தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒழிபியல் விளக்கம்

  • 5.1 ஒழிபியல் விளக்கம்

    ஒழிபு என்பது ஒழிந்தது, நீங்கியது, விடுபட்டது எனப் பொருள் தரும். உறுப்பியலிலும் செய்யுளியலிலும் சொல்லாது விடுபட்டவற்றை மொத்தமாகத் தொகுத்துத் தருவதுதான் ஒழிபியல். ஒழிபியலில் மூன்று வகையான இலக்கணக் கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.

    (1) முதலிரண்டு இயல்களில் சொல்லப்படாமல் விடுபட்டவை.

    (2) முன்பு சொல்லப்பட்டவற்றிற்குப் புறனடையாக, வேறுபட்டு வரும் கருத்துகள்.

    (3) இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கருத்துகள்

    பொதுவாக இலக்கணங்கள் ‘இது சரி, இது தவறு’ என எடுத்துக் காட்டும் விதிமுறைகளே. எனினும் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் சில விதிமுறைகள் மீறப்படுவதுண்டு. பின்னர் வரும் இலக்கண நூல்கள் இந்த விதிமுறை மீறல்கள் மொழியின் அடிப்படைக்கு எதிரானவை அல்ல என்றால் அவற்றை ஏற்றுக் கொண்டு புதிய விதிகளை வகுப்பதுண்டு. நீங்கள் நன்னூல் படித்திருப்பீர்கள். ‘இதோ வருவேன்’ என எதிர்காலத்தில் சொல்ல வேண்டியதை ஒருவன் விரைவு கருதி ‘இதோ வந்துவிட்டேன்’ என இறந்த காலத்தில் சொல்வதுண்டு. இதில் காலம் வழுவானது எனினும் இலக்கண ஆசிரியர் இதனை ‘வழுவமைதி’ என ஏற்கிறார். (நன்னூல் -384) எழுத்துகளுக்கு மாத்திரை அளவுகள் கூறிய பின் ‘இசை, விளி, பண்ட மாற்று’ ஆகியவற்றில் இந்த மாத்திரை அளவுகள் நீண்டு வருவதும் உண்டு என்கிறார். (நன்னூல், 101)

    ஏற்கப்படும் விதி மீறல்களைப் ‘புறனடை’ என்பர். விதிகளைத் தொடர்ந்து ஆங்காங்கே புறனடைகளைச்சொல்லிச் செல்வதும் உண்டு.ஒவ்வோர் இயலின் இறுதியிலும் பொதுவான புறனடைகள் சொல்வதும் உண்டு. ‘இதற்கு இதுதான் முடிவான இலக்கணம் என்று வரையறுத்து எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது ; சொல்லப்பட்ட இலக்கணங்களைக் கொண்டு, சொல்லப்படாதவற்றை வகுத்துக் கொள்ளுக’ என நன்னூலார் எழுத்ததிகார இறுதியில் புறனடை (நன்னூல், 257) சொல்கிறார். புறனடைகள் மட்டும் அல்லாமல் புதிதாகச் சொல்லப்பட வேண்டிய கருத்துகளையும் சேர்த்துப் பொதுவியல், எச்சவியல், ஒழிபியல் எனபது போல இறுதியில் ஒரு முழு இயலாகச் சொல்வது இலக்கண ஆசிரியர்களின் வழக்கம்.

    காரிகையின் ஒழிபியலில் மேலே சொன்னவாறு மூன்று வகைகளில் புறனடைகள், புதிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. இனி அவற்றை விரிவாகக் காண்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 15:34:54(இந்திய நேரம்)