Primary tabs
-
1.1 திறனாய்வு
கணினி-வலைப்பின்னல்
நம்மைச் சுற்றி, புத்தகங்களாக அச்சிலும் மற்றும் கணினி-வலைப்பின்னலிலும் இலக்கியங்கள் என்ற பெயரில் ஏராளமாகவும் தாராளமாகவும் நிறைய எழுத்து வடிவங்கள் கிடைக்கின்றன. நாம், எல்லாவற்றையும் படிக்க முடியுமா? முடியாது. படிப்பனவற்றிலும் எல்லாமே நமக்குச் சுவையாக இருக்கிறதா? இல்லை. சுவையாக இருப்பவையும் தொடர்ந்து சலிக்காமல் இருக்கின்றவா? இல்லை. சுவையாகவும் சலிப்பில்லாமலும் இருந்தால் எல்லாம் நல்லனவாக, மனத்தையும் நம் அனுபவத்தையும் வளர்ப்பனவாக இருக்கின்றனவா? இல்லை. அப்படியானால் சுவையானவற்றையும் அதேபோது நல்லனவற்றையும் பயனுள்ளவற்றையும் நாம் எப்படித் தெரிந்து கொள்வது? எப்படித் தேர்ந்தெடுப்பது?
இங்கே தான் திறனாய்வு வருகிறது.
திறனாய்வு இதற்குத்தான் நமக்கு முதலில் தேவைப்படுகிறது.1.1.1 திறனாய்வும் இலக்கியமும்
இலக்கியம் என்பது ஒரு கலை வடிவம். படைப்பு அல்லது ஆக்கம் என்ற பண்பை உடையது. திறனாய்வு அத்தகைய கலை வடிவத்தின் மீதான ஒரு அறிவியல் விசாரணை ஆகும். இலக்கியம், ஆக்கப் படுகிறபோதே திறனாய்வும் தோன்றிவிடுகிறது. இதனை எப்படி எழுத வேண்டும்? பிறர் எப்படி எழுதியிருக்கிறார்கள்? நாம் ஏன் இதனை, இப்படி எழுதியிருக்கிறோம்? என்று இலக்கியத்தை ஆக்குகிற படைப்பாளி நினைக்கின்ற போதே திறனாய்வுக்குரிய மனப்பான்மையும் தோன்றிவிடுகிறது. இலக்கியத்தின் பல்வேறு பகுதிகளையும் பண்புகளையும் பற்றித் தெரியாமல், இலக்கியம் எழுதுபவன் இல்லை; அதுபோல அவற்றைத் தெரிந்து கொள்ளாமல் திறனாய்வு செய்பவனும் இல்லை.
எனவே, இலக்கியமும் திறனாய்வும் ஒன்றையொன்று சார்ந்தும் இணைந்தும் இருக்கின்றன.1.1.2 திறனாய்வு என்ற கலைச்சொல்
இலக்கியத் திறனாய்வு என்ற சொல் இலக்கியத்தின் திறனை ஆராய்வது என்று விரிவு படுகிறது. இதன் எடுகோள் அல்லது அடிப்படைக் கருத்து என்ன? இலக்கியத்திற்குத் ‘திறன்’ இருக்கிறது. அதனைக் கண்டறிய வேண்டும் என்று சொல்லுகிறது. இலக்கியத்தின் திறன் என்பது, அதன் வடிவழகில், மொழி வளத்தில், உத்திகளின் உயர்வில், சொல்லுகிற செய்திகளின் மேன்மையில், அதன் நோக்கத்தில் இருக்கிறது என்று பொருள். அதனைக் கண்டறிந்து சொல்வது, இலக்கியத் திறனாய்வு என்பதற்குப் பொருள் ஆகும். இலக்கியத்தின் திறனை மேலோட்டமாகச் சொல்லக்கூடாது. ஆழமாகப் பார்த்திட (‘ஆய்வு’) வேண்டும் என்றும் இச்சொல் நமக்கு உணர்த்துகிறது.
திறனாய்வுக்கு இணையான ஆங்கிலச் சொல், ‘criticism’ என்பது. இதனை ஒரு கலைச் சொல்லாக முதலில் பயன் படுத்தியவர் ஜான் டிரைடன் (John Dryden) (18 ஆம் நூற்றாண்டு) எனும் ஆங்கிலக் கவிஞர் ஆவார். அதற்கு முன்னால் (1605-இல்), Critic என்ற சொல்லைப் பயன்படுத்தியவர், சிந்தனையாளர் பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon) ஆவார்.
தமிழில் criticism என்ற சொல்லுக்கு இணையாக விமர்சனம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர், (1944) பேராசிரியர் ஆ.முத்து சிவன் ஆவார். ‘விமரிசை’ என்ற வடமொழி வழக்கிலிருந்து வந்த இச்சொல்லுக்குப், பாராட்டிச் சொல்லுதல், விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லுதல் என்று பொருள்.
தமிழில், இச்சொல்லுக்கு இணையாகத் ‘திறனாய்வு’ என்ற சொல்லை வழக்கத்தில் விட்டவர், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் ஆவார் (1953).
இன்று, கல்வியியலாளர்கள் இடையில் திறனாய்வு என்ற சொல் பெருவழக்காகவும், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் இடையில் விமர்சனம் என்ற சொல் பெருவழக்காகவும் பயன்பட்டு வருகிறது.
-