Primary tabs
-
3.4 அரசனை வாழ்த்தல்
பொதுவாக அரசனை வாழ்த்தும் சூழ்நிலைகள் சில துறைகளில் காட்டப்பட்டுள்ளன. கண்படைநிலை முதல் ஆள்வினை வேள்வி வரையான 18 துறைகள் இத்தன்மையில் அமைந்தவை. அவற்றிடையே காணும் பொதுமை அடிப்படையில் சில பிரிவுகளில் அவை விளக்கப்படுகின்றன.
3.4.1 கண்படை நிலை, துயில் எடைநிலை
அரசன் உறங்குதலையும் விழித்தலையும் கூறும் துறைகள் இவை. தூங்குமாறும் விழித்தெழுமாறும் வாழ்த்திப்பாடும் மரபு உண்டு.
- கண்படை நிலை
உறக்கம் கொள்ளும் நிலை என்பது இதன் பொருள். கொளு,
நெடுந்தேர்த் தானை நீறுபட நடக்கும்
கடுந்தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று (கொளு. 8)என விளக்குகிறது. ‘தேரினையுடைய பகைவர் தூளாகும்படி செல்லும் வலிய தேரையுடைய அரசனது உறக்கத்தைச் சிறப்பித்துக் கூறுதல்’ என்பது கொளுவின் பொருள். வெண்பா அரசன் தன் திறனால் பாதுகாப்புகளை ஏற்படுத்திவிட்டுக் கவலையின்றி உறக்கம் கொள்வான் எனக் காட்டுகிறது.
‘போரில் பகைவரை வென்று, நாட்டில் செங்கோலால் கொடியவற்றை நீக்கிக் கவலை இல்லாததால் அரசன் கண்கள் உறக்கத்தை மேவின’ எனக் காட்டுகிறது வெண்பா. ‘கண்படைநிலை’ வாகைத் திணையிலும் துறையாக இடம் பெற்றுள்ளது. ‘கண்படைநிலை’ என்பது தனிவகைச் சிற்றிலக்கியமாகப் பின்னர் உருவாயிற்று.
- துயில் எடை நிலை
துயில் எழுப்பல் என்று இதற்குப் பொருள். கடமை ஆற்றுவதற்கு அரசனை உறக்கத்திலிருந்து எழுப்பும் தன்மையைக் கூறுதல். இது பள்ளி எழுச்சி எனவும் குறிப்பிடப்படுகிறது. இறைவனுக்குப் பள்ளியெழுச்சி பாடுதல் மரபாக உள்ளது. கொளு,
அடுதிறல் மன்னரை அருளிய எழுகஎனத்
தொடுகழல் மன்னனைத் துயில் எடுப்பின்று (கொளு.9)‘வீரக்கழல் அணிந்த மன்னனை, நின்பகை மன்னருக்கு அருள் செய்ய எழுந்திருப்பாயாக எனக் கூறி உறக்கத்திலிருந்து எழுப்புதல்’ என்பது பொருள்.
வெண்பா, ‘மன்னனே! உலகத்து மன்னர் பலர் திறைப்பொருளுடன் உன்னை வணங்கும் வகையில் உன் தாமரைக் கண்கள் உறக்கத்திலிருந்து எழுவனவாக’ என்று விளக்குகிறது. ‘துயில் எடை நிலை’ என்பதும் தனிச் சிற்றிலக்கியமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
3.4.2 மங்கல நிலை, விளக்குநிலை, கபிலை கண்ணிய புண்ணிய நிலை, வேள்வி நிலை
இந்நான்கு துறைகளும் மங்கலத்தன்மைகளையும் சடங்குகளையும் கூறுவன என்ற பொதுத்தன்மை கொண்டவை. அரசன்முன் மங்கலமான செய்திகளைக் கூறுதல், மன்னனது விளக்கின் பெருமை, அந்தணருக்கு அரசன் படி வழங்குதல், அரசன் வேள்வி செய்தல் ஆகியவற்றை இத்துறைகள் காட்டுகின்றன.
- மங்கல நிலை
மங்கலம் கூறுதல் என்பது இதன் பொருள். தூங்கி எழுந்த அரசன் முன் இவ்வாறு மங்கலம் கூறுதல் மரபு இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அரசன் பொழுது புலரும் வரை இன்பங்கள் துய்த்ததைக் கூறுவதும் இத்துறையில் அடங்கும்.
1. கங்குல் கனைதுயில் எழுந்தோன் முன்னர்
மங்கலம் கூறிய மலிவுரைத் தன்று (கொளு.10)எனக் கொளு விளக்குகிறது: இரவின்கண் நன்கு துயில் கொண்டு எழுந்த அரசன் முன்னர் மங்கலச் செய்திகளைச் சொல்வதைக் கூறுதல் என்பது இதன் பொருள்.
‘மங்கலம்’ மங்கலம்’ என்று செய்திகளைச் சொல்லும் மரபு வெண்பாவில் காட்டப்படுகிறது.
விண்வேண்டின் வேறாதல் மங்கலம் வேந்தர்க்கு
மண்வேண்டின் கைகூப்பல் மங்கலம் - பெண்வேண்டின்
துன்னல் மடவார்க்கு மங்கலம் தோலாப்போர்
மன்னன் வரைபுரையும் மார்பு’‘பகையரசர் சுவர்க்கம் அடைய விரும்பின் உன்னிடம் மாறுபட்டுப் போருக்கு எழுவர்; வேற்றரசர்கள் தம் நாடுகளைத் தம் வசமே வைத்துக்கொள்ள வேண்டுமெனில் நின்னை அடிபணிந்து வாழ்வர்; மகளிர் இன்பம் வேண்டின் நின் மார்பினை முயங்கி மகிழ்ச்சியடைவர்.’ இவ்வாறு வெண்பா அரசனுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்திகளைக் காட்டுகிறது.
2. ‘மன்னிய சிறப்பின் மங்கல மரபில்
துன்னினன் என்றலும் அத்துறை ஆகும் (கொளு.11)‘நின்று நிலைத்த மங்கலத்தை மரபினால் அடைந்தான் என்பதும் மங்கலநிலை என்னும் துறை சார்ந்தது’ என்பது இதன்பொருள். அரசன் பொழுது விடியும் வரை இரவில் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று ஐம்பொறி இன்பத்தை நிறையத் துய்த்தனன் என்று கூறுவதை மங்கல நிலைக்கு விளக்கமாக வெண்பா காட்டுகிறது.
- விளக்கு நிலை
விளக்கின் தன்மை என்பது இதன் பொருள். அரசனது விளக்கின் சிறப்பைக் கூறுதலும் மரபு. செங்கோற் சிறப்பைக் கூறுவது போன்றது இது. இத்துறைக்கும் இரண்டு விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அரசனை உலகின் விளக்காகிய கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுவதும் இத்துறையே ஆகும்.
1. அளப்பரும் கடல் தானையான்
விளக்குநிலை விரித்துரைத்தன்று (கொளு. 12)‘கடல்போல் பெரிய படையினைக் கொண்ட அரசனது திருவிளக்கின் சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள்.
விளக்கு எரியும் நிலையைக் கொண்டு அரசனின் வெற்றியைக் கணிப்பதை வெண்பா காட்டுகிறது. ‘காற்றுவேகமாக வீசினும் அரசனது திருவிளக்கு வலமாகச் சுழன்று ஒளி மிகுந்து காணப்படுவதால், அவன் எப்பொழுதும் வெற்றி வீரனாகவே திகழ்வான்’ என்று வெண்பா விளக்குகிறது.
2. அடர்அவிர் பைம்பூண் வேந்தன் தன்னைச்
சுடரொடு பொருவினும் அத்துறை ஆகும் (கொளு. 13)‘பொன்னும் மணியும் பூண்டு, ஒளிர்கின்ற மன்னனைக் கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுவதும் இத்துறை ஆகும்’ என்பது பொருள்.
வெண்பா இதனை நன்கு விளக்குகிறது. ‘கதிரவன் தோன்றியவுடனேயே இரவில் வானில் ஒளிவீசிய விண்மீன் முதலியன ஒளி மழுங்கினாற்போல், இம்மன்னன் அரியணை ஏறிய பின் ஏனைய வேந்தர் திரள் ஒளியிழந்து நிற்கும்’ என வெண்பா காட்டுகிறது.
- கபிலை கண்ணிய புண்ணிய நிலை
கபிலைப் பசுக்களைத் தானம் செய்தல் என்பது இதன் பொருள். கபிலை என்பது செந்நிறப்பசுவைக் குறிக்கிறது. குறிப்பாக அந்தணர்களுக்குத் தானம் செய்தலை இது கூறுகின்றது.
அண்ணல் நான்மறை அந்த ணாளர்க்குக்
கண்ணிய கபிலை நிலைஉரைத் தன்று (கொளு.14)‘சிறப்பு மிக்க நான்கு மறைகளையும் கற்ற அந்தணர்களுக்குத் தானமாகக் கொடுக்கக் கருதிய ஆவினது தன்மையைக் கூறுதல்’ என்பது பொருள். ‘பகைவர் நடுங்கும் வண்ணம் காலையில் முரசம் ஒலிக்க, பருத்த மாணிக்கங்களையும் பொன்னையும் அந்தணர்கள் தாமே எடுத்துக் கொள்ளச் செய்து, கபிலை நிறமுடைய ஆன்களைத் தானமாகக் கொடுத்தான் அரசன்’ என்று வெண்பா விளக்கியுள்ளது.
- வேள்வி நிலை
வேள்வி செய்தல் என்பது பொருள்.
‘அந்தமில் புகழான் அமரரும் மகிழச்
செந்தீ வேட்ட சிறப்புரைத் தன்று’ (கொளு.15)‘குறையாத புகழைக் கொண்ட அரசன், தேவர்களும் மனம் மகிழும்படி தீ வளர்த்து வேள்வி செய்த சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள்.
வேந்தன் வேள்வி செய்ததைத் தேவர் ஏற்றுக் கொண்டதை வெண்பா கூறுகிறது. ‘புகழுடைய வேந்தன் வேள்வி செய்ய அந்தணர் மகிழ்தலே அன்றி, வானுலகில் உள்ள தேவர்களும் அக்னி தேவனைத் தம் வாயாகக் கொண்டு முறையாக அவியுணவை ஏற்றுக் கொண்டனர்’ என்கிறது வெண்பா.
வெள்ளி (சுக்கிரன்)யின் இயல்பு என்று பொருள். வெள்ளி கிரகம் மழைக்குக் காரணமானது என்ற நம்பிக்கை உள்ளது. அரசன் செங்கோன்மை தவறாதிருந்தால் வெள்ளி மழைபெய்விக்கும் என்று கருதுவர். இதனைக் கொண்டு அரசனின் செங்கோன்மைச் சிறப்பைக் கூறும் துறை இது.
துயர்தீரப் புயல்தரும்என
உயர்வெள்ளி நிலைஉரைத்தன்று (கொளு.16)‘மழையின்மையால் உலகடைந்த துயர்தீர மேகம் மழை தரும் என வெள்ளிக் கோளின் தன்மையைக் கூறுதல்’ என்பது பொருள். வெள்ளிக் கோள் வானில் நல்ல நிலையில் நின்று ஒளிபரத்தலால், மேகம் நீர்த்தாரைகளைச் சொரிந்து வெள்ளத்தை உருவாக்கும் என வெண்பா விளக்குகிறது.
3.4.4 நாடுவாழ்த்து, கிணைநிலை, களவழி வாழ்த்து, வீற்றினிதிருந்த பெருமங்கலம், குடுமி களைந்த புகழ்சாற்று நிலை
இப்பிரிவில் கூறப்படும் ஐந்து துறைகளும் அரசனின் ஆட்சிச் சிறப்பையும் வீரச்சிறப்பையும் எடுத்துக் காட்டுவன. அரசனின் வளம் மிக்க நாட்டின் சிறப்பு அரசாட்சி குறித்துக் கிணை கொட்டுபவன் பாராட்டல், போரில் மன்னர் கைப்பற்றிய செல்வ வளம், அரியணையில் அரசன் வீற்றிருக்கும் சிறப்பு, பகைவரது முடியைக் களைந்த வீரம் ஆகியவற்றை இவை காட்டுகின்றன. கிணைநிலை வாகைத்திணையிலும் துறையாக இடம் பெற்றுள்ளது.
- நாடு வாழ்த்து
நாட்டினை வாழ்த்துதல் என்பது இதன் பொருள். அரசனது நாட்டுச் சிறப்பைக் கூறுவது இத்துறை.
தாள்தாழ் தடக்கையான்
நாட்டது வளம்உரைத்தன்று (கொளு.17)நீண்ட கைகளையுடைய அரசனது வளம் மிக்க நாட்டை வாழ்த்துதல் என்பது பொருள்.
வளத்துக்கான காரணங்களை வெண்பா சுட்டுகிறது. எட்டு வகையான கேடுகள் இன்றி நாடு வளமாக உள்ளது என்று சொல்வதன் மூலம் அரசனின் ஆட்சிச் சிறப்பைக் எடுத்துக்காட்டுகிறது. விட்டில், கிளி, யானை, வேற்றரசுப் படையெடுப்பு, உள்நாட்டுக் குழப்பம், மழைக் குறைவு, மழை மிகுதி, புயல் என எண்வகை இடையூறுகள் இன்றி நெற்பயிர்களூடே குவளை மலர்கள் களைகளாக விளங்கும் வண்ணம் தேவருலகம் போல் கவலையற்று வாழும் இன்ப வாழ்க்கையை இம்மன்னன் நாடு மக்களுக்கு வழங்கியுள்ளது என்று வெண்பா புலப்படுத்துகிறது.
- கிணை நிலை
தடாரிப்பறை கொட்டுபவனின் இயல்பு என்பது இதன் பொருள்.
திருக்கிளரும் அகன்கோயில்
அரிக்கிணைவன் வளம்உரைத்தன்று (கொளு.18)அரசனது செல்வம் பெருகும் அகன்ற மாளிகையில் அழகிய தடாரிப்பறையைக் கொட்டுபவனின் செயலைக் கூறுதல் என்பது கொளுவின் பொருள்.
கிணை வாசிப்பவன் அரசனது கொடைச் சிறப்பைக் கூறுவதை வெண்பா காட்டுகிறது. ‘வெள்ளி முளைத்த விடியற்காலத்தில் வள்ளலான அரசனது அரண்மனையை அடைந்து வாயிலில் கிணைப் பறையைக் கொட்டி ‘நின் யானை வாழ்க’ என்று சொல்லுவதன் முன் அவன் கொடுக்கும் பரிசிலால் வறுமைத்துயர் ஒழிந்தது’ என்று கிணைவாசிப்பவன் கூற்றாக வெண்பா விளக்குகிறது. கிணைநிலை என்னும் துறை வாகைப் படலத்திலும் உண்டு. அது குறித்து முந்தைய பாடத்தில் படித்திருப்பீர்கள்.
- களவழி வாழ்த்து
போர்க்கள வெற்றியை வாழ்த்துதல் என்பது இதன் பொருள். யாழ்ப் பாணர்கள் போர்க்களத்தில் நிகழ்வுகளைக் கண்டு வாழ்த்துவர்.
செங்களத்துச் செழுஞ்செல்வம்
வெண்துறையாழ்ப் பாணர்விளம்பின்று (கொளு. 19)‘மன்னன் போர்க்களத்தில் அடைந்த பெருஞ் செல்வத்தைப் பற்றிப் புகழ்ந்து கூறுதல்’ என்பது பொருள்.
வெண்பா, பாணன் போர்க்களத்தில் அரசனிடமிருந்து யானையைப் பரிசிலாகப் பெற்றதைக் குறிப்பிடுகிறது.
- வீற்றினிதிருந்த பெருமங்கலம்
இனிதாக அரியணையில் வீற்றிருக்கும் தோற்றம் என்பது இதன் பொருள்.
கூற்றிருந்த கொலைவேலான்
வீற்றிருந்த விறல் மிகுத்தன்று (கொளு.20)‘கூற்றுவன் குடியிருப்பது போன்ற கொடுந்தன்மை மிக்க வேலையுடைய அரசன் வீற்றிருக்கும் சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள்.
செம்மாந்த நிலையை வெண்பா விளக்குகிறது. ‘அரசர்கள் பலரும் வாழ்த்தி நிற்க, கடல் சூழ்ந்த நாவலம் தீவு முழுமைக்கும் அரசன் எனக் கழல் அணிந்து அரியணையில் வீற்றிருந்தான்’ என வெண்பா சிறப்பிக்கிறது.
- குடுமி களைந்த புகழ் சாற்றுநிலை
குடுமியைக் களைந்த புகழ்மிக்க செயலைக் கூறும் நிலை என்பது பொருள். ‘களைந்த’ என்பதற்கு ‘முடிந்த’ என்று பொருள்கொண்டு குடுமியை முடிந்த புகழ்மிக்க செயலைக் கூறும் நிலை என்றும் பொருள் கூறுவர். பெரும்பாலான உரைகளில் ‘களைந்த’ எனவே பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. வென்ற மன்னன் பகைவனது குடுமியைக் களையச் செய்வான் என்று பொருள் கொள்கின்றனர். வெற்றிபெற்ற பின் குடுமியை முடிவேன் என்று சபதம் செய்து அதை நிறைவேற்றுவது என்றும் பொருள் கொள்கின்றனர். பகைவரது மணிமுடியை நீக்குதல் என்றும் பொருள் கொள்வர். இதனை,
நெடுமதில் எறிந்து நிரைதார் மன்னன்.
குடுமி களைந்த மலிவு உரைத்தன்று (கொளு.21)எனக் காட்டுகிறது. பெரிய கோட்டையை அழித்து மன்னன், பகை வேந்தன் தன் குடுமி களைந்த வீரத்தைக் கூறுதல் என்று பொருள். ‘களைந்த’, ‘முடிந்த’ என்னும் இருபொருள்களும் கொள்ளும் வகையில் கொளு அமைந்துள்ளது. வெண்பா, வென்ற அரசனை முருகனுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது. ‘சரவணப் பொய்கையில் பிறந்து வானுலகின் வேந்தன் இந்திரனை வென்ற முருகன்போல அரசன், பகையரசன் கோட்டையைக் கைப்பற்றிக் குடுமி களைந்தான்’ என்கிறது.
‘நெடுமதில் கொண்டு நிலமிசையோர் ஏத்தக்
குடுமி களைந்தான்எம் கோ’என்னும் வெண்பா அடிகளுக்குக் ‘குடுமி முடிந்தான்’, ‘மணிமுடியை நீக்கினான்’ என்றும் பொருள் கொள்ளலாம்.
3.4.5 மணமங்கலம், பொலிவுமங்கலம்
அரசன் திருமணம் செய்துகொள்ளுதலை எடுத்துரைத்தலையும் குழந்தைப் பேறு அடைதலையும் பாடாண் திணை கூறுகிறது. இதனை மணமங்கலம், பொலிவுமங்கலம் என்னும் இரு துறைகள் விளக்குகின்றன.
- மணமங்கலம்
இகல்அடு தோள் எறிவேல் மன்னன்
மகளிரொடு மணந்த மங்கலம் கூறின்று (கொளு.22)‘பகையை வெல்லும் வலிமை மிக்க தோள்களையும் வேலினையும் கொண்ட மன்னன், மகளிரை மணந்த தன்மையைக் கூறுதல்’ என்பது கொளுவின் பொருள்.
வெண்பா, பெருவேந்தனது அழகிய மகளை அரசன் மணந்துகொண்டான் எனக் காட்டுகிறது. இத்துறைக்கு, அரசன் உரிமைப் பெண்கள் மகிழும் வண்ணம் கூடி மகிழ்ந்த சிறப்பைக் கூறுதல் எனவும் பொருள் கூறுகின்றனர்.
- பொலிவு மங்கலம்
வேல்வேந்தன் உள்மகிழப்
பாலன்பிறப்பப் பலர்புகழ்ந்தன்று (கொளு.23)வேலினைக் கொண்ட அரசன் மகிழ அவனுக்குப் புதல்வன் பிறத்தலைப் பலரும் கொண்டாடுதல் என்பது பொருள். அரசனுக்கு மகன் பிறந்த நிகழ்வை விண்ணோர்களும் உலகிலுள்ளார்களும் புகழ்வதாகவும் பகைவர்கள் பகை மறந்ததாகவும் வெண்பா காட்டுகிறது.
பிறந்தநாளின் சிறப்பு என்பது இதன் பொருள். அரசனின் பிறந்த நாளைக் கொண்டாடும் மரபு கூறப்படுகிறது.
அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன்
பிறந்தநாள் சிறப்பு உரைத் தன்று (கொளு.24)தருமத்தினை விளைக்கும் செங்கோலினையும் அருளினையும் கொண்ட அரசனின் பிறந்த நாளின் தன்மையைச் சொல்லுதல் என்று கொளு விளக்குகிறது.
அரசன், தனது பிறந்த நாளில் இரவலர்க்கு மட்டும் அன்றிப் பகைவர்க்கும் இனியனாக இருப்பான் என்பதை வெண்பா காட்டுகிறது.
‘கரும்பகடும் செம்பொன்னும் வெள்ளணிநாள் பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ - சுரும்பிமிழ்தார்
வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து
தம்மதில் தாம்திறப்பர் தாள்.’மன்னன் பிறந்த நாளிலே யானையையும் பொன்னையும் பெற்றவர்கள் மகிழ்தல் சிறப்பாகுமோ? பகை மன்னர்கள் கூட அச்சம் நீங்கித் தமக்குரிய பெண்களின் தோள்களைத் தழுவத் தாம் அடைத்திருந்த கோட்டையின் தாள்களைத் தாமே திறப்பது அல்லவா சிறப்பு! இவ்வாறு எடுத்துக்காட்டு வெண்பா, பிறந்த நாள் சிறப்பைக் காட்டுகிறது.
3.4.7 பரிசில் நிலை, பரிசில் விடை
அரசர்கள் இரவலர்க்குப் பரிசில் வழங்கிய பின் உடனே விடைகொடாமல் காலம் கடத்துவது குறித்தும் உடனே விடை கொடுத்தல் பற்றியும் துறைகள் காட்டுகின்றன.
- பரிசில் நிலை
புரவலன் மகிழ்தூங்க
இரவலன் கடைக்கூடின்று (கொளு.25)‘புரவலன், இரவலனுக்கு விடை தராமல் தன் வேலையில் மகிழ்ந்திருக்க, அவன் தன் இருப்பிடத்திற்குப்போக ஒருப்படுதல்’. என்பது கொளு தரும் விளக்கம்.
விடை தராத அரசனிடம் இரவலன் விடை தர வேண்டுதலை வெண்பா காட்டுகிறது. ‘தேரைப்பரிசாக வழங்கிய பின்னும் மன்னன் விடை தரக் காலம் தாழ்த்த, இரவலனுடைய சுற்றம், பகைவர் நாடு கலங்குவதைப் போலக் கலங்கும் என்று இரவலன் வேண்டுகிறான்.
- பரிசில் விடை
வேந்தன் உள்மகிழ வெல்புகழ் அறைந்தோர்க்கு
ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று (கொளு.26)‘அரசனது உள்ளம் மகிழும்படி அவனது புகழைக் கூறிய பரிசிலர்க்குப் பரிசில் கொடுத்து மகிழ்வுடன் விடை அளித்தல்’ என்பது இதன் பொருள்.
இரவலரை வழியனுப்பும் முறையை வெண்பா காட்டுகிறது.
படைநவின்ற பல்களிறும் பண்ணமைந்த தேரும்
நடைநவின்ற பாய்மாவும் நல்கிக் - கடையிறந்து
முன்வந்த மன்னர் முடிவணங்கும் சேவடியால்
பின்வந்தான் பேரருளி னான்‘மன்னன், படையில் பயின்ற களிறு பலவற்றையும் ஒப்பனை செய்யப்பட்ட தேரினையும் தாளகதியில் நடையிடும் குதிரைகளையும் வழங்கி, இரவலரை வழியனுப்பத் தானே வாயிலையும் கடந்து நடந்துவந்தான்’ என்று வெண்பா விளக்குகிறது.
விருந்தோம்பல் முதலான செயல்கள் என்று பொருள். இது அரசனது விருந்தோம்பல் பண்பைக் காட்டுகிறது.
வினை முற்றிய கனைகழலோன்
மனைவேள்வி மலிவு உரைத்தன்று (கொளு.27)‘தான் மேற்கொண்ட வினையை முடித்த அரசனது இல்லறக் கடமையைக் கூறுதல்’ என்று பொருள் அரசனது இல்லறச் சிறப்பைக் காட்டுவது இத்துறை. ‘வாட்போரினை முடித்த அரசன், தன் இல்லத்திற்கு விருந்தினராக வருபவர் வரலாம் என்று சொல்வதன்மூலம் எல்லா உயிரும் மகிழும்படி பாதுகாத்தலால் அவன் புகழ் நீண்ட காலம் வாழும்.’ என்று வெண்பா விளக்கமளிக்கிறது.