தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மாற்றங்கள் ஏற்பட்ட காலங்கள்

  • 1.4 மாற்றங்கள் ஏற்பட்ட காலங்கள்

        தமிழ் மொழி நீண்ட கால எழுத்து வரலாற்றினைக் கொண்டுள்ளதால் எழுத்தின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. அம்மாற்றங்கள்     எந்தெந்த     நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ளன என்பதை நமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பார்க்கலாம்.

    1.4.1 குகைக் கல்வெட்டுக் காலம்

        இன்று வரை தமிழ் மொழிக்குக் கிடைக்கும் மிகத் தொன்மையான எழுத்துச் சான்றுகள், குகைக் கல்வெட்டுகள் ஆகும். அக்கல்வெட்டுகள் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட பிராமித் தமிழ்க் கல்வெட்டுகள் ஆகும். அக்கல்வெட்டுகளில் 11 உயிர் எழுத்துகளும் (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ- இவற்றுக்குரிய பழைய வடிவம்) இருபது மெய் எழுத்துகளும் (18 மெய்யும், ஒரு உயிர்ப்பொலி (aspiration) ‘dh’, ஒரு உரசொலி (fricative) ‘S’ ஆகிய இவற்றிற்கான வடிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று 1970-இல் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார்.

    1.4.2 தொல்காப்பியக் காலம்

        தொல்காப்பியம் தமிழில் உள்ள இலக்கண இலக்கியங் களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நூலில் 12 உயிர் எழுத்துகளும், 18 மெய் எழுத்துகளும் நேரடியாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.

    சான்று :

    உயிர் எழுத்துகள் (Vowels)

        அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்பன.

    மெய் எழுத்துகள் (consonants)

        க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பனவாகும். ஆய்தம் என்ற எழுத்தைச் சார்பு எழுத்துகளில் ஒன்றாகச் சுட்டுகிறது தொல்காப்பியம்.

    சான்று :

        அவைதாம்
        குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
        முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன
                     (தொல்.எழுத்து, 2)
    b>

    1.4.3 கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8ஆம்     நூற்றாண்டு வரை

        இந்த மூன்று நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்த தமிழ்மொழியில் காணப்பட்ட எழுத்துகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியவில்லை என்று பேராசிரியர் பன்னீர்ச் செல்வம் சுட்டிக் காட்டியுள்ளார். அதே சமயத்தில் அக்காலத்தில் எத்தனை கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தினார்கள் என்பதும் நமக்குத் தெரியவில்லை.

    1.4.4 கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.14ஆம்     நூற்றாண்டு வரை

        பெரும்பாலும் இந்நூற்றாண்டுகளில் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18, ஆய்தம் 1 (ஃ) சேர்ந்து 31 எழுத்துகளையே கி.பி.14ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இதுபற்றிப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கி.பி.11ஆம் நூற்றாண்டு வரையே ஆய்தம் கையாளப்பட்டதாகத் தெரிகிறது. கி.பி.1070ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில்தான் இறுதியாகக் காணப்பட்டதாக தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் கூறுகின்றார். அதோடு மட்டுமல்லாமல் கி.பி.1250 - கி.பி.1350 வரையிலான காலகட்டங்களிலுள்ள கல்வெட்டுகளின்படி உயிர் எழுத்து பத்தும், ஈருயிர் இரண்டும், மெய் எழுத்துப் பதினெட்டும் ஆக முப்பது எழுத்துகள் இருந்தன என்று 1970-இல் ச.அகத்தியலிங்கம் கூறுகிறார். இதனைப் பின்வரும் அட்டவணை காட்டும்.

    உயிர் எழுத்து அட்டவணை (Vowel chart)

    குறில் (short)
    நெடில் (long)
    மேல் முன் உயிர்
    இடை முன் உயிர்
    மேல் பின் உயிர்
    இடை பின் உயிர்
    கடை பின் உயிர்

    ஈருயிர் (diphthong)

    இதழ் குவியா உயிர்
    இதழ் குவிந்த உயிர்
    ஒள

    மெய் எழுத்து அட்டவணை (consonant chart)

    1.4.5 கி.பி. 15ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 17ஆம்     நூற்றாண்டு வரை

        கி.பி. 15ஆம் நூற்றாண்டில் எழுந்த திருப்புகழ் அருணகிரிநாதரால் இயற்றப்பட்டது. அந்நூலில் அவர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 31 எழுத்துகளோடு (உயிர் - 12, மெய் - 18, ஆய்தம்-1) ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற கல்வெட்டு எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளார். கல்வெட்டு எழுத்துகளின் ஒலியன்கள் கி.பி.15ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே வழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அவற்றின் வளர்ச்சி திருப்புகழ் வழியாக நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

    கல்வெட்டு எழுத்துகள்

    ஸ்
    -
    அண்ண
    -
    குழி உரசொலி (/s/ palatal sibilant)
    ஷ்
    -
    வளைநா
    -
    குழி உரசொலி (//retroflex sibilant)
    ஜ்
    -
    அண்ண
    -
    அடைப்பொலி (/j/ palatal stop)
    ஹ்
    -
    பின் அண்ண
    -
    உடன்படுத்தொலி (/h/velar glide)

    க்ஷ்வும் ஸ்ரீயும் இரண்டு ஒலிகளின் கூட்டொலியாகும்.

    சான்று :

    திருப்புகழ்

    ஷ் குமர முஷிக முந்திய வைங்கர (திருசெந்தில் : 13)

    ஜ் உபயகுல தீபதுங்க விருது கவிராஜசிங்க
                (திருப்பழநி மாலை : 19)

    ஹ் ஜெய ஜெய ஹர ஹர     (திருச்செந்தூர் : 427)

    க்ஷ் தெளிய மோக்ஷத்தை     (குமரக்கோட்டம் : 52)

    ஸ்ரீ பங்கய ஸ்ரீ பாத நூபுரி     (திருச்செந்தூர் : 131)

        பின்பு கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவ சுவாமிகளும் இலக்கண எழுத்துகளோடு கல்வெட்டு எழுத்துகளையும் பயன்படுத்தியுள்ளார். இங்கு ஸ் என்ற கல்வெட்டு எழுத்தும் பயன்பாட்டுக்கு வந்தது தெரிய வந்துள்ளது.

    சான்று :

    தாயுமான சுவாமிகள் பனுவல் திரட்டு

        ஸ் - சண்மத ஸ்தாபனமும்         (5-6)

    1.4.6 கி.பி.18ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 20ஆம்     நூற்றாண்டு வரை

        கி.பி. 18ஆம் நூற்றாண்டிலும் 31 இலக்கண எழுத்துகளுடன் கல்வெட்டு எழுத்துகளையும் பயன்படுத்தி வந்தனர். கி.பி.19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க சுவாமிகளும் பயன்படுத்தி யுள்ளார். இது போன்று சுந்தரம் பிள்ளை அவர்களும், கி.பி.20ஆம் நூற்றாண்டில் பாரதியார் அவர்களும், திரு.வி.க. போன்றோரும் பயன்படுத்தியுள்ளனர்.

        இவ்வெழுத்துகளின் எண்ணிக்கை காலந்தோறும் வேறுபட்டு வந்ததைப் பற்றி அறிய மொழியின் பல்வேறு சான்றுகளை ஒப்பு நோக்க வேண்டும்.

    அவையாவன :

    1.
    எழுத்துக்கும் மொழிக்கும் உள்ள உறவு
    2.
    எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள உறவு
    3.
    தமிழின் ஒலி வளம்
    4.
    எழுத்தின் எண்ணிக்கையும் - பயன்படுத்துவோரும்

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    தொல்காப்பியக் காலத்தில் ஆய்தம் ஒரு தனி எழுத்தா?
    2.
    கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை எத்தனை எழுத்துகளைப் பயன்படுத்தி வந்தனர்?
    3.
    இதழ் குவியா உயிர் எழுத்து எது?
    4.
    அரை உயிர் எழுத்துகள் யாவை?
    5.
    எந்த நூற்றாண்டில் கல்வெட்டு எழுத்துப் பயன்படத் தொடங்கியது?
புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2017 10:39:57(இந்திய நேரம்)