தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-அறிவுறுத்தலும் போற்றுதலும்

  • 3.6 அறிவுறுத்தலும் போற்றுதலும்

    அரசனுக்கு இப்பொழுது வேண்டாவிடினும் பின்னர்ப் பயன்படும் வகையில் சான்றோர் கூறும் அறிவுரைகள் வாயுறைவாழ்த்து எனப்படுகின்றன. அரசனுக்குரிய நெறிகளையும் கடமைகளையும் நடத்தைகளையும் அவனிடம் அறிவுறுத்துதல் புலவர் கடமை, செவிக்கண் பதியுமாறு கூறுவதால் இது செவியறிவுறூஉ எனப்படுகிறது. அரசனுடைய வெண்கொற்றக் குடையைச் சிறப்பிப்பது, அரசனது வாளைச்சிறப்பிப்பது, அரசன் புண்ணிய நீரில் நீராடியதைச் சிறப்பிப்பது, அரசனுக்குப் பாதுகாப்பானவற்றைக் கூறுதல் என்பன அரசனைப் போற்றுதல் தொடர்பானவை. அறிவுறுத்தலையும் போற்றுதலையும் வாயுறைவாழ்த்து, செவியறிவுறூஉ, குடைமங்கலம், வாள் மங்கலம், மண்ணு மங்கலம், ஓம்படை ஆகிய துறைகள் காட்டுகின்றன.

    3.6.1 வாயுறை வாழ்த்து

    உறுதிப்பொருள்களைக் கூறி வாழ்த்துதல் என்பது பொருள். சான்றோர், அரசனுக்கு இவற்றைக் கூறி நெறிப்படுத்துவர்.

    பின்பயக்கும் எம்சொல்என
    முற்படர்ந்த மொழிமிகுந்தன்று                (கொளு.32)

    ‘பின்னர்ப் பயன்படும் என் பேச்சு எனச் சொல்லிய சான்றோர்களின் சொல்லைச் சிறப்பித்தல்’ என்பது பொருள். இவை அரசனுக்கு நன்மை தரக் கூடிய சொற்கள்.

    வெண்பா, அவ்வறிவுரையின் பெருமையைக் கூறுகிறது. ‘அரசன் எம் சொல்லைக் கேட்டு அதன் வழி நடப்பானாயின் கடல் சூழ்ந்த இந்த நிலவுலகத்தை அடையப் பெறுவான்’ என்று சான்றோர் கூறுவதாக வெண்பா காட்டுகிறது. ‘வாயுறை வாழ்த்து’ என்பது சிற்றிலக்கிய வகையாகவும் இருக்கிறது.

    3.6.2 செவியறிவுறூஉ

    செவியில் அறிவுறுத்துவது என்பது பொருள். அரசனுக்கு அரிய பெரிய கருத்துகளைக் கூறுதல் இத்துறை.

    மறம்திரி(வு) இல்லா மன்பெரும் சூழ்ச்சி
    அறம் தெரி கோலாற்(கு) அறிய உரைத்தன்று         (கொளு.33)

    ‘அறத்தினை அறிந்த செங்கோல் மன்னவனுக்கு வீரத்திற்கு வழுவில்லாத பெரும் கருத்தினை உணரும்படி கூறுதல்’ என்பது பொருள். வெண்பா, வேந்தனுக்குக் கூறப்படும் அறிவுரை ஒன்றைக் காட்டுகிறது.

    ‘வேந்தே! சான்றோர், மூத்தோர், பெற்றோர் போன்றோரிடம் அடக்கத்துடன் ஒழுகுதலே மிக்க நலம் பயக்கும்’ என்பது வெண்பா காட்டும் அறிவுரை. புறநானூற்றில் இத்துறையில் அமைந்த பாடல்கள் உள்ளன.

    3.6.3 குடை மங்கலம்

    குடையைப் புகழ்தல் என்பது பொருள். அரசனுடைய வெண்கொற்றக் குடையைப் புகழ்வது ஒரு பழம் மரபு. அரசாட்சியின் குறியீடாகக் குடை திகழ்கிறது. கொளு,

    நால்திசையும் புகழ்பெருக
    வீற்றிருந்தான் குடைபுகழ்ந்தன்று              (கொளு.34)

    ‘நான்கு திசைகளிலும் தன் புகழ் பெருகும்படி அரசுவீற்றிருந்த மன்னனின் குடையைப் புகழ்தல்’ என்பது பொருள்.

    சார்ந்தோர்க்கு நிழல் தருவதாகவும் சாராதோர்க்கு அழல் தருவதாகவும் குடை அமைகிறது என வெண்பா காட்டுகிறது.

    ‘தன்னிழலோர் எல்லோர்க்கும் தண்கதிராம் தற்சேரா
    வெந்நிழலோர் எல்லோர்க்கும் வெங்கதிராம்....... ......’’

    ‘தன்னைச் சேர்ந்தார்க்குக் குளிர்ந்த நிழல் தந்து, தன் பகைவர்களுக்குக் கதிரவன்போல் வெப்பம் தரும்’ என்று குடையை வெண்பா சிறப்பிக்கிறது.

    3.6.4 வாள் மங்கலம்

    வாளைப் புகழ்தல் என்பது பொருள். அரசனுடைய வெற்றி விளைவிக்கும் வாளை வாழ்த்துவது அவன் வீரத்தை வாழ்த்துவதாகும். இதனை,

    கயக்கருங் கடல்தானை
    வயக்களிற்றான் வாள்புகழ்ந்தன்று            (கொளு.35)

    எனக் கொளு விளக்குகிறது. ‘கலக்குவதற்கு இயலாத பெரிய கடல் போன்ற படையினையும் வலிமை மிக்க களிற்றையும் உடைய அரசனது வாளைப் புகழ்தல்’ என்பது பொருள்.

    வெற்றி மன்னனுடைய வாளின் சிறப்பை வெண்பா சிறப்பிக்கிறது. ‘அரண்மனையுள் மகளிர் அரசனது செங்கோலின் சிறப்பைப்பாட, வெற்றியைப் பெறும் பொருட்டு அவன் கைவாள் சினத்தை வெளிப்படுத்தும்’ எனக் காட்டுகிறது, வெண்பா.

    3.6.5 மண்ணு மங்கலம்

    நீராடுதலைப் புகழ்தல் என்பது பொருள். அரசன் புண்ணிய நீரில் நீராடும் சிறப்பைக் கூறுதல். மண்ணுதல் என்றால் நீராடல் என்று பொருள். ஆண்டுதோறும் முடி புனைந்த நாளன்று புண்ணிய நீராடலை மேற்கொள்வது மரபு. இதனைக் கொளு,

    எண்ணரும் சீர்த்தி இறைவன் எய்தி
    மண்ணும் மங்கல மலிவுஉரைத் தன்று           (கொளு.36)

    எனக் குறிப்பிடுகின்றது.

    ‘எண்ணுதற்கரிய பெரும் புகழைக் கொண்ட அரசன் திருமுழுக்குக் கொள்ளும் சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள்.

    அரசன் கங்கை நீரில் நீராடிய சிறப்பை வெண்பா காட்டுகிறது. ‘பெண்கள் வாழ்த்த, அரசன் கங்கைப் பெண்ணின் நீராகிய மார்பைத் தழுவினான்’ என்று நீராடிய சிறப்பு காட்டப்படுகிறது. மண்ணுமங்கலம் உழிஞைத் திணையிலும் துறையாக உள்ளது.

    3.6.6 ஓம்படை

    ஓம்படை எனில் பாதுகாப்பு என்பது பொருள். அரசனுக்குச் சேமம் தருவனவற்றைக் கூறுதல் இத்துறையாகும்.

    இன்னது செய்தல் இயல்பென இறைவன்
    முன்னின்(று) அறிவன் மொழிதொடர்ந் தன்று           (கொளு.37)

    ‘சான்றோர் அரசன் முன்னே நின்று இன்ன செயலைச் செய்தல் அரசர்க்கு இயல்பாகும் என்று மெய்ம்மொழியினைச் சொல்லுதல்’ என்பது பொருள்.

    வெண்பா இதனைச் சிறப்பாக விளக்குகிறது.

    ஒன்றில் இரண்(டு) ஆய்ந்து மூன்(று)அடக்கி நான்கினால்
    வென்று களம்கொண்ட வேல்வேந்தே - சென்று(உ)லாம்
    ஆழ்கடல் சூழ் வையகத்துள் ஐந்துவென்று ஆறுஅகற்றி
    ஏழ் கடிந்து இன்புற்(று) இரு

    “மெய்யறிவு ஒன்றினால் நன்மை தீமை இரண்டையும் ஆய்ந்து, பகை நட்பு நொதுமல் என்ற முப்பகுதியையும் கண்டு, தன் நால்வகைப் படையாலே வென்று போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட வேல் வேந்தனை, இவ்வுலகில் ஐம்பொறிகளையும் அறிவால் வென்று படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு உறுப்புகளையும் பெருக்கி, வேட்டம் (பேராசை), கடுஞ்சொல், மிகுதண்டம் (அளவுக்கு மீறிய தண்டனை), சூது, பொருளீட்டம் (பொருள் சேர்த்தல்), கள், காமம் என்ற ஏழு குற்றங்களையும் நீக்கி, இன்புற்றிருப்பாயாக!’’ என்று கூறுவதை ஓம்படை என வெண்பா காட்டுகிறது.

    3.6.7 புறநிலை வாழ்த்து

    தெய்வம் காக்கட்டுமென வாழ்த்துதல் என்பது பொருள். அரசனுக்கு நலம் செய்யக் கடவுள் துணையிருப்பார் என்று வாழ்த்துதல். கொளு,

    வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப
    வழிவழி சிறக்கென வாய்மொழிந் தன்று         (கொளு.38)

    நீ வழிபடுகின்ற கடவுள் உனக்குப் பாதுகாவலாக இருக்க, நீ வழிவழி சிறந்து வாழ்க என வாழ்த்துதல் என்பது பொருள்.

    வெண்பா இதனை விளக்குகிறது. ‘சூலத்தையும் கொன்றை மாலையையும் கொண்ட இறைவன் பாதுகாக்க, நீ நாவலந்தீவில் நிலைத்து நிற்கும் மாமேரு என்னும் மலை போல நெடுங்காலம் இவ்வுலகில் நிலைத்து வாழ்வாயாக என்று வாழ்த்துவதை வெண்பா காட்டுகிறது.

    3.6.8 கொடி நிலை

    கொடியைச் சிறப்பித்தல் என்பது பொருள். அரசனுடைய கொடி அவனது கொற்றத்தின், பரம்பரையின் அடையாளம் என்பதால் அதனை வாழ்த்துதல் மரபு.

    மூவர்கொடி உள்ளும் ஒன்றொடு பொரீஇ
    மேவரு மன்னவன் கொடிபுகழ்ந் தன்று            (கொளு.39)

    ‘திருமால் சிவன் பிரமன் என்னும் முதற்கடவுளர் மூவருடைய கொடிகளுள் ஒன்றை உவமைகாட்டி மன்னனுடைய கொடியைப் புகழ்தல்’ என்பது பொருள்.

    மன்னன் ஒருவனது கொடியைத் திருமாலின் கருடக் கொடியுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது வெண்பா. ‘மன்னன் கொடி பல்யானை மன்னர்கள் பணிந்து வணங்க, அழகிய கண்களையும் நெடிய திருமுடியினையும் காயாம் பூவை ஒத்த மேனியையும் உடையவனின் கருடக் கொடிக்கு ஒப்ப ஓங்குக’ என வெண்பா காட்டுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:16:31(இந்திய நேரம்)