தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.5 தமிழக விடுதலை இயக்க விடிவெள்ளிகள் - II

  • 4.5 தமிழக விடுதலை இயக்க விடிவெள்ளிகள்-II

    Audio Button

    மேற்கூறியவர்களைத் தவிர மேலும் பலர் இந்திய விடுதலை இயக்கப் பணிகளில் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அவர்களைக் குறித்துக் கீழ்வரும் பிரிவுகளில் சில செய்திகளைக் காணலாம்.

    4.5.1 வள்ளியம்மையும் நாகம்மையும்

    இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் சார்பாகப் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அவருள் குறிப்பிடத்தக்கவர்கள் தில்லையாடி வள்ளியம்மையும் ஈரோட்டு நாகம்மையும் ஆவர். தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் இளமைப் பருவத்திலேயே காந்தியடிகள் நிகழ்த்திய உரிமைப்போரில் கலந்து கொண்டு சிறை சென்றார். பதினாறு வயதுப் பெண்ணான வள்ளியம்மை இப்போரில் காட்டிய மனஉறுதி காந்தியடிகளைக் கவர்ந்தது. இப்பெண் இளம்வயதில் இறந்து விட்டாள். பின்னர் காந்தியடிகள் தமிழகம் வந்தபோது தில்லையாடி கிராமத்திற்கு வந்து வள்ளியம்மையை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார்.

    ஈரோட்டு நாகம்மையார் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் துணைவியார். தம் கணவரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறைபுகுந்தார். 'தென்னாட்டில் போராட்டம் நிகழ்த்த வேண்டுமாயின் ஈரோட்டு நாகம்மையாரைக் கேட்டுத்தான் கூற வேண்டும்' என்று காந்தியடிகள் ஒரு முறை கூறினார்.

    4.5.2 இராஜாஜியும் சத்தியமூர்த்தியும்

    c03134ra.jpg (5208 bytes)

    ‘இராஜாஜி’

    இராஜாஜி என் மனசாட்சியின் குரல் என்று ஒரு முறை காந்தியடிகள் கூறினார். சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் என்ற பெயர் இராஜாஜி எனப் பலராலும் மதிப்போடும் அன்போடும் கூறப்பெற்றது. தீண்டாமை, மது ஆகிய தீமைகளை இராஜாஜி மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடினார்.

    “இராஜகோபாலாச்சாரியாரும் யானும் கதராண்டியானோம். (கதர்த் துணியை உடுத்தியமையால்) அரசராயிருந்த ஆச்சாரியார் ஆண்டியானார். சத்தியாக்கிரகப் போர்க்களத்தில் நின்றோம்."

    என்று திரு.வி.க. எழுதுகிறார். நீண்ட சிறைவாசத்தை இராஜாஜி மனமுவந்து ஏற்றார். உப்பு சத்தியாகிரகத்தில் தமிழகத்தின் தலைவராயிருந்து வேதாரண்யத்தில் இவரே இக்கிளர்ச்சியை நிகழ்த்தினார். விடுதலை பெற்ற இந்தியாவில் இராஜாஜி கவர்னர் ஜெனரலாகவும் பின்பு தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் பணியாற்றினார்.

    தீரர் என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி தமிழ்நாட்டுக் காங்கிரசை வளர்த்தவர். சத்தியமூர்த்தி மேடைப் பேச்சில் வல்லவர். சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி ஆற்றிய பணி பலரைக் கவர்ந்தது. பெருமைக்குரிய தமிழக முதல்வராக இருந்த கர்மவீரர் காமராஜ் சத்தியமூர்த்தியால் உருவாக்கப் பெற்றவர் ஆவர்.

    4.5.3 பத்திரிகை வளர்த்த பண்பாடு

    இந்திய விடுதலை இயக்கத்திற்குப் பல பத்திரிகைகள் பெருந்தொண்டு புரிந்தன. மகாகவி பாரதியின் இந்தியா பத்திரிகை விடுதலைக் கிளர்ச்சியைக் குறித்துப் பல செய்திகளை மக்களுக்கு வழங்கியது. பாரதியாரே முதன் முதல் அரசியல் கார்ட்டூன் வரைந்தவர். இந்தியா பத்திரிகை வெளியிட்ட உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள், கட்டுரைகள் பெருந் தீயெனப் பரவின. இப்பத்திரிகை ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டது. திரு.வி.க. நடத்திய தேசபக்தன் வெள்ளையரால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. நவசக்தி என்ற ஏட்டில் திரு.வி.க. அரசியல், சமுதாயம், தொழிற்சங்கம் குறித்த செய்திகளை வழங்கினார். ஜி.சுப்பிரமணிய ஐயர் என்ற தேசபக்தர் பாரதியாரை சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக்கினார். சுதேசமித்திரனில் பாரதியார் தலையங்கம் எழுதியதில்லை. இதைப் பற்றித் தேச பக்தர் வ.ரா. -

    “அய்யர் பாரதியாரைத் தலையங்கம் எழுதும்படி விட்டதில்லையாம். அரசியலில் பாரதியார் அதிதீவிரவாதி என்ற சாக்கே தலையங்கம் எழுதாதபடி அவர் தடுக்கப்பட்டதற்குக் காரணமாயினும், வேறு விஷயங்களைப் பற்றிக் கூடப் பாரதியார் சொந்தமாகக் கட்டுரைகள் எழுதும்படி விடப்பட்டதில்லையாம்”

    என்று கூறுகிறார். இந்தக் கட்டுப்பாட்டாலேயே பாரதி மித்திரனைவிட்டு வெளியேறினார். இந்தியா பத்திரிகை அவருடைய வீர சாகசங்களை வெளிப்படுத்தியது. ஆனந்தவிகடன், கல்கி பத்திரிகைகளின் வாயிலாகப் பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய பணிகள் மிகச் சிறந்தவை. நையாண்டி செய்யும் போக்கில் வெள்ளையர்களின் நிர்வாகத்தைக் குத்திக் காட்டிய அவருடைய எழுத்தாற்றல் பலரால் சுவைக்கப்பட்டது. வ.வே.சு.ஐயர், டி.எஸ்.சொக்கலிங்கம், இந்து பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரிரங்க ஐயங்கார் ஆகியோர் பத்திரிகை ஆசிரியர்களாக ஆற்றிய பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. தமிழ்நாட்டுப் பத்திரிகை உலகம் பல தடைகளையும் அடக்கு முறைகளையும் தாண்டி விடுதலை உணர்வை மக்களிடையே எழுப்பியது. அடிமை என்ற நிலை மாறி உரிமை மிக்க வாழ்வு மலர இவை செய்த பண்பாட்டுப் புரட்சி வரலாற்றில் என்றும் நின்று நிலவுவதாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-10-2017 17:22:15(இந்திய நேரம்)