Primary tabs
-
1.6 எழுத்தின் எண்ணிக்கையும் பயன்படுத்துவோரும்
எழுத்தின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அதனை யார் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்று அவர்களை இனங்கண்டு விளக்க முடியும். அவ்வாறாகக் காண்பதில் அவர்களை ஆறு வகைகளாகப் பிரித்து அவர்கள் எவ்வெழுத்துகளை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று விளக்கப்படுகிறது.
1.6.1 செம்மையாக்கவாதிகள் அல்லது இலக்கியவாதிகள்
இவர்கள் இலக்கண எழுத்துகளை (உயிர்-12, மெய்-18, ஆய்தம்-1 ஆகிய 31 எழுத்துகளை) மட்டும் பயன்படுத்துவதோடு எல்லாரும் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துவோராவர். இவர்கள் இலக்கண மரபைப் புறக்கணிக்காதவர்கள் ஆவர். “பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ் விருந்து என்ற நூலில் வடசொற்களைத் தமிழின் நிலைமைக்கு ஏற்பக் குழைத்து வழங்குபவர் கம்பர். ‘ஹிர்தய’ என்ற வடசொல்லை ‘இதயம்’ என்று இனிமையாகக் குழைத்தார்” என்று கணபதி பிள்ளை போன்றோர் சுட்டியுள்ளனர். இதற்கெல்லாம் வழிகாட்டியாக,
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
(தொல். சொல். 401)என்ற நூற்பா அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால் செம்மையாக்க வாதிகள் என்ற பெயருக்கு ஏற்ப, இவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள காலத்தைப் புறக்கணித்துப் பழைய காலமே தூய்மையையும், தனித்தன்மையையும் பாதுகாத்தது என்று பாராட்டி, அதையே இன்றைய தமிழுக்குரிய முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள விழைகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால்தான் எழுத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது எனலாம்.
பகுத்தறிவுவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் ஈ.வெ.ராமசாமி (பெரியார்) கொள்கையைப் பற்றி நடப்பவர்களாவர். இவர்கள் எழுத்துகளிலும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தகுந்த சில சீர்திருத்தங்களைச் செய்து இருக்கிறார்கள். இவர்கள் உயிர் எழுத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு ஏற்ப மொழியிலும் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டிய பெருமை பகுத்தறிவுவாதிகளுக்கே உரியது. பெரியார் முதலில் ஸ், ஷ், ஜ் போன்ற எழுத்துகளைப் பயன்படுத்தினார். பின்னர் அவற்றைக் கைவிட்டு இலக்கண எழுத்துகளைக் கையாண்டார்.
இக்காலத்தில், படைப்பிலக்கிய ஆசிரியர்களாகிய அகிலன், ஜெயகாந்தன் போன்ற நாவல், சிறுகதை எழுதுவோர் அனைவரும் எல்லா இலக்கண எழுத்துகளையும், கல்வெட்டு எழுத்தில் நான்கினை மட்டும் கையாண்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.
அவையாவன:
ஸ்-ஸ்பெஷல், டாக்ஸி, நாஸ்திகர்ஷ்-வருஷம், விஷமம், கஷ்டம், கிருஷ்ணாஹ்-ஹோட்டல், ஹால், அக்ரஹாரம்ஜ்-நிஜம், மேஜை, பூஜை, காமராஜ்அதே சமயத்தில் ஷ், ஸ்ரீ போன்ற எழுத்துகள் அருகியே காணப்படுகின்றன. இவ்விலக்கியவாதிகள் இன்றைய பேச்சு மொழியில் வழங்கும் எல்லோருக்கும் பழக்கப்பட்ட சொற்களாகிய ‘நிமிடம், டாக்சி’ போன்றவைகளைக் கல்வெட்டு எழுத்துகளில் (நிமிஷம், டாக்ஸி) எழுதாமல் இலக்கண எழுத்துகளைக் கொண்டும் எழுதி வருகிறார்கள். மேலே சுட்டப்பட்டதுபோல் தமிழ் ஆசிரியராகவும், படைப்பிலக்கியவாதியாகவும் இருந்த மு.வரதராசனார் எழுத்துகளைக் கையாண்ட முறை அறிந்து கொள்ளத் தக்கது. அவர் பல துறைகளில் நூல்களை எழுதியுள்ளார். அவற்றை எழுதும்போது கல்வெட்டு எழுத்துகளைக் கையாண்டுள்ளார். அதே சமயம் போலீசுக்காரர், அலவன்சு, பிரான்சு, பூட்சு, ஆசுபத்திரி என்று இலக்கண எழுத்துகளைக் கொண்டும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகளில் பெரும்பாலோரின் எழுத்துகளில் (நூல்கள்) ஸ், ஷ், ஹ், ஜ் போன்ற கல்வெட்டு எழுத்துகளைக் காணலாம். இன்றைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி (1973) எழுதிய இனியவை இருபது என்ற அவரின் பயண நூலில் அவ்வெழுத்துகளைத் தவிர்த்து, மாறாக இலக்கண எழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கன:
செர்மன், துனிசியா, புரூட்டசா, கிளோடி, மார்க்கசு அரிலீயசு, ஆல்ப்சு போன்ற சொற்களாகும்.
ம.பொ. சிவஞானம் போன்றோர் கல்வெட்டு எழுத்துகளைப் பயன்படுத்தி நயத்தையும் பொருளையும் காப்பதே அறிவுடைமை ஆகும் என்று விளக்கியுள்ளனர்.
மொழியியலார் எல்லோரும் கல்வெட்டு எழுத்துகள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
சட்டத்துறை நூல்களில் (1872ஆம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டம் - தமிழ் மொழிபெயர்ப்பு) கல்வெட்டு எழுத்துகள் வந்துள்ளன. எவ்வளவுதான் தமிழில் உள்ள இலக்கண எழுத்துகளைக் கொண்டு மொழிபெயர்த்தாலும் சட்டத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டு வாழும் மக்களின் மனத்தில் குழப்பம் உண்டாகும் என்ற நோக்கத்தோடு மொழிபெயர்ப்பில் கல்வெட்டு எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன.
இவற்றை எல்லாம் நோக்கும்போது படைப்பிலக்கியத் தமிழில் மட்டுமன்றி, பல்வேறு பிற துறைகளிலும் உள்ள பெரும்பாலோர் கல்வெட்டு எழுத்துகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது.
சமயத்தமிழ் என்று ஒரு பிரிவுகூட மொழி அமைப்பைப் பொறுத்து அமைக்க வேண்டியிருக்கும். சமயத் தமிழில் கல்வெட்டு எழுத்துகள் ஆறையும் (ஸ், ஷ், ஜ், ஹ், க்ஷ், ஸ்ரீ) அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மேலும் ஸ்ரீ என்ற எழுத்துச் சமயத் தமிழில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. அது மரியாதை அடையாகப் புண்ணியத் தலங்களுக்கும், சமயப் பெரியவர்களுக்கும், கடவுள் பெயர்களுக்கும் அதிகமாகப் பயன்பட்டு வருகின்றது.
சான்று:
ஸ்ரீ ராமேஸ்வரம்
ஸ்ரீ ஆதிசங்கரர்
ஸ்ரீல ஸ்ரீ சுவாமிகள்இப்பிரிவினர் தடித்த எழுத்தின் மூலம் வேறுபாட்டினைக் காட்ட முற்படுகின்றனர். வல்லெழுத்துகளில் தடித்த எழுத்துகளை எழுதுவதின் மூலம் ஒலிப்புடை வல்லொலியை (Voice of stop) ஒலி மதிப்புடையதாக உபயோகப்படுத்துகிறார்கள். இதில் ப என்ற எழுத்தைப் பாவம் என்ற சொல்லில் மட்டும் பெரும்பான்மையாகப் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. அதே முறையில் பிற வல்லெழுத்துகளையும் க என்பதை /g/ என்ற ஒலியைக் குறிக்கவும் த என்பதை /d/ என்ற ஒலியைக் குறிக்கவும் கையாண்டு வருகின்றனர். இவ்வாறு புதுமைகளைக் கையாளுவதால் இப்பிரிவினரைப் புதுமைவாதிகள் எனலாம்.
இது போன்று ரோமன் எழுத்து வடிவத்தையும் (Roman transcription) பயன்படுத்தலாம் என்று கஸ்தூரிரங்கன் போன்றோர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
துக்ளக் என்ற அரசியல் வார இதழ் f என்ற எழுத்தைப் பயன்படுத்தி வந்தது.
சான்று:
fபைட் - (fight)
இன்னும் சிலர் சில குறியீடுகளைக் கையாண்டு புதிய ஒலிகளைக் குறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாணிக்கவேல் நாயக்கர் எழுத்து எண்ணிக்கையைக் கூட்டாமல் ஆய்தத்தையும் வல்லெழுத்தையும் சேர்த்து உரசொலியைக் குறிக்க வழிவகுத்தார் என்று கூறுவார்கள் (சான்று கிடைக்கவில்லை), மற்றும் இன்றைய அளவில் ஸ், ஷ், ஜ், ஹ், க்ஷ், ஸ்ரீ போன்ற எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அதே சமயம் ‘g, d, b, f’ போன்ற எழுத்துகளின் ஒலிகளைக் குறிக்கச் சிற்ப எழுத்துகளும் தேவைப்படுகின்றன. f என்பதைக் குறிக்க ஆய்தத்தையும் பகரத்தையும் இணைத்து எழுதுகின்ற வழக்கமும் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக,
ஃபன் (fun)
ஃபிளாட் (flat)
ஃபான் (fan)
ஃபார்ம் (farm)
ஃப்ளைட் (flight) முதலியன.உலக மொழிகளில் உள்ள பல்வேறு ஒலிகளையும் குறிக்கத் தக்க வகையில் தமிழ் எழுத்துகளையே அடிப்படையாகக் கொண்டு மேலும் சில எழுத்துகளை உருவாக்கிக் கொள்வது தமிழ் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் உதவியாகவே இருக்கும் என்பர்.
கி.பி. 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே 1915-இல் பாரதியார் புதிய எழுத்துகள் வேண்டும் என்கிறார். அவர் அவ்வாறு சொல்லியதற்குக் காரணம் வெளிநாட்டு ஊர்களின் பெயர்களையும், மனிதர்களின் பெயர்களையும் ‘சரியானபடி சொல்வதற்குத் தான்’ என்பது.
“தொல்காப்பியர் கட்டின அரிச்சுவடி போதா வண்ணமாக நமது பாஷை வளர்ச்சி பெற்றவுடனே நமது முன்னோர்கள் மேற்காட்டிய எழுத்துகளைச் (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ) சேர்த்தார்கள். நாமும் அப்படியே நமக்கு இக்காலத்தில் ஏற்படும் உச்சரிப்புக் கஷ்டங்களை நிவிருத்தி செய்து கொள்வதற்குக் கிரந்த எழுத்துகளைச் சேர்க்கலாமென்று சில பெரியோர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதைக் காட்டிலும் அடையாளங்கள் போடுவது சுலபமான வழி. இப்பொழுதுள்ள அரிச்சுவடியிலே பழகிய தமிழருக்கு மேற்படி அடையாளங்களால் எவ்வித சங்கடமும் நேரிடாது. தப்பாகவோ, சரியாகவோ வழக்கம்போல் வாசித்துக் கொண்டு போவதை அடையாளங்கள் தடுக்கமாட்டா. கிரந்த எழுத்துகளைக் கொண்டு சேர்த்தால் பாதி படிக்கும் போதே நிறுத்திவிட நேரிடும்.”
- (பாரதியார் -1915)
அதுபோல மு.வரதராசனாரும் தமிழ் மக்கள் பேசும் பேச்சைத் தமிழிலே எழுதிக் காட்டுவதற்குத் தமிழ் எழுத்துகள் போதவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்து 1974-இல் நடராஜன் என்பவர் தமிழில் 15 வல்லொலிகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிவிட்டு அவற்றைக் குறிக்க 15 குறியீடுகள் உண்டாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவர்களைப் புதுமைவாதிகளில் இலட்சியவாதிகள் எனலாம்.
அட்டவணை