தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    யாப்பியல் மாணவர்களே !

    பல நூற்றாண்டுகளாகச் செழித்து வளர்ந்து வந்துள்ள தமிழ் யாப்பியலில் முதன்மையான இருபெரும் பகுதிகளாக உள்ள உறுப்பியலையும் செய்யுளியலையும் யாப்பருங்கலக் காரிகை இலக்கணத்தின் வழியே தெளிவாகக் கற்றிருக்கிறீர்கள். எனினும் நீங்கள் பெற்றுள்ள யாப்பறிவு முழுமையானது எனக்கூற முடியாது. முதலிரண்டு இயல்களைக் கற்கும்போது உங்களில் சிலர் அல்லது பலர் சில ஐயங்களை எழுப்பிக் கொண்டு, அவ்வவ்விடங்களில் விடை காண முடியாமல் தவித்திருக்கக் கூடும். எடுத்துக்காட்டாக, சீரின் முதலில் தனிக்குறில் நேரசை ஆகுமா, அளபெடை வரும்போது அலகிடுவது எப்படி, எதுகை மோனைக்குச் சொல்லப்பட்ட இலக்கணங்களிலிருந்து வேறுபட்டு அவை பல செய்யுட்களில் அமைந்திருப்பதேன் என்பன போன்ற ஐயங்கள் எழுந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் விடை தந்து உங்கள் யாப்பறிவை முழுமையாக்கும் இயல்தான் காரிகையின் இறுதி இயலாகிய ஒழிபியல். இந்தப் பாடத்திலும் (ஒழிபியல் - 1) அடுத்து வரும் பாடத்திலும் (ஒழிபியல்-2) ஒழிபியலின் கருத்துகளை விரிவாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

    மாணவர்களே !

    முதலிரண்டு இயல்களைப் படிக்கும் போதே (நூற்பாக்களில் சொல்லப்படா விடினும் உரையில் சுட்டிக் காட்டப்பட்ட) சில செய்திகள் உங்களுக்குப் பாடத்தில் வழங்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, பாக்களின் பொது இலக்கணம் கூறும்போது பாக்களில் அவற்றுக்குரியவை அல்லாத பிற தளைகளும் மயங்கிவரும் எனக் கூறப்பட்டுள்ளதை, மறுபடி ஒருமுறை திருப்பிப் பாருங்கள். இந்த இலக்கணம் ஒழிபியல் நூற்பாவில்தான் உள்ளது. இங்குத்தான் நூற்பா வழியில் அந்த இலக்கணங்களைக் கற்க இருக்கிறோம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 15:27:31(இந்திய நேரம்)