Primary tabs
-
1.4 முக்கூட்டு உறவு
இலக்கியம் என்ற பெரிய தளத்தில் படைப்பாளி, வாசகன், திறனாய்வாளன் மூவரும் இணைந்து செயல் பட வேண்டும்.
1.4.1 படைப்பாளி, வாசகன், திறனாய்வாளன்
நாம் ஏற்கெனவே சொன்னது போன்று - இலக்கியம், எண்ணிறந்த வரையறைகளையுடையது; பல்வேறு பண்புகளை உடையது. வாசகன் என்பவனுக்குப் பல எல்லைக்கோடுகள் இருக்கின்றன; அதேபோது அவனுடைய தேவைகள் பல திறத்தனவாக இருக்கின்றன. திறனாய்வின் வேலைகள், இலக்கியத்திலிருந்து தொடங்குகின்றன; வாசகனை நோக்கிச் செல்லுகின்றன. இந்த மூன்றின் பரஸ்பரத் தேவைகளைப் பின்வருகிற வரைபடம் மூலம் அறியலாம்.
• திறனாய்வாளர் - ஒரு முகவர், ஒரு துணைவர்
இந்த முக்கூட்டுறவில், படைப்பாளிதான் மையத்திலிருக்கிறார். திறனாய்வாளர், படைப்புக்கும் படிப்புக்கும் இடைப்பட்ட இடைவெளிகளை நீக்குகிறார். திருக்குறளுக்குப் பரிமேலழகர், பரிதியார், காலிங்கர் முதல் மு.வரதராசனார் வரை வந்த உரையாசிரியர்களை நினைத்துப் பாருங்கள். திருக்குறள் தோன்றிய காலம் இன்று 18 நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தென்றால், இந்தக் கால இடைவெளியில் திருக்குறளைப் படிக்க/ வாசிக்க வந்த படிப்பாளிகளின் சிரமங்களை இந்த உரைகள் போக்கியிருக்கின்றன. காலம் என்ற இடைவெளியைக் குறைத்திருக்கின்றன.
திருவள்ளுவர்படிக்கிறவர்களுக்கு அல்லது ஓரளவாவது படிப்பதிலே ஆர்வம் உள்ளவர்களுக்கு, இலக்கியங்களைத் தேர்ந்தெடுக்கத் திறனாய்வு உதவுகிறது. அதேபோது அவர்களை, இலக்கியத்தின் பக்கமாய் - நல்ல இலக்கியத்தின் பக்கமாய் அழைத்துக் கொண்டு போகிறது. இலக்கியத்திறன்களைப் படிக்கிற வாசகர்களுக்குச் சொல்லுகின்ற திறனாய்வு, அந்த வாசகர்களின் திறனையும் வளர்க்கிறது; அவர்களின் அறிவையும், ரசனையையும் விரிவடையச் செய்கிறது. வாசிப்பின் தரம் உயர்வடையச் செய்கிறது. எனவே, படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையில் பாலமாகி இருக்கின்ற திறனாய்வாளன், இருவருக்கும் உற்ற தோழனாய் இருக்கின்றான்.
-