்தித்து அவருடைய முயற்சிகளுக்குத் துணை நின்றவர். பாரதி நடத்திய இந்தியா பத்திரிகையில் இவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் தேச பக்திக் கனலை வளர்த்தன. வீரசாவர்க்கர் ஐயரை 'என் அன்பிற்குரிய ரிஷி' என்று அழைத்துக் கடிதம் எழுதியுள்ளார். மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற புரட்சி இளைஞர் வாஞ்சிநாதனுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்தவர் ஐயர்தான் என்று கூறப்படுகிறது. ஐயர் திருக்குறளை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திரு.வி.க.விற்குப் பிறகு தேசபக்தன் நாளிதழ் பொறுப்பை ஏற்றார். ஐயரின் விடுதலை இயக்கப் பணிகள் தமிழக விடுதலை வரலாற்றில் முக்கிய பக்கங்களாகத் திகழ்கின்றன.