தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-காமம்

  • 3.8 காமம்

    காமம் காரணமாகப் பாராட்டி உரைப்பது பாடாண் திணையில் இடம்பெறுகிறது. கைக்கிளை, பெருந்திணை, புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு, கடவுள் மாட்டுக் கடவுள் பெண்டிர் நயந்த பக்கம், கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம், குழவிக்கண் தோன்றிய காமப் பகுதி, ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி ஆகிய துறைகள் இப்பொருளைப் புலப்படுத்துகின்றன.

    3.8.1 கைக்கிளை

    ஒருபுடைக்காதல் என்பது இதன் பொருள். இருவரில் ஒருவர் மட்டுமே கொண்ட காதல், ஒரு தலைக் காதல். அரசன் மீது பெண் ஆசை கொண்டதை இத்துறை விளக்குகிறது.

    தண்டாக் காதல் தளரியல் தலைவன்
    வண்தார் விரும்பிய வகையுரைத் தன்று          (கொளு.45)

    குறையாத காதலையும் அசையும் தன்மையையும் கொண்ட தலைவி, தலைவனது மாலையை விரும்புதல் என்பதாகக் கொளு விளக்கும்.

    மழைபெய்யும் கார்காலத்து மாலையில் தனிமை கொண்டு ஏங்கும் தலைவி, சோழ அரசன் இரவில் தன்னிடத்து வந்து தன்னைத் தழுவுவானா? என ஏங்குவதாக வெண்பா கைக்கிளையின் இயல்பை விளக்குகிறது.

    3.8.2 பெருந்திணை

    விரும்பாத நிலையிலும் விரும்பி அடைய முயல்வது என்பது பொருள்.

    பெய்கழல் பெருந்தகை பேணா முயக்கிவர்ந்து
    மல்கிருள் செல்வோள் வகைஉரைத் தன்று         (கொளு.46)

    வீரக்கழலையும் தலைமைத் தன்மையையுமுடைய தலைவன் விரும்பாமல் இருந்தும், அவன் தழுவுதலை விரும்பி இரவில் அவனிடத்துச் செல்பவளது இயல்பைக் கூறுவது என்பது இதன் விளக்கம்.

    பாண்டியனது மலைபோன்ற தோள்களைத் தழுவ ஆள் நடமாட்டம் ஓய்ந்த அவனது தெருவில் இருளில் செல்லும் பெண் அஞ்சாதிருக்கும் வகையில், மேகம் மின்னி வெளிச்சம் தந்தது என வெண்பா விளக்கமளிக்கிறது.

    3.8.3 புலவி பொருளாகத் தோன்றிய பாடாண்பாட்டு

    ‘ஊடல் கொண்ட நிலையில் தலைவன் இயல்பு பற்றி உரைத்தல் என்பது இதன் பொருள்.

    வில்லேர் நுதலி விறலோன் மார்பம்
    புல்லேம் யாமெனப் புலந்துரைத் தன்று          (கொளு.47)

    என்கிறது கொளு. அழகிய நெற்றியையுடைய பெண் வீரனது மார்பைத் தழுவேன் என ஊடுதல் என்பது இதன் விளக்கம்.

    பரத்தையர் பலரும் தோயும் தலைவனது மார்பில் யாம் தோயோம் என ஊடியதாக வெண்பா கூறுகிறது. பெண்கள் பலரும் விரும்பும் தன்மையை உடையவன் தலைவன் என்ற பாராட்டு ஊடலுக்குள் புதைந்திருக்கிறது.

    3.8.4 கடவுள் மாட்டுக் கடவுள் பெண்டிர் நயந்த பக்கம்

    தெய்வமகளிர் கடவுளரை விரும்புதல் என்பது பொருள்.

    இமையா நாட்டத்(து) இயங்கிழை மகளிர்
    அமையாக் காதல் அமரரை மகிழ்ந்தன்று         (கொளு.48)

    இமையாத தன்மையுடைய தெய்வ மகளிர் கடவுளரை விரும்பியது என்பது பொருள்.

    வெண்பா, உமாதேவியின் ஊடல் தீர்க்க முடியாது தவிக்கும் இறைவன் நிலையைக் காட்டித் தெய்வமகளிர் கடவுள் மீதுகொண்ட காதலை உணர்த்துகிறது.

    3.8.5 கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்

    மானிடப் பெண்கள், முக்கணான் ஆகிய சிவனை விரும்புவது என்பது இதன் பொருள்.

    முக்கணான் முயக்கம்வேட்ட
    மக்கட் பெண்டிர் மலிவுரைத்தன்று           (கொளு.49)

    என்று கொளு கூறுகிறது. மூன்று கண்களைக் கொண்ட சிவனைத் தழுவ விரும்பிய மானிடப் பெண்களின் தன்மையைக் கூறுவது என்பது பொருள்.

    பெண்ணுடைய நலத்தைச் சுவைத்தவன் இயற்கை வளம் மிக்க திருப்பாசூரைப் பதியாகக் கொண்டவன் என்று வெண்பா மானிடப் பெண்டிர் கடவுளை விரும்பியதைப் புலப்படுத்துகிறது.

    3.8.6 குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி

    குழவிப்பதமுடைய மைந்தர் மீது பெண்கள் அன்பு செலுத்துதல் என்பது பொருள்.

    இளமைந்தர் நலம்வேட்ட
    வளமங்கையர் வகையுரைத்தன்று             (கொளு.50)

    என்பது கொளு. குழவிப்பருவத்து மைந்தரிடம் அன்பு செலுத்தும் பெண்களின் இயல்பைக் கூறுதல் என்பது இதன் பொருள்.

    ‘சிறுவனே! இச்சிறுமி வருந்த அவள் பந்தினை ஒளித்துவைத்தாய். உன் தந்தையே வந்து பரிந்துரைத்தாலும் என்னை அணைத்துக்கொள்ள விடேன்’ என்று தாய் கூறுவதை வெண்பா காட்டுகிறது. சிறுவனது குறும்பு விளையாட்டைக் குறைப்பதற்காகக் கூறுதல் போன்று இது அமைந்துள்ளது.

    3.8.7 ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி

    ஆடவரும் பெண்டிரும் கூடும் ஊரின் சிறப்பைக் கூறுதல் என்பது பொருள்.

    நீங்காக் காதல் மைந்தரும் மகளிரும்
    பாங்குறக் கூடும் பதியுரைத் தன்று           (கொளு.51)

    என்பது கொளு.

    ‘கொண்ட ஊடல் அகல மனநெகிழ்ச்சியுடன் தழுவி மகிழும் பெண்டிர் இரவு நீடிக்கட்டும் என்று கைகூப்பி வணங்கும் இயல்பையுடையது காஞ்சிநகர்’ என வெண்பா இதனை விளக்குகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:16:38(இந்திய நேரம்)