Primary tabs
- 
2.5 வேற்றுமைகள் - II
இனி, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை என்னும் மூன்று வேற்றுமைகள் பற்றிக் காண்போம்.
ஐந்தாம் வேற்றுமை உருபு 'இன்' ஆகும்.
ஐந்தாகுவதே
இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்றிது வென்னு மதுவே (தொல்.சொல். 77)இவ்வேற்றுமையை 'நீங்கல் வேற்றுமை' என்பர். ஏனென்றால் நீங்கல் பொருளை, ஓர் இடத்திலிருந்து பெயர்வதை உணர்த்தலாயிற்று. அதற்கு முன் இவ்வேற்றுமை ஒப்புமைப்பொருளைக் குறிக்கும் எண்ணத்தோடு வழங்கலாயிற்று.
 - சங்ககாலம்
 - இடைக்காலம்
 - தற்காலம்
 - சங்ககாலம்
 - இடைக்காலம்
 - தற்காலம்
 - சங்ககாலம்
 - இடைக்காலம்
 - தற்காலம்
 
சான்று:
    செறி யெயிற் 
 றரிவை கூந்தலின் (குறுந்தொகை. 2:4)
 
'இன்' என்ற ஐந்தாம் வேற்றுமை உருபு 'இல்' ஆகப் பல இடங்களில் இடைக்காலத்தின் நூல்களில் வரலானது. அதே சமயம் இரண்டு வடிவங்களும் வழக்கிலிருந்து வந்தன. நேமிநாதத்திலும் 'இன்' ஐந்தாம் வேற்றுமை உருபாக இருந்தமை தெரியவருகிறது.
    	ஐந்தாவதன் 
 உருபு இல்லும் இன்னும்
     நீங்கல் ஒப்பு எல்லை ஏதுப் பொருளே
             
 (நன்னூல்.299)
காலம் மாற மாற 'இல்' , 'இன்' னின் இடத்தைப் பற்றிக்கொண்டது எனலாம். இவற்றோடு மட்டுமல்லாமல் இவ்வேற்றுமை இன்னும் ஒரு வேற்றுமை உருபினைத் தன்னகத்தே உள்ளடக்கிக் கொண்டது. அது 'நின்று' என்பதாகும்.
சான்று:
    	சாத்தனுழை 
 நின்றுந் தீமை அகன்றது
             
 (வீரசோழியம் உரை.35)
 
தற்காலத்தில் இவ்வேற்றுமை உருபாக 'இருந்து' என்பது இருக்கின்றது. இவ் 'இருந்து' உண்மையில் 'இரு' என்பதன் வினையெச்சம் (Verbal paritciple) ஆகும்.
    இவ்வேற்றுமையைப் 
        பற்றிப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. 'இருந்து' என்ற ஐந்தாம் வேற்றுமை 
        உருபு இட வேற்றுமைக்கான ஏழாம் வேற்றுமையுடன் சேர்ந்து வருவதும் உண்டு.     
        'அவனிடமிருந்து' இவ்வாறு வருகின்றபொழுது இவ்வேற்றுமையை ஏழாம் வேற்றுமையில் 
        அடக்கி விடலாம் என்று கால்டுவெல் கூறுகிறார். அவரைப்போலவே மு. வரதராசனார் 
        இவ்வேற்றுமை உருபு ஏழாம் வேற்றுமை உருபுடனும் மூன்றாம் வேற்றுமையுடனும் வருகிறது 
        என்கின்றார். ச. அகத்தியலிங்கமோ
        தொழில் நடக்கும்முன் (இவ்வேற்றுமை) எங்கிருந்தான் என்பதைக் காட்டுகிற காரணத்தால் 
        இதனை இடவேற்றுமையாகிய ஏழாம் வேற்றுமையில் அடக்கலாம் என்கிறார்.
சான்று:
'கண்ணனிடமிருந்து வாங்கினேன்' மற்றும் 'அங்கு', 'மேல்' போன்ற பெயர்ச்சொல்லுடன் நேரடியாகச் சேர்ந்து வருதலும் உண்டு.
சான்று:
'அங்கிருந்து வந்தான்’
அதுபோல ஒலி நிரவல் சாரியையுடனும் (Euphonic Clific) வரும்.
சான்று:
'வடக்கேயிருந்து வந்தது’
ஆறாம் வேற்றுமை உருபு 'அது' ஆகும்.
     
 ஆறா குவதே
      
 அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
      
 தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும்
      
 அன்ன கிளவிக் கிழமைத் ததுவே (தொல்.சொல். 79)
இதனைக் கிழமை உடைமை வேற்றுமை என்பர். இவ்வாறாம் வேற்றுமை உருபானது வினைச்சொல்லோடு தொடர்பு கொள்ளாமல் மற்றொரு பெயர்ச்சொல்லுடன் தொடர்பு கொள்கிறது. இதுவே இதனின் தனித்தன்மையாகும்.
'எள்ளது குப்பை'
இச்சான்றில் 'அது' எனும் உருபு அமைந்து 
 வருகிறது.
 
சான்று:
     'யான்', 'எனது' என்னும் செருக்கு அறுப்பான்
                 
 வானோர்க்கு
     உயர்ந்த உலகம் புகும்'     (திருக்குறள்.346)
அந்தக் காலகட்டத்தில் 'அது' என்னும் வேற்றுமை உருபோடு 'அ' என்ற வேற்றுமை உருபும் ஆறாம் வேற்றுமைக்குப் பயன்படுத்தப்பட்டது தெரிய வருகிறது.
சான்று:
'அ'
வெரிநத் தோல் (பரிபாடல்.21 : 5)
இவ்வாறாம் வேற்றுமை இன்னும் ஒரு உருபினையும் பெற்றிருந்தது. அது 'கு' ஆகும்.
    அதுவென் 
 வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்
     அதுவென் 
 உருபுகெடக் குகரம் வருமே
                 (தொல்.சொல். 
 94)
சான்று:
    நம்பிக்கு 
 மகன் (நம்பியது மகன்)
 
இடைக்காலத்தில் 'அது' என்ற உருபோடு 'ஆது', 'உடைய' என்ற இரு உருபுகள் பயன்பாட்டுக்கு வந்தன.
    ஆறன் 
 ஒருமைக்கு அதுவும் ஆதுவும்
     பன்மைக்கு அவ்வும் உருபாம்     (நன்னூல்.300)
சான்று:
    எனாதுகை         
 (நன்னூல் உரை.300)
 
தற்காலத்தில் ஆறாம் வேற்றுமை உருபுகளாக 'இன்' , 'உடைய', 'அது' என்னும் மூன்று வேற்றுமை உருபுகள் வழக்கிலிருந்து வருகின்றன.
சான்று:
     'கண்ணனின் 
 வீடு'
      'கண்ணனுடைய கால்'
      'கண்ணனது பெற்றோர்'
இவ்வேற்றுமையை 'உடைமை வேற்றுமை' (Possessive Case) என்றும் கருதுவர். சில சமயங்களில் உருபு ஏதும் ஏற்காது வருவதும் உண்டு.
சான்று:
    'அவன் 
 வீடு'
     'அரசன் மாளிகை'
     'சிவன் கோயில்'
ஏழாம் வேற்றுமை உருபு 'கண்' ஆகும். இது ஒரு பழைய வடிவம்.
     
 ஏழா குவதே
      கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
      வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
      அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே 
                               
 (தொல்.சொல். 81)
இவ்வேற்றுமைக்கு 'இடவேற்றுமை' என்ற பெயரும் உண்டு. ஏனெனில் இடப்பொருளை உணர்த்தப் பல்வேறு சொற்களை ஆரம்பத்தில் தோற்றுவித்து, அவற்றைப் பின்வரும் நூற்பாவில் தொகுத்து மொழிகின்றார் தொல்காப்பியர்.
     
 	கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல்
      
 	பின்சார் அயல்புடை தேவகை எனாஅ
      முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ
      
 	அன்ன பிறவும் அதன்பால் என்மனார்
      
 	     
 	     
 	     
 	     
 	    (தொல்.சொல். 82)
இவை அனைத்தும் வேற்றுமை உருபுகள் என்றழைக்கப்படுகின்றன. ஆனால் சேனாவரையர் இவற்றை உருபுகள் இல்லை என மொழிகிறார். சான்றாகக் கூற வேண்டுமாயின் சாரியை ஆனது பெயருக்கும் உருபிற்கும் இடையில் பெயரை அடுத்து வரும். ஆனால்,
    'ஊரகத்திருந்தான்' (ஊர்+அகம்+அத்து+இருந்தான்)
     'ஊர்ப்புறத்திருந்தான்' (ஊர்+புறம்+அத்து+இருந்தான்)
என்று  அத்துச் 
        சாரியை அகம், புறம் என்பனவற்றிற்குப்பின் வந்துள்ளது. எனவே அவைகள் உருபுகள் 
        இல்லை எனலாம். எனவே ஏழாம் வேற்றுமை பற்றி மேலே கூறப்பட்ட தொல்காப்பியச் சான்று 
        உருபின் பொருள்பட வரும் பிறசொற்களே என்று கூறுகிறார் சேனாவரையர் (தொல்.சேனாவரையர் 
        உரை. 82).
 
சான்று:
     
        பெண்ணை இவரும் ஆங்கண் 
        (நற்றிணை.38:9)
 
இடைக்காலத்தில் முன்பு சுட்டப்பட்டதுபோல் அதே உருபும் அதன் பொருளும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
சான்று:
ஊர்க்கண் இருந்தான் (நன்னூல் உரை.301)
     
 அறம் செயு மகன் தேவருள் வைக்கப்படுவான்
             
 (நன்னூல் உரை.301)
 
தற்காலத்தில் 'இல்' மற்றும் 'இடம்' என்ற இரு உருபுகளால் ஏழாம் வேற்றுமை பயன்பட்டு வருகின்றது.
சான்று:
    'குருவி 
 மரத்தில் இருந்தது'
     'ஒரு வாரத்தில் முடித்தேன்'
     'அவனிடம் அதைக்கொடு'
     'காக்கையிடம் போகாதே'
						
						