தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - D04122-‘கள்’ எனும் பன்மை விகுதி

  • 2.7 'கள்' எனும் பன்மை விகுதி

        'கள்' என்பது பன்மை விகுதியாகும். இவ்விகுதி எவ்வாறு தமிழில் பயன்பாட்டுக்கு வந்தது. பின்பு அதன் வளர்ச்சி எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றி இங்கு விளக்கப்படுகிறது. முற்காலத்தில் இன்னும் பல விகுதிகள் பன்மையைச் சுட்டும் விகுதிகளாகப் பயன்பட்டு வந்தன. (அர், ஆர், ஓர், இர், ஈர், அர்கள், ஆர்கள், ஓர்கள்) இருப்பினும் இங்கு நாம் பார்க்க
    இருப்பது 'கள்' எனும் பன்மை விகுதியைப் பற்றி மட்டும்தான்.

  • சங்ககாலம்
  •     சங்ககாலத்தில் கள் என்னும் பன்மை விகுதி வழங்கியது. இதனைத் தொல்காப்பியர் அஃறிணைப் பன்மைக்கு மட்டும் உரியதாகக் குறிப்பிடுகிறார்.

        அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பதற்கு வழங்கும் இயற்பெயர்ச் சொற்களைப் பன்மையாக்குவதற்கு, அச்சொற்களின் பின் கள் என்னும் விகுதி சேர்த்துக் கொள்ளும் இடமும் உண்டு என்கிறார் தொல்காப்பியர்.

        'கள்ளொடு சிவணும் அவ்இயற் பெயரே
        கொள்வழி உடைய பலஅறி சொற்கே
                 (தொல்.சொல். 169)

    சான்று:

        ச மரம் + கள் = மரங்கள்
        யானை + கள் = யானைகள்

        இந்நூற்பாவில் தொல்காப்பியர், ‘கள் விகுதி சேர்த்துக் கொள்ளும் இடமும் உண்டு’ என்று கூறியிருப்பதை நோக்கும்போது, அவர் காலத்தில் கள் விகுதி சேர்க்காமலும் அஃறிணைப் பன்மை உணர்த்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது. இது பற்றியும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

        கள் விகுதியோடு வாராத அஃறிணை இயற்பெயர்கள், அவை கொண்டு முடியும் வினைகளை வைத்து ஒருமை, பன்மை தெரியப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

        தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
        ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே
                 (தொல்.சொல். 171)

    சான்று:

        ஆ வந்தது (ஒருமை)
        ஆ வந்தன (பன்மை)

        தொல்காப்பியத்தை அடுத்துத் தோன்றிய     சங்க இலக்கியங்களில், அஃறிணைப் பன்மை உணர்த்தும் முறையில் கள் விகுதி சேராமலும் சேர்ந்தும் வருகின்ற இருநிலைகளையும் காணலாம்.

        கள் விகுதி இல்லாமல் வரும் அஃறிணைச் சொற்கள், தமக்கு முன்னோ பின்னோ வரும் அஃறிணைப் பன்மை வினை முற்றுகளால் பன்மை என அறியப்படுகின்றன.

    சான்று:

        காலே பரிதப்பினவே     (குறுந்தொகை.44 : 1)
        கலுழ்ந்தன கண்ணே     (நற்றிணை.12 : 10)
        நெகிழ்ந்தன வளையே (நற்றிணை.26 : 1)

    இங்கே கால், கண், வளை (வளையல்) என்னும் அஃறிணைப் பெயர்ச்சொற்கள் முறையே பரிதப்பின (நடந்து நடந்து ஓய்ந்தன), கலுழ்ந்தன (அழுதன), நெகிழ்ந்தன (கழன்றன) என்னும் பன்மை வினைமுற்றுகள் கொண்டு முடிவதால் கால்கள், கண்கள், வளைகள் என்ற பன்மைப் பொருளை உணர்த்தல் காணலாம். இவ்வாறு பன்மை உணர்த்தும் முறையே சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.

        அஃறிணை ஒருமைப் பெயர்ச்சொற்களோடு கள் விகுதியைச் சேர்த்துப் பன்மையாக்கும் முறையும் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.

    சான்று:

        மயில்கள்     (ஐங்குறுநூறு.29
        கண்களும் கண்களோ (கலித்தொகை.39: 42)
        அரண்கள்     (பதிற்றுப்பத்து.44: 13)
        சொற்கள்     (கலித்தொகை.81: 13)
        தொழில்கள்     (கலித்தெகை.141: 4)

        சங்க காலத்தில் உயர்திணையில் பலரைக் குறிக்கும் பெயர்ச் சொற்களில் அர் என்னும் பன்மை விகுதி வழங்கியது. (எ-டு) அவர், காதலர், சான்றோர், அரசர். காலப்போக்கில் இச்சொற்கள் பலரைக் குறிக்க வழங்குவதோடு அல்லாமல், உயர்வு காரணமாக ஒருவரை மட்டும் குறிக்கவும் வழங்கலாயின. சங்க இலக்கியங்களில் இத்தகு வழக்குகளைக் காணலாம்.

    சான்று:

        யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே
                 (குறுந்தொகை.75 : 5)

        சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே
                 (குறுந்தொகை.102 : 4)

        கண்ணீர் அருவி ஆக
        அழுமே தோழி அவர் பழமுதிர் குன்றே
                 (நற்றிணை-88 : 8-9)

        இங்கே காதலர், சான்றோர், அவர் என்ற சொற்கள் பலரைக் குறிக்காமல் ஒருவரை (தலைவனை) மட்டும் குறிக்கும் உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்கின. இவ்வாறு அர் என்னும் உயர்திணைப் பன்மை விகுதி ஒருவரை மட்டும் உணர்த்தவே, பலரை உணர்த்த அர் + என்னும் அவ்விகுதி மட்டும்
    போதவில்லை. எனவே அர் என்பதோடு கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதியையும் சேர்த்து அர்கள் என்னும் இரட்டைப் பன்மை (Dual Plural) விகுதி உருவாக்கப்பட்டது. அர்கள் என்ற இரட்டைப் பன்மை விகுதி கொண்டு உயர்திணையை உணர்த்துதல் முதன்முதலில், சங்க காலத்தின் பிற்பகுதியில் தோன்றிய கலித்தொகையில் காணப்படுகிறது.

    சான்று:

        உலகு ஏத்தும் அரசர்கள் (கலித்தொகை.25 : 11)

  • இடைக்காலம்
  •     இடைக்காலத் தமிழில் கள் விகுதியின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. சங்க காலத்தில் இருநிலைகளில் பயன்படுத்தப் பட்ட கள் விகுதி, இடைக்காலத்தில் ஐந்துவகை நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

        1) அஃறிணைப் பன்மை உணர்த்தும் விகுதியாக வழங்குகிறது.

    சான்று:

        உயிர்கள்     (சிலப்பதிகாரம்.10 : 175)
        மீன்கள்     (மணிமேகலை.29 : 118)
        யானைகள்     (கம்பராமாயணம்.7318:3)

        2) உயர்திணைப் பன்மைக்கு உரிய அர் விகுதியுடன் சேர்ந்து, அர்கள் என்னும் இரட்டைப் பன்மை விகுதியாக அமைந்து உயர்திணைப் பன்மையை உணர்த்த வழங்குகிறது.

    சான்று:

        தேவர்கள்     (திவ்வியப் பிரபந்தம்.3775 : 2)
        அசுரர்கள்     (திவ்வியப் பிரபந்தம்.3779 : 3)
        தொண்டர்கள் (பெரியபுராணம்.1608 : 3)

        இவ்விரு நிலைகளும் சங்ககாலத்தில் வழங்கி வந்தவை இனிக் காணப்படும் மூன்று நிலைகளும் இடைக்காலத்தில் வழங்கி வந்தவை ஆகும்.

        3) உயர்திணைப் பன்மை உணர்த்தும் விகுதியாக வழங்குகிறது.

    சான்று:

        இரட்டையம் பெண்கள் இருவரும்
                (சிலப்பதிகாரம்.30 : 49)
        ஒன்பது
    செட்டிகள் உடல்என்பு இவைகாண்
                 (மணிமேகலை.25 : 165)
        நெடும்
    பூதங்கள் ஐந்தொடும் பெயரும்
                 (கம்பராமாயணம்.6328 : 4)

        4) கள் என்னும் பன்மை விகுதி, உயர்வு ஒருமைப் பெயர்களில் உயர்வு ஒருமை விகுதியாக வழங்குகிறது.

    சான்று:

        சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
                 (சிலப்பதிகாரம்.16: 18)

        இவ்வடியில் வரும் நோன்பிகள், அடிகள் ஆகிய சொற்கள் கோவலனைக் குறிக்கின்றன. இங்கே கள் விகுதி உயர்வு ஒருமை விகுதியாக வழங்குகிறது.

        5) மூவிடப்பெயர்கள், சுட்டுப்பெயர்கள் ஆகிய பதிலிடு பெயர்களில் உள்ள பன்மை வடிவங்களில் சில உயர்வு ஒருமைப் பெயர்களாகவும் வழங்கின. எனவே பன்மை உணர்த்தவேண்டி அவற்றோடு கள் விகுதி சேர்த்துக் கூறப்பட்டது.

        யாம் + கள் = யாங்கள்
        நாம் + கள் = நாங்கள்
        நீர் + கள் = நீர்கள்
        நீயிர் + கள் = நீயிர்கள்
        தாம் + கள் = தாங்கள்
        அவர் + கள் = அவர்கள்

        இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் இத்தகைய கள் ஈற்றுப் பதிலிடு பெயர்கள் மிகுதியாக வழங்குகின்றன.

    சான்று:

        நீ போ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்
             (சிலப்பதிகாரம்.11 : 161)

        நாங்கள் உன் உடம்பதனில் வெப்பை
                (பெரியபுராணம்.2660 : 3)

        அன்னையர்காள் ! என்னைத் தேற்ற வேண்டா
        
    நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு?
             (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.3474)

        நூல் அவையார் போல் நீங்கள் நோக்குமின் என்றாள்
                 (சீவகசிந்தாமணி.1046: 4)

        அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
        பிழைப்பில் பெரும்பெயரே பேசி
         (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.2230 : 1)

  • தற்காலம்
  •     தற்காலத்தில் 'கள்' விகுதி இலக்கியங்களில் பன்மையைச் சுட்டி வருகின்றது.

    சான்று:

        'நான்கு மாடுகள் வந்தன'

        பேச்சுத்தமிழில் இவ்விகுதியை அவ்வளவாகப் பயன் படுத்துவது இல்லை எனலாம்.

    சான்று:

        'நாலு மாடு வந்தது'
        'நாலு காலு'

        அவ்வாறு பயன்படுத்தினாலும் 'கள்' இல் உள்ள 'ள்' என்னும் உச்சரிப்பு (Lateral sound) அதற்கு முன்னுள்ள வெடிப்பொலியுடன் (stop sound) கூடி மூக்கொலியாக (nasalization) மாறுகிறது எனலாம்.

    சான்று:

        'அவுங்க' / avunka/

        இக் 'கள்' விகுதி கடந்த வருடங்களைச் சுட்டும்போது பயன் பாட்டுக்கு வருகிறது.

    சான்று:

        '1950களில்' அது போன்ற முக்காலங்களை (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்) ஒருங்கே இணைத்துக்கூறும் இடங்களில் கூட 'கள்' விகுதி வருகிறது.

    சான்று:

        'நான் ஞாயிற்றுக் கிழமைகளில்
        சர்ச்சுக்குப் போவேன்'

        இதே 'கள்' விகுதி தற்காலத்தில் மூன்று வடிவங்களில் பயன்பட்டு வருகின்றது.

    'க்கள்'

        பொதுவாக நெடில் வரும்போதும் அல்லது இருகுறில் வரும்போதும் இவ்வடிவம் பெறுகிறது.

    சான்று:

        'பூ - க்கள்'
         'பசு - க்கள்'

    'ங்கள்'

        மூக்கொலியில் (nasal sound) முடியும் (-ம்) எல்லாச் சொற்களுடனும் இவ்வடிவம் வருகிறது.

    சான்று:

        'மரம்+ கள்' = மரங்கள்

        மற்ற சொற்களுக்கு வெறும் 'கள்' என்ற வடிவம் வருகிறது எனலாம்.

    சான்று:

        'நாற்காலிகள்'
        'பலூன்கள்'

புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 14:44:53(இந்திய நேரம்)