Primary tabs
-
1.3 இலக்கியமும் திறனாய்வும்
இலக்கியத்திற்குப் பல விளக்கங்கள் உள்ளன. அவை திறனாய்வுக்கு மிகவும் தேவை. இலக்கியப் படைப்பாளனுக்கும், இலக்கியம் படிப்பவனுக்கும் சரியான முறையில் அறிமுகம் தேவை. சில நேரங்களில் இலக்கியத்தைப் படிப்பவனுக்குச் சில சங்கடங்கள் ஏற்படுகின்றன. அவற்றைப் போக்குவதற்கும் திறனாய்வாளனின் சேவை தேவைப்படுகிறது.
1.3.1 இலக்கியம்
திறனாய்வுக்கு அடித்தளம் இலக்கியம்தான். எனவே, அந்த இலக்கியத்தைப் பற்றி நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இலக்கியத்திற்கு ஒரு விளக்கம், அல்ல - பல்வேறு விளக்கங்கள் இருக்கின்றன. இலக்கியம், ஒரு கலை. இலக்கியம், மொழியாலான ஒரு கலை. இலக்கியம், அழகு உடையது. அழகான முறையான, சீர்மை கொண்ட வடிவமைப்புக் கொண்டது. இலக்கியம், பொருள்களை மறைத்து வைக்கிறது; ஆழமாக வைக்கிறது, இலக்கியம் வாழ்க்கையைச் சொல்லுகிறது; வாழ்க்கையை விமரிசிக்கிறது; வாழ்க்கையை உணர்வுத் தளமாக ஆக்குகிறது. இலக்கியம் காலத்தின் குரல். இலக்கியம் ஒரு காலத்தில் காலூன்றி இன்னொரு காலத்தில் கைபரப்புகிறது. இலக்கியம், அதனைப்படைப்பவனை இனங்காட்டுகிறது. இலக்கியம், மனத்தைச் செழுமைப் படுத்துகிறது. மனத்திற்கு ‘இதம்’ தருகிறது. இலக்கியம் இனிமையானது. ஒரு மொழிக்குப் பெருமை அல்லது கவுரவம் தருகிறது. இவ்வாறு இலக்கியத்திற்குக் கூறப்படும் வரையறைகள் மிகப்பல.
கம்பர், கவியின் பண்பு பற்றிக் கூறுவார்:
சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி . . . . . . .
(ஆரணியகாண்டம், சூர்ப்பணகைப் படலம்-1)ஆழம், தெளிவு, குளுமை, ஒழுக்கம் என்ற பண்புகளைக் குறிப்பிட்டு வற்றாத ஆற்றுக்கு உவமையாகக் கவிதையைக் கூறுகிறார், கம்பர்.
கவிதைக்கும் இலக்கியத்திற்கும் இப்படி எண்ணற்ற வரையறைகள் உண்டென்றாலும், எந்த வரையறையும் இலக்கியத்தை முழுமையாகக் காட்டுவதில்லை; காட்ட இயலாது என்று ரெனே வெல்லக் என்ற அறிஞர் கூறுகின்றார்.
1.3.2 இலக்கியமும் படிப்பவரும்
இலக்கியம் என்பது எழுதப்படுவது. எழுதுவது என்பது, பிறர் படிப்பதற்காக, அல்லது கேட்டு அறிந்து கொள்வதற்காக. எனவே இலக்கியம் என்பது உருப் பெற்றவுடன் படிப்பவர் (Reader) பக்கம் நோக்கி நகர்கிறது. இலக்கியமும் படிப்பவரும், முரண்பாடுகளின்றி, தமக்குள் ஓரளவாவது ஒத்துவருகிற சமதளத்தில் நின்றால்தான், எழுதுவதால் பயன் கிடைக்கும்; படிப்பதனால் பயன் கிடைக்கும். படிப்பவர் பல திறத்தவர். ஒருவருக்குப் பல இலக்கியங்கள் படித்துப் பழக்கம் இருக்கலாம்; இன்னொருவருக்கு அத்தகைய பழக்கமே இல்லாமலிருக்கலாம். ஒருவருக்குப் பலதுறைகளில் அறிவும் பயிற்சியும் இருக்கலாம்; இன்னொருவருக்கு அது இல்லாமலிருக்கலாம். படிப்பவர், தத்தம் தேவைக்கும் பின்னணிக்கும், பயிற்சிக்கும் ஏற்பவே இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்கிறார்; இலக்கியத்தைப் புரிந்து கொள்கிறார். எனவே இலக்கியமும் அதனைப் படிப்பவரும் சரியானமுறையில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ள வேண்டியிருக்கிறது. படைப்பாளியும் படிப்பாளியும் வெவ்வேறு திசைகளில் முகம் திருப்பிக் கொண்டிருக்க முடியாது.
• படிப்பவர் சிக்கல்கள்
ஏற்கெனவே சொன்னது போல, படிப்பாளிக்கு எல்லைக்கோடுகள் இருக்கின்றன. அவை, இலக்கியத்திற்கும் அவருக்கும் குறுக்கே நிற்கின்றன. படிப்பவரின் சங்கடங்கள் பல. அவற்றுள் ஒன்று கால வேறுபாடு. இலக்கியம் ஒரு காலத்தில் எழுதப்பட்டிருக்கும்; இரண்டு மூன்று தலைமுறைகள் தாண்டி வருகிற படிப்பாளிக்கு, அதனைப் புரிந்து கொள்வதில் சங்கடம் இருக்கும். குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகள் வேறுபட்ட கோணங்களில் இருக்கும்; அவற்றில் பழக்கமில்லாத படிப்பாளிக்கு அவற்றைப் புரிந்து கொள்ளுவது சிரமமாயிருக்கும். படிப்பாளி முதலில் ஒரு சுவைஞன் (ரசிகன்) ; குறிப்பிட்ட இலக்கியத்தில் அவனுக்குரிய சுவை கிடைக்காமல் போகுமானால், அவன் சிரமப் படுவான். இம் மாதிரியான சூழ்நிலைகளில் திறனாய்வாளன் உள்ளே நுழைகிறான்; அவனுடைய சேவை, படிப்பாளிக்குத் தேவையாக ஆகிவிடுகிறது.
1.3.3 திறனாய்வு
பாரதியார்திறனாய்வுக்கு, இலக்கியம்தான் ‘களம்’ ஆகலின், அந்த இலக்கியம் பற்றி நீங்கள் என்ன - எப்படிப் - புரிந்து கொள்கிறீர்கேளா, அதனடிப்படையில்தான் உங்கள் திறனாய்வும் அமைகிறது. குறிப்பிட்ட இலக்கியத்தின் குறிப்பிட்ட விளக்கம், அந்த இலக்கியம் மீதான திறனாய்வுக்கு அடிப்படையான கருதுகோளாக அல்லது நோக்கமாக அமைகிறது. உதாரணமாக ‘இலக்கியம், காலத்தின் குரல்’ என்ற விளக்கத்தை முன்வைப்போமானால், பாரதியாரைப் பற்றிய திறனாய்வில், பாரதியாரின் காலத்தைப் பற்றி நாம் பேசவேண்டிவரும். பாரதியாரின் காலத்துக்குச் சற்று முன்னால் இருந்த இலக்கியத்தின் தன்மைகளையும் சமூகச் சூழ்நிலைகளையும் சொல்லிவிட்டுப் பாரதியாரின் சமகாலத்திலிருந்த அரசியல் விடுதலை இயக்கம், அன்றைய சமூகத்தின் பொதுவான நிலைப்பாடுகள் முதலியவற்றைப் பேச வேண்டும். அவற்றின் பின்னணியில், பாரதியார் அந்தக் காலத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றார் என்று வேண்டும். எனவே இலக்கியத்தைப் பற்றிய குறிப்பிட்ட மதிப்பீடு, அதனுடைய திறனாய்வுக்கு வாயிலாக அமைகின்றது.
-