Primary tabs
-
இந்தியா வெள்ளையர்க்கு ஏன் அடிமைப்பட்டது? வெள்ளையர்கள் அவ்வளவு வலிமை உடையவர்களா? இல்லை! ஆர்க்காட்டு நவாபு தளர்ந்திருந்த வேளையில் ஐந்நூறு பேரைக் கொண்டு பிரிட்டிஷ் கம்பெனி அவரைத் தோல்வியுறச் செய்து அப்பகுதியைப் பிடித்துக் கொண்டது. அந்த ஐந்நூறு பேரில் இருநூறு பேர் ஆங்கிலேயர்; முந்நூறு பேர் இந்தியர். இதோ திரு.வி.கல்யாணசுந்தரனார் கூறுவதைக் கேளுங்கள்.
“இந்தியாவை வீழ்த்தியது எது, பிரிட்டிஷ் வாளா? அன்று பின்னை எது? இந்திய வாளே. சாதிமதவெறி, சம்பிரதாயச் சிறுமை, கண்மூடி வழக்க ஒழுக்கம், தீண்டாமை, பெண்ணடிமை, இந்து முஸ்லீம் வேற்றுமை முதலிய இரும்பு எஃகுத்துண்டங்கள் வாளாக வடிந்தன. அவ்வாள் -அவ்விந்திய வாள் இந்தியாவை வீழ்த்தியது"
இந்தக் கருத்தே தமிழர்களுக்கும் பொருந்தும். கல்வியறிவு இல்லாமையால் எதற்கும் பயம். சிப்பியைக் கண்டால் அஞ்சும் அச்சம், மந்திரம் பில்லி சூனியம் இவற்றில் நம்பிக்கை ஆகியவற்றால் தமிழகமும் வெள்ளையர்க்கு அடிமைப்பட்டது.
4.1.1 முதல் விடுதலைக் குரல்
வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து முதல் விடுதலைக் குரலை எழுப்பியவன் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையப்பட்டின் சிற்றரசன் வீரபாண்டியக் கட்டபொம்மனேயாவான்.
என்று நாட்டுப்புறப் பாடலில் கட்டபொம்மனின் வீரத்தை மக்கள் பாடுகின்றனர். கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், புலித்தேவர் ஆகியோர் வெள்ளையரை எதிர்த்து வீரமுரசு அறைந்தனர். எல்லாப் பாளையக்காரரும் அன்று ஒன்றுபட்டிருந்தால் தமிழகம் வெள்ளையர்க்கு ஆட்பட்டிராது. ஒற்றுமை இல்லாமை, தமிழர்களின் பெரிய குறைகளில் ஒன்றாகும்.
4.1.2 தீவிரவாத ஆதரவு
வட இந்தியாவில் கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் மிதவாத இயக்கமும் பாலகங்காதர் திலகர் தலைமையில் தீவிரவாத இயக்கமும் தோன்றின. பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர் திலகர் ஆதரவாளர்களாக இருந்தனர். சூரத் நகரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மோதிக் கொண்டனர். வன்முறை நிகழ்ச்சிகளால் மாநாடு குலைந்தது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களே மிகவும் தீவிரம் காட்டினர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. வ.ரா. என்ற விடுதலை வீரர் தமிழகத்தில் தீவிரவாதம் பின்பற்றப்பட்டது குறித்து எழுதுகையில்,
திலகர்பாரதியார்வ.உ.சிதம்பரம்“மிதவாத வழியைப் பின்பற்றத் திலகர் உடன்பட வில்லை என்பது சரித்திரம். திலகரின் இந்தத் தீர்மானம் மனமறிந்து கஷ்டங்களை வருவித்துக் கொண்ட தீர்மானமாகும்........... தீர்மானத்துக்கு மனம் உவந்து ஆதரவு அளித்த பெரியார்களில் பாரதியார் ஒருவர்."
என்று கூறுகிறார். படிப்படியாகத் தீவிரவாதம் தமிழகத்தில் காந்தியடிகளின் வழிக்கு வந்து விட்டது. மிதவாதம், தீவிரவாதம் என்ற இரண்டும் காந்திய நெறியில் இயங்கும் பரிணாமம் ஏற்பட்டது.
4.1.3 காந்தியடிகளின் தலைமை
தமிழகத்தில் காந்தியடிகளுக்கு முன்பே விடுதலை இயக்கம் தொடங்கி விட்டது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார், சுப்பிரமணிய சிவா, சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர், வ.வே.சு. ஐயர் போன்றோர் இந்திய விடுதலை இயக்கம் தோன்றப் பெரும்பணி ஆற்றினர். 1905-இல், வங்காளத்திலிருந்து விபின் சந்திரபிரபு சென்னை வந்தார். சென்னைக் கடற்கரையில் விபினசந்திர பிரபுவின் கூட்டம் நிகழ்ந்தது. கூட்டத்தின் முடிவில் அந்நியத் துணி எரிப்பு இயக்கம் நிகழ்ந்தது. பெருந்தீ மூட்டப்பட்டு அந்நியத் துணிகள் எரிக்கப்பட்டன. ஆனால் இதற்குப்பின் இந்தியா முழுதும் காந்தியடிகளின் தலைமையும் வழிகாட்டலும் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், தமிழகத் தீவிரவாதமும் காந்தியடிகளோடு ஒன்றியது. இந்த நிலையிலேயே பாரதியார்
என்று போற்றும் நிலை உருவாகியது. ஆனால் இதற்குப் பல ஆண்டுகள் முன்னரே தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் காந்தியடிகள் நிகழ்த்திய உரிமைக் கிளர்ச்சியில் பங்கேற்று அவர் மனத்தைக் கவர்ந்திருந்தனர். தென்னாப்பிரிக்காவில் அண்ணல் புரிந்த கிளர்ச்சியில் பெருமளவு தமிழர் பங்கேற்றனர்; நாகப்பன், வள்ளியம்மை என்ற இருவர் போராட்டத்தில் உயிரிழந்தனர். காந்தியடிகள் பின்னாளில்
“....இப்போரில் தமிழ்மக்கள் புரிந்த துணையைப் போல வேறு எவ்விந்தியரும் புரியவில்லை. அவர்களுக்கு நன்றியறிதல் காட்ட அவர்கள் நூல்களைப் பயில வேண்டுமென்று நினைத்தேன். அப்படியே அவர்கள் மொழியைப் பயில்வதில் மிக ஊக்கமாக ஒரு திங்கள் கழித்தேன். அம்மொழியைப் பயிலப் பயில அதன் அழகை உணரலானேன்..."
என்று தம் பத்திரிகையில் எழுதியுள்ளார்.