தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - D04122- உருபன் - உருபு

  • 2.3 உருபன் - உருபு

        இந்தப் பாடத்தில் உருபன், உருபு (Morpheme - Morph) என்னும் இரண்டு சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இவையிரண்டும் மொழியியலில் பயன்படுத்தப்படும் சொற்களாகும். தமிழ் இலக்கணத்தின்படி 'உருபு' எனும் சொல் வேற்றுமையோடு தொடர்புடையதாய் வேற்றுமைப் பொருளை வெளிப்படுத்துவாகும். எனவே இந்தப் பாடத்தில் அதனை வேற்றுமை உருபு என்று குறிப்பிடுவோம். 'உருபு' என்று மட்டும் வருவது மொழியியல் உருபு என்பதனைச் சுட்டுவதாகும்.

        ஒரு மொழியில் காணப்படும் சொற்கள் பொதுவாகப் பொருளைக் காட்டுவன. இவ்வாறு ஒரு மொழியில் காணப்படும் பொருளைக் காட்டும் சின்னஞ்சிறு கூறே 'உருபன்' எனப்படும். 'கண்' போன்ற சொற்கள் ஒரு உருபனைக் கொண்டவை. 'கண்கள்' போன்ற சொற்கள் இரு உருபன்களை உடையன.

        தமிழில் காணப்படும் -த்-, -ட்-, -ற்-, -இன்- ஆகியவை காலம் காட்டும் இடைநிலைகளாகும். இவற்றை ஒரு குழுவாகக் கருதி 'இறந்த கால உருபன்' என்றும் இந்த வேறுபட்ட வடிவங்களை உருபு என்றும் மொழியியலார் கூறுவர்.

    சான்று:

        கண்ணனைக் கண்டான் - கண்ணன் + ஐ
        உழுதான்     - உழு + த் + ஆன்
        விழுங்கினான்     - விழுங்கு + இன் + ஆன்.

    2.3.1 மாற்றுருபு

        ஒரு உருபன் பொருளை உணர்த்தும் நிலையில் தன்னை அடுத்து வரும் சொல்லுக்குத் தகுந்தாற்போல் தன் உருவத்தில் மாற்றம் அடையும். இவ்வாறு மாறுவது மாற்றுருபு (allomorph) ஆகும். செந்தாமரை, செவ்வானம், செம்மணல், செங்கமலம், செஞ்சட்டி, சேவடி போன்ற சொற்களில் செஞ்-, செவ்-, செம்-, செம்-, செங்-, செஞ்-, சே- ஆகியவை சிவப்பு என்ற ஒரே பொருளை உணர்த்தி வருகின்றன.     எனவே இவை மாற்றுருபுகளாகும்.

    2.3.2 சூனிய உருபு

        மொழிகளில் பல இலக்கணக் கூறுகள் பல்வேறு உருபுகளால் காட்டப்படுகின்றன என்பதை அறிவோம். ஒரு பொருளையே காட்டுகின்ற பல மாற்றுருபுகள் (allomorphs) உள்ளன. கால இடைநிலைகளான '-த்-, -ட்-, -இன்-' போன்றவைகள் இறந்தகாலம் காட்டுவதற்கான மாற்றுருபுகளாகும். அந்நிலையில் சில சொற்களில் எவ்வித மாற்றுருபுகளும் இன்றி ஒரே சொல் இரண்டு பொருளைக் காட்டுகின்ற நிலையைக் காணலாம். உதாரணமாக, ஆங்கிலத்தில் 'Sheep' என்ற சொல், சொற்றொடரில் இரண்டு விதமான பொருளைத் தருகின்றது. ஒன்று ஒருமை, மற்றொன்று பன்மை. அவ்வாறு வரும்போது எந்த விதமான உருபினையும் ஏற்காமல் பொருள் உணர்த்துவதால் இதனைச் 'சூனிய உருபு' (Zero Morph) எனலாம்.

        ஆங்கிலத்தைப் போன்று தமிழிலும் சூனிய உருபு வருவதைக் காணமுடிகிறது.

    சான்று:

        வாராய்

        இச்சொல் இருவிதமான பொருளை உணர்த்துகிறது. ஒன்று உடன்பாட்டுப் பொருள்; மற்றொன்று எதிர்மறைப் பொருள்.

        வாராய் - வா (உடன்பாடு)
        வாராய் - வாராதே (எதிர்மறை)

    எதிர்மறைப்பொருளில் வரும்போது, இச்சொல்லில் எதிர்மறை உருபு எதுவும் வரவில்லை. இதனையே சூனிய உருபு என்கிறோம்.

        வா(ர்) + + ஆய் = வாராய் (வாராதே).

    2.3.3 உருபு ஏற்கும் முறை

        வடமொழி முதலான மொழிகளில் வேற்றுமை உருபு ஏற்கும் முறைகள் (declensions) பல. அம்மொழிகளில் பெயர்ச்சொற்களின் ஈற்றெழுத்து முதலியவற்றின் மாறுதல்களுக்கு ஏற்ப, உருபுகள் இணைக்கப்படுவதால் முறைகள் பலவாயின. ஆனால் திராவிட மொழிகளில் பெயரீற்றிற்கு ஏற்ப வேற்றுமைகள் மாறுவதில்லை. எல்லா ஈறுகளுடனும் வேற்றுமை உருபு ஒரே தன்மையாகச் சேர்ந்து நிற்கும் ; வேறுபாடெல்லாம் இடையே புகும். தமிழ் மொழியில் பெயர்ச்சொற்கள் உருபேற்கும் முறை ஒன்றேயாகும். தமிழில் உருபு ஏற்பவை பெயர்ச்சொல் (Noun), தொழிற்பெயர் (verbal noun), வினையால் அணையும் பெயர், ஆக்கப்பெயர் (participial noun) போன்றவைகளாகும். இவை அனைத்தும் பெயர்ச்சொற்களே.

    சான்று:

        'ஆறு' - பெயர்ச்சொல், 'செய்தது' - தொழிற்பெயர்
        'செய்தவன்' - வினையாலணையும் பெயர்
        'நடப்பு' - ஆக்கப்பெயர்

    2.3.4 உருபு

        தமிழில் வேற்றுமை உருபுகள் ஒரு காலத்தில் சொற்பொருள் குறிப்பனவாகவே இருந்தன. பின்னரே தேவையைக் கருதி, தம் நிலையில் குன்றி இலக்கணப்பொருள் உணர்த்துவனவாகத் திரிந்தன. அவையே வேற்றுமை உருபுகள். 'கொள்' என்னும் வினைச்சொல் 'கொண்டு' என்ற வடிவில் வினையெச்சம் ஆயிற்று. இதனோடு 'வா' என்னும் வினைச்சொல் சேர்ந்து 'கொண்டு வா' என்னும் புதிய வினைச்சொல் உருவாயிற்று (கொண்டு வா - கொண்டு + வா). முன்பு 'கொண்டு' எனும் இச்சொல் சொற்பொருளை உணர்த்தியது. பின்பு இந்தக் 'கொண்டு' வேற்றுமை உருபாக மாறி, இலக்கணப்பொருளைத் தரலாயிற்று.

    சான்று:

        ''கல்கொண்டு எறிந்தான்' என்பது 'கல்லால் எறிந்தான்' என்பதற்கு இணையானதாக அமைந்தது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 13:23:18(இந்திய நேரம்)