Primary tabs
- 3.2 பாடாண் - விளக்கம்
பாடப்பெறும் ஆண்மகனது ஆளுமைப் பண்புகளைக் கூறுதல் என்பது இதன் பொருள். இதனைக் கொளு,
ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று (கொளு.1)என விளக்குகிறது. ‘அரசனுடைய புகழையும் வலிமையையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாது பிறர்க்கு ஈயும் வள்ளல் தன்மையையும் அருளுடைமையையும் ஆய்ந்து கூறுதல்’ என்பது இதன் பொருள்.
வெண்பா, மேற்கண்ட தன்மைகளைப் புகழும் முறையை எடுத்துக் காட்டுகிறது.
மன்னர் மடங்கல் மறையவர் சொல் மாலை
அன்ன நடையினார்க்(கு) ஆரமுதம் - துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார்
எரிசினவேல் தானைஎம் கோ‘எங்கள் மன்னன் அரசர் பலருள் அரிமாப் போன்றவன்; அந்தணர்களுக்குப் புகழ்மாலை போன்றவன்; அன்ன நடைப் பெண்களுக்கு அமுதத்தை ஒத்தவன்; பரிசிலர்க்கு முகில் போன்றவன்’. இவ்வாறு வெண்பா பாடாண் படலத் தன்மையை விளக்குகிறது. பாடாண் படலத்தின் துறைகளைக் குறித்த விளக்கங்களைப் பகுத்துக் காண்போம்.