Primary tabs
-
3.7 கடவுளை வாழ்த்தல்
பாடாண் திணையில் உள்ள கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்ந்தனர் பரவல், பழிச்சினர் பணிதல் ஆகிய துறைகள் கடவுளை வணங்குதலாக உள்ளன. கடவுள் நம்பிக்கை குறித்த செய்திகள் இப்பகுதிகளில் புலப்படுத்தப்படுகின்றன.
பெரும்பொருள் என்பது இதன் பொருள். ஒரு பற்றுக்கோடும் இல்லாத கடவுள் பற்றிய துறை. கண்ணன் வாணனது மதிலை அழித்ததைக் கூறும் துறை இது.
சூழுநேமியான் சோஎறிந்த
வீழாச்சீர் விறல்மிகுத்தன்று (கொளு.40)‘ஆழிப்படையை உடைய திருமால், சோ என்னும் கோட்டையினை அழித்த வெற்றியைக் கூறுதல்’ என்பது பொருள்.
‘திருமால் கருணை காட்டாமல் சினந்து நிற்கும் அளவில் எதிரிகளுடைய வீரக்கழல்கள் நெகிழ்கின்றன. கண்கள் அழல்கின்றன; அவர்தம் மகளிர் மயங்குகின்றனர்; அவர்கள் கோட்டை நெருப்பால் சூழப்பட்டது; திருமாலுடைய மாயம் இத்தன்மையது என்பதால் அவனைப் பசுக்கூட்டத்தை மேய்க்கும் இடையன் என்று கருதவேண்டாம்’, இவ்வாறு வெண்பா சிறப்பிக்கிறது.
வள்ளிக்கூத்து என்பது இதன் பொருள். முருகனுக்காக ஆடும் வெறி எனும் கூத்து எனவும் பொருள் படும்.
பூண்முலையார் மனம்உருக
வேல்முருகற்கு வெறிஆடின்று (கொளு.41)‘அணிகலன்களை அணிந்த மகளிர் தங்கள் நெஞ்சம் நெகிழும்படி வேல் முருகனுக்கு வெறி என்னும் கூத்தை ஆடுதல் என்பது பொருள். வெண்பா வெறிக் கூத்து ஆடும் முறையை விளக்குகின்றது, ‘இளநங்கையர்கள் இசைக்கருவிகளின் முழக்கத்திடையே சூலத்தை ஏந்திய சிவபெருமானின் மகனாகிய முருகனுக்காக வேலனுடன் ஆடும் வெறிக்கூத்து வீடுபேறு நல்குவது’ என்று வெண்பா விளக்குகிறது.
புலவனை இறைவனிடத்து வழிப்படுத்துதல் என்பது பொருள். புலவன் என்பதற்குப் பேரறிவாளன் என்றும் பொருள் உண்டு. திருமுருகாற்றுப்படை இலக்கியம் இவ்வகையில் அமைந்தது.
இருங்கண்வானத்(து) இமையோர்உழைப்
பெரும்புலவனை ஆற்றுப்படுத்தன்று (கொளு.42)பரந்த வானுலகத்தில் வாழும் தேவர்களிடத்துப் பேரறிவாளனை வழிப்படுத்தல் என்பது பொருள்.
ஆற்றுப்படை முறையை வெண்பா காட்டுகிறது.
வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் வடிவத்தோய் நீயும் - பொறிகட்கு
இருள்ஈயும் ஞாலத்(து) இடரெல்லாம் நீங்க
அருள்ஈயும் ஆழி அவன்‘அறிஞனே! அருவி ஒலிக்கும் வேங்கட மலைக்குச் சென்றால், அங்கு எழுந்தருளியுள்ள சக்கரப்படையைக் கொண்ட திருமால் ஐம்பொறிகளுக்கும் மயக்கத்தைத் தருகிற இவ்வுலகத் துன்பங்கள் எல்லாம் உன்னை விட்டு நீங்கும்படி உனக்குத் திருவருளை வழங்குவான்,’ இவ்வாறு வெண்பா கிடைக்கக் கூடிய அருளையும் கூறுகிறது.
புகழ்ந்து வணங்குதல் என்பது பொருள். இறைவனைப் புகழ்ந்து பணிதலை இத்துறை காட்டுகிறது.
இன்னதொன்(று) எய்துதும் இருநிலத்(து) யாம்எனத்
துன்னரும் கடவுள் தொடுகழல் தொழுதன்று (கொளு.43)‘பெரிய நிலவுலகத்தில் யாம் இன்ன ஒரு பேற்றைப் பெறுவோமாக என்று கிடைத்தற்கரிய தெய்வத்தின் வீரக்கழல் கட்டிய திருவடியைத் தொழுதல்’ என்பது பொருள்.
வெண்பாவில் இதன் விளக்கம் காணப்படுகிறது. ‘பிறை சூடிய இறைவனே. பேய்கள் சூழ்ந்த சுடுகாடாகிய சாம்பல் அரங்கத்தில் ஓயாமல் ஆடியும் களைக்காத உன் திருவடிகளைப் பலமுறை பணிந்து பாடி வணங்குவோம்’ என்பது புகழ்ந்தனர் பரவல்.
வாழ்த்திப் பணிதல் என்பது பொருள். இறைவனிடம் பயன் பெறுவதற்காகப் பணிதல்.
வயங்கியபுகழ் வானவனைப்
பயன்கருதப் பழிச்சினர் பணிந்தன்று (கொளு.44)புகழையுடைய இறைவனை இவ்வுலகப் பேறுகளைப் பெறக் கருதி வாழ்த்திப் பணிதல் என்பது இதன் பொருள்.
வீடுபேறு பெறக் கருதி வணங்காமல் உலகியல் பயன் கருதி வணங்குதல். ஈசனை வணங்கினால் எல்லாம் பெறலாம் என வெண்பா சுட்டுகிறது. ‘உமையவளை ஒருபக்கத்தே கொண்ட கூத்தாடும் பெருமானின் கழுத்தில் மாலையாகத் தவழும் பாம்பு அவனைத் தழுவும் பேறு பெற்றுள்ளது; ஆதலால் அவனுடைய அடியைப் பணிந்தவர்கள் என்னதான் பெற முடியாது?’ என்று வெண்பா காட்டுகிறது.