Primary tabs
-
2.2 வேற்றுமையாவது யாது?
பெயர்ப்பொருளை வேற்றுமை செய்வன 'வேற்றுமை' எனப்படும்.
ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப்பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை (நன்னூல். 291)ஒரு சொற்றொடரில் உள்ள பெயர்ச்சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையே உள்ள இலக்கண உறவுகளை வேறுபடுத்திக் காட்டுவதும் வேற்றுமையாகும்.
'இராமன் அழைத்தான்'
'இராமனை அழைத்தான்'
'இராமனுடன் சென்றேன்'
'இராமனுக்குக் கொடுத்தேன்'
'இராமன் வீட்டில் இருந்தான்'இவ்வாறு காணப்படும் சொற்றொடரில் பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையே ஒரு விதமான பொருள் தொடர்பு இருப்பதை நம்மால் உணர முடிகிறது. இத்தகைய பொருள் (கருவி, காரணம், இடம் போன்ற) தொடர்பை உணர்த்திச் சில சொற்கள் ஒட்டுகளாகப் (affixes) பெயர்ச்சொல்லோடு இணைந்து வருகின்றன. இந்தப் பொருள் தொடர்பைத் தமிழில் 'வேற்றுமை' (case) என்கிறோம். ஒட்டுகளை 'வேற்றுமை உருபு' (case marker) என்கிறோம்.
வேற்றுமையை ஆங்கிலத்தில் 'case' என்று குறிப்பிடுகின்றனர். இந்த 'case' என்ற ஆங்கிலச்சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து உருவானதாகும். அச்சொல்லும் இலத்தீன் மொழிச்சொல்லாகிய 'causes' என்ற சொல்லிலிருந்து உருவானது. இதுவும் கிரேக்க மொழிச்சொல்லாகிய ptosis என்பதிலிருந்து வந்தது. இச்சொல்லுக்கு 'வீழ்ச்சி' (fall) அல்லது 'மாற்றம்' (change) என்ற பொருளுண்டு. இந்நிலையில் இதனை 'வேற்றுமை' என்று தமிழில் அழைப்பது பொருத்தமானது.
வேற்றுமையின் எண்ணிக்கையில் பல தரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதனை இங்குக் குறிப்பிடுவது பயன்தரும். வேற்றுமை என்ற உடனே நம் மனக்கண்முன் வருவன எட்டு வேற்றுமைகள். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு 'ஏழு வேற்றுமைகள்' இருந்தன. தொல்காப்பியர் 'விளி'யையும் சேர்த்து எட்டு வேற்றுமைகளாகக் கூறினார்.
வேற்றுமையைப் பற்றிக் குறிப்பிட வந்த தொல்காப்பியர்,
வேற்றுமை தாமே ஏழென மொழிப (தொல்.சொல். 62)
என்றும்
விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே
(தொல்.சொல். 63)என்றும் குறிப்பிட்டுள்ளார். இவற்றை ஒழுங்குபடுத்திக் கூற அவர்
அவை தாம்
பெயர் ஐ ஒடு கு
இன் அது கண் விளி என்னும் ஈற்ற
(தொல்.சொல். 64)என்றார். நாம் தமிழ்மொழியில் எட்டு வேற்றுமைகள் இருக்கின்றன எனக் கொண்டு அவை எவ்வாறு வளர்ச்சியுற்றன என்பதனை இங்குக் காணலாம்.
2.2.2 வேற்றுமையின் பெயர்கள்1)முதல் வேற்றுமை-எழுவாய் வேற்றுமை (Nominative/ subjective case)2)இரண்டாம் வேற்றுமை-செயப்படுபொருள் வேற்றுமை (Accusative case)3)மூன்றாம் வேற்றுமை-கருவி வேற்றுமை (Instrumental case)4)நான்காம் வேற்றுமை-கொடை வேற்றுமை (Dative case)5)ஐந்தாம் வேற்றுமை-நீங்கல் வேற்றுமை (Ablative case)6)ஆறாம் வேற்றுமை-உடைமை வேற்றுமை (Genetive case)7)ஏழாம் வேற்றுமை-இடவேற்றுமை (Locative case)8)எட்டாம் வேற்றுமை-விளிவேற்றுமை (Vocative case)மொழியில் அடிப்படையிலும் வரலாற்று நோக்கிலும் வேற்றுமை உருபுகளின் வளர்ச்சியைக் காண இருப்பதால் உருபன், உருபு, மாற்றுருபு, சூனிய உருபு போன்ற மொழியியலின் கூறுகளைப் பற்றிய விளக்கங்களையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.