தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-கொடைச் சிறப்புரைத்தல்

  • 3.5 கொடைச் சிறப்புரைத்தல்

    மன்னனது கொடைச்சிறப்பைக் காட்டும் துறைகள் சில பாடாண் திணையில் உள. ‘ஆற்றுப்படை’ என்று இலக்கிய வகையாகவும் உள. பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, விறலியாற்றுப்படை ஆகிய துறைகள் கொடைச் சிறப்பைக் கூறுவன. ஆறு எனில் வழி. படை எனில் செலுத்தல். வள்ளல்களை அணுகித் தம் திறமையைக் காட்டிப் பரிசில் பெற்றுச் செல்வ வளத்தோடு மீண்டுவரும் கூத்தர் முதலியோர், வழியில் வறுமையால் துன்புறும் தம் இனத்தவரைக் கண்டு அவர்களை அவ்வள்ளல்களிடம் செல்லுமாறு வழிப்படுத்துதல் ஆற்றுப்படை. பத்துப்பாட்டுள் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாஅம் (கூத்தராற்றுப்படை) என்பன தனி இலக்கியங்களாகத் திகழ்கின்றன. அரசனுடைய கொடைச்சிறப்பைக் கூறும் உத்தியாக இத்துறைகள் உள்ளன.

    3.5.1 பாணாற்றுப்படை

    பாணனை வழிப்படுத்துவது என்பது பொருள். பரிசுபெற்ற பாணன், பெறாத பாணனை வள்ளல் இருப்பிடம் நோக்கி வழிப்படுத்துவது பாணாற்றுப்படை.

    சேண்ஓங்கிய வரைஅதரில்
    பாணனை ஆற்றுப்படுத்தன்று              (கொளு.28)

    ‘ஓங்கி உயர்ந்த மலைப்பாதையில் பரிசில் பெற்றுவரும் பாணன் தன் எதிரில் வந்த பாணனைப் பரிசில் பெறும் வழியைக்காட்டிச் செலுத்துதல்’ என்பது கொளுவின் பொருள்.

    இன்தொடை நல்இசை யாழ்ப்பாண எம்மைப் போல்
    கன்றுடை வேழத்த கான்கடந்து - சென்றடையில்
    காமரு சாயலாள் கேள்வன் கயமலராத்
    தாமரை சென்னி தரும்.

    யாழ்வல்ல பாணனே! எம்மைப்போல் யானைகள் நடமாடும் காட்டினைக் கடந்து போய் வள்ளலது நாட்டை அடைந்தால் அவன் பொற்றாமரை மலரை நின் தலையில் சூட்டுவான்’ என்று பரிசில் பெற்ற பாணன் கூற்றாக உள்ளது வெண்பா.

    3.5.2 கூத்தர் ஆற்றுப்படை

    கூத்தனை ஆற்றுப்படுத்தல். பரிசில் பெற்றுவரும் கூத்தன், பெறாத கூத்தனை ஆற்றுப் படுத்துதல்.

    ஏத்திச்சென்ற இரவலன்
    கூத்தரை ஆற்றுப்படுத்தன்று               (கொளு.29)

    பரிசில் பெறுதற்காக வள்ளலை வாழ்த்திச் சென்ற இரவலனாகிய கூத்தன், வழியே வந்த கூத்தரை வள்ளலிடம் ஆற்றுப்படுத்துதல் என்று பொருள் கூத்தன் என்பவன் ஆடற்கலைஞன்.

    ‘கொலைவில் புருவத்துக் கொம்(பு) அன்னார் கூத்தின்
    தலைவ தவிராது சேறி - சிலைகுலாம்
    காரினை வென்ற கவிகையான் கைவளம்
    வாரினைக் கொண்டு வரற்கு’

    ‘விறலியர் ஆடும் கூத்தின் தலைவனே! மேகத்தினை வெல்லும் வகையில் வள்ளல் வாரி வழங்கும் செல்வத்தினை வாரிக்கொண்டு வருவதற்குத் தவறாமல் அவன் பால் செல்வாயாக’ என ஆற்றுப்படுத்துவதை வெண்பா காட்டுகிறது.

    3.5.3 பொருநர் ஆற்றுப்படை

    பொருநனை ஆற்றுப்படுத்துதல் என்பது பொருள். பொருநன் எனில் கிணை வாசிப்பவன் என்பது பொருள். பரிசில்பெற்ற கிணைவாசிப்பவன், பெறாத கிணைவாசிப்பவனை வள்ளலை நோக்கி ஆற்றுப்படுத்துதல்.

    பெருநல்லான் உழையீர்ஆகெனப்
    பொருநனை ஆற்றுப்படுத்தன்று             (கொளு.30)

    ‘மிக நல்லவனாகிய அவ்வள்ளலிடம் செல்க எனப் பொருநனை ஆற்றுப்படுத்துதல்’ என்பது கொளு தரும் பொருள்.

    ‘தெருவில் அலமரும் தெள்கண் தடாரிப்
    பொரு(வு) இல் பொருந நீ செல்லின் - செருவில்
    அடுதடக்கை நோன்தாள் அமர்வெய்யோன் ஈயும்
    நெடுந்தடக்கை யானை நிரை’

    ‘தெருக்கள் தோறும் கிணை வாசிக்கின்ற பொருநனே, போரில் வெல்லும் ஆற்றல்மிக்க அவ்வள்ளலிடம் சென்றால், கொல்லும் துதிக்கையையும் வலிய காலடிகளையும் கொண்ட யானைக் கூட்டத்தைப் பரிசாகக் கொடுப்பான்’- என வெண்பா விளக்குகிறது.

    3.5.4 விறலி ஆற்றப்படை

    விறலியை ஆற்றுப்படுத்துதல் என்பது இதன் பொருள். விறலி எனில் உள்ளக் குறிப்பு வெளிப்பட ஆடுபவள் என்று பொருள். இவள் பாணர் குல மகள். பரிசில் பெற்று வரும் விறலி, பெறாத விறலியை வள்ளலிடத்து ஆற்றுப்படுத்துவது.

    திறல் வேந்தன் புகழ்பாடும்
    விறலியை ஆற்றுப்படுத்தன்று                   (கொளு.31)

    வெற்றியைக் கொண்ட மன்னனது புகழைப்பாடும் விறலியை வள்ளலிடத்தில் ஆற்றுப்படுத்தல் என்று பொருள்.

    சில்வளைக்கைச் செவ்வாய் விறலிசெருப் படையான்
    பல்புகழ் பாடிப் படர்தியேல் - நல் அவையோர்
    ஏத்த இழை அணிந்(து) இன்னே வருதியால்
    பூத்த கொடிபோல் புனைந்து

    ‘விறலியே! படைவலிமை மிக்க அவ்வள்ளலின் புகழைப் பாடிக்கொண்டு சென்றால், அவன் தரும் அணிகலன்களால் பூங்கொடி போலப் பொலிவு பெறுவாய்’ என, வெண்பா விறலியை ஆற்றுப்படுத்தும் வகையைக் காட்டுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:16:28(இந்திய நேரம்)