Primary tabs
-
4.1 தோற்றச் சூழல்கள்
இன்றைய திறனாய்வு தோன்றியதற்குரிய சூழ்நிலைகள் என்ன? கல்வி பரவலாக்கப்பட்டு வளருகிறது. அச்சு முதலிய அறிவியல் சாதனங்கள் பெருகுகின்றன. சங்க இலக்கியம், சிலம்பு, குறள், கம்பராமாயணம் முதலிய பழைய இலக்கியங்கள், ஏட்டுச் சுவடிகள் என்ற நிலையிலிருந்து, பலருக்கும் கிடைக்குமாறு பதிப்பிக்கப்படுகின்றன. இது 19-ஆம் நூற்றாண்டில் பரவலாக நிகழ்ந்தது. இதனால் அவ்விலக்கியங்கள் பற்றிய அறிவும் உணர்வும் புத்துணர்ச்சி பெற்று எழுகின்றன. இது ஒன்று; அடுத்து-தம்முடைய மரபு பற்றியும் வரலாறு பற்றியும் சமூக-பண்பாட்டு நிலைகள் பற்றியும் இலக்கியச் சாதனைகள் பற்றியும் தேடிப்பார்க்கவும் ஆராயவும் எடுத்துச் சொல்லவும் வேண்டும் எனும் ஆர்வம் அறிஞர்கள் மத்தியில் தோன்றுகின்றது. அடுத்து - மேலை நாட்டார்தம் நூல்களின் தாக்கம் உரைநடையின் பரவலான வீச்சு; சொல்லுபவற்றை அறிவியல் ரீதியாக அல்லது அறிவார்ந்து சொல்லவேண்டும் என்ற ஒருநிலை ; அடுத்து, முக்கியமாக, பத்திரிகைகள் தோன்றிப் புதிது புதிதாக எழுதுவதற்கு இடம் தந்தமை இவையெல்லாம் இலக்கியத் திறனாய்வைத் தூண்டி வளர்த்தன என்று சொல்ல வேண்டும்.